Published:Updated:

வி.ஏ.ஓ.க்களுக்கு கிடுக்குப்பிடி!

விகடன் விமர்சனக்குழு
வி.ஏ.ஓ.க்களுக்கு கிடுக்குப்பிடி!
வி.ஏ.ஓ.க்களுக்கு கிடுக்குப்பிடி!
வி.ஏ.ஓ.க்களுக்கு கிடுக்குப்பிடி!

கிராமங்களின் முதுகெலும்பாக திகழ்கின்றனர் கிராம நிர்வாக அலுவலர்கள் (வி.ஏ.ஓ). தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) மூலம் இந்த பதவியில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 16,564 வருவாய் கிராமங்களில் வி.ஏ.ஓக்கள் பணியாற்றுகின்றனர்.

கிராம கணக்குகளைப் பராமரித்தல், சாதி, வருவாய், இருப்பிட, வாரிசு சான்றிதழ்கள் வழங்க பரிந்துரை செய்தல், பட்டா, அடங்கல் சான்றுகள் மற்றும் முதியோர், அரசின் உதவி தொகை வழங்க தாசில்தார்களுக்கு பரிந்துரை செய்யும் பணிகள், சட்ட, ஒழுங்கு பிரச்னைகள் குறித்து அரசுக்கு தெரிவித்தல், நிலவரி, அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்குச் சேர வேண்டிய தொகைகளை வசூலித்தல், தீ விபத்து, வெள்ளம், புயல் போன்ற இயற்கை இடர்பாடுகள் குறித்து அரசு அலுவலர்களுக்கு அறிக்கை அனுப்புதல், கொலை, தற்கொலை போன்றவற்றை குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தல், தொற்று நோய்கள் குறித்த தகவல் தெரிவித்தல், புதையல் குறித்த தகவல் தெரிவித்தல் உள்ளிட்ட பணிகளை வி.ஏ.ஓ.க்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

வருவாய் துறையின் கீழ் செயல்படும் வி.ஓ.ஏ.க்களில் பெரும்பாலானவர்கள் சான்றிதழ்களை வழங்க லஞ்சம் கேட்கும்போது, லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் சிக்குவது வாடிக்கையாக உள்ளது. இந்த துறையில் நேர்மையாக பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை சொற்ப அளவிலேயே உள்ளது. வருவாயை அள்ளிக் கொடுக்கும் பதவியாக கருதப்படும் வி.ஏ.ஓ பணியில் சேர இளைஞர்கள் மத்தியில் அதிக ஆர்வம் இருந்து வருகிறது. இதற்கு குறைந்தபட்ச கல்வி தகுதி 10ஆம் வகுப்பு என்பதால், டி.என்.பி.எஸ்.சி நடத்தும் வி.ஏ.ஓ. தேர்வுகளில் லட்சக்கணக்கானோர் பங்கேற்கின்றனர்.

இப்போது வி.ஏ.ஓ. பணிகளில் சேரும் பலர் அவர்கள் பணியாற்றும் வருவாய் கிராமங்களில் குடியிருப்பதில்லை. 100 அல்லது 50 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து பணிக்கு வருவதாக சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது. இத்தகைய வி.ஏ.ஓ.க்கள் சரிவர பணியாற்றுவதில்லை என்றும் புகார் கூறப்பட்டது. இதனால் இந்த பிரச்னையை சட்ட பஞ்சாயத்து இயக்கம் கையில் எடுத்தது. இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஒரு உத்தரவையையும் பெற்றுள்ளது.

வி.ஏ.ஓ.க்களுக்கு கிடுக்குப்பிடி!

இது குறித்து சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் மாநில செயலாளர் ஜெய் கணேஷிடம் கூறுகையில், "வி.ஏ.ஓ.க்களில் பெரும்பாலானவர்கள் தங்களது பணிக்கு சரிவர வருவதில்லை என்று தகவல் கிடைத்தது. இது தொடர்பாக எங்கள் இயக்கத்தின் சார்பில் 'கிராம புரட்சி' என்று ஒரு சர்வே நடத்தினோம். இந்த சர்வேயில் பலர் தாங்கள் பணியாற்றும் கிராமங்களில் குடியிருப்பதில்லை என்ற தகவலும் கிடைத்தது. இதனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2011ல் வழக்கு தொடர்ந்தோம்.

நீதிபதிகள் இக்பால், சிவஞானம் ஆகியோர் அடங்கி பெஞ்ச், இந்த வழக்கை விசாரித்து, ஒவ்வொரு வி.ஏ.ஓ.க்களும் அவர்கள் பணியாற்றும் கிராமங்களிலேயே குடியிருக்க வேண்டும் என்று 2011 ஜூன் 16ஆம் தேதி உத்தரவிட்டனர். இந்த உத்தரவு தமிழக அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இதுவரை இந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை. இதை அரசின் கவனத்துக்கு மீண்டும் கொண்டு செல்ல இன்று ஒவ்வொரு கலெக்டர் அலுவலகங்களிலும் மனு கொடுத்துள்ளோம். இந்த மனுவிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கிடையில் எங்களது சமூக வலைத்தளத்துக்கு சில வி.ஏ.ஓ.க்கள் தரப்பிலிருந்து எதிர்மறையான விமர்சனங்கள் வருகின்றன. அதையெல்லாம் நாங்கள் கண்டுக்கொள்வதில்லை. அரசின் நலத்திட்டங்கள், மக்களுக்கு முழுமையான சேவை கிடைத்திட வி.ஏ.ஓ.க்கள் அவர்கள் பணியாற்றும் இடங்களிலேயே குடியிருக்க வேண்டும். அதுவரை எங்களது போராட்டம் தொடரும்" என்றார்.

இது குறித்து தமிழக கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில செயலாளர் மெய்யப்பன் கூறுகையில், "வி.ஏ.ஓ. பணிக்கான நியமன உத்தரவிலேயே வேலைக்கு சேரும் வி.ஏ.ஓ.க்கள் சம்பந்தப்பட்ட கிராமங்களில் தங்கியிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான வாய்ப்பு, வசதிகள் அந்தந்த கிராமங்களில் இருப்பதில்லை. ஆண்டுந்தோறும் வி.ஏ.ஓ தேர்வு நடத்தப்பட்டு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டாலும் பணிக்கு சேர்ந்த சில மாதங்களிலேயே அவர்கள் வேறுப்பணிக்கு சென்று விடுகின்றனர்.

மேலும், வி.ஏ.ஒ பணிகளை பொறுத்தவரைக்கும் பதவி உயர்வு என்பதில்லை. இதுவும் அந்த பணியை பலர் தொடர்வதில்லை. இதனால் காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்ப முடிவதில்லை. இதன்காரணமாக சில தாலுகாக்களில் ஒரே வி.ஏ.ஓ இரண்டு அல்லது மூன்று கிராம பணிகளை மேற்கொள்ள வேண்டியதுள்ளது. அப்படிப்பட்டவர்களால் எப்படி ஒரே கிராமத்தில் குடியிருக்க முடியும்.

இப்போதுள்ள கிராம நிர்வாக அலுவலகங்களில் கரண்ட், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லை. அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து தரக்கோரி பல வருடங்களாக போராடி வருகிறோம். வி.ஏ.ஓ.க்கள் அந்தந்த கிராமங்களில் குடியிருக்க வேண்டும் என்றால் அரசு தரப்பில் அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதுவரை இதற்கான சாத்திய கூறுகள் இல்லை" என்றார்.

-எஸ்.மகேஷ்