திருமணம் விகடன்
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்
தலையங்கம்
தலையங்கம்
சீ, இந்தப் பெரிய மனிதர்கள்!
 
தலையங்கம்

ந்தச் செய்தியைப் படித்ததில் இருந்து தலையே மின்விசிறி மாதிரி சுற்றுகிறது. பஞ்சாபில் இருக்கும் ஒரு மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்க இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றபோது, இந்திய மருத்துவ கவுன்சில் தலைவரான கேதான் தேசாய், சி.பி.ஐ. போலீஸாரிடம் சிக்கியிருக்கிறார். சோதனை நடத்தியதில் அவரிடம் இருந்து கோடி கோடியாக ரொக்கமும் கிலோ கிலோவாகத் தங்கமும் சிக்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. முதல்கட்டச் சோதனையில் மட்டுமே இவ்வளவு!

ஒரே நாளில் ஒருவரால் இவ்வளவு பெரிய தொகையை லஞ்சமாகக் குவித்திருக்க முடியாது. அதேபோல, ஒரே ஒரு நபர் மாத்திரம் இதில் சம்பந்தப்பட்டு இருக்கச் சாத்தியம் இல்லை. முளையிலேயே கிள்ளியெறிய வேண்டிய நச்சுச் செடி, ஒரு விஷ விருட்சமாக எல்லாத் திசைகளிலும் கிளைகளையும் விழுதுகளையும் பரப்பி வளரும் வரை அதை வேடிக்கை பார்த்தவர்களும் இந்தக் குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள்தான்.

லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டாலும், இவரை இந்திய அரசால் அந்தப் பதவியில் இருந்து இப்போதுகூட நீக்க முடிய வில்லை. சரி, இந்த மனிதர் தறிகெட்டு லஞ்ச லாவண்யப் பேய்களோடு கைகோத்து ஆடியதை இந்திய மருத்துவ கவுன்சிலில் இருக்கும் மத்திய அரசின் பிரதிநிதிகள் ஏன் இவ்வளவு நாள் கண்டுகொள்ளாமல் கண் மூடி இருந்தார்களாம்?

நிம்மதி தேடி காவியிடம் போனாலும், மகிழ்ச்சியை நாடி விளையாட்டு பார்க்கப் போனாலும், உயிர் காக்க மருந்து வாங்கப் போனாலும் ஆங்காங்கே தீர்வு தர வேண்டியவர்களே தீராத தலைவலிகளாக மாறிப்போயிருக்கும் காரணம் என்ன?

இந்த தேசத்தைப் பிடித்திருக்கும் ஊழல் புற்றுநோய்க்கு பெரிய மனிதர்களே அலங்காரம் செய்து அழகு பார்க்கும் கொடுமை எங்கே போய் முடியும்?!

 
தலையங்கம்
தலையங்கம்