திருமணம் விகடன்
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

''கருணாநிதி - ஜெயலலிதா மறைமுக ஒப்பந்தம்!''

''கருணாநிதி - ஜெயலலிதா மறைமுக ஒப்பந்தம்!''

ப.திருமாவேலன், படங்கள்: கே.ராஜசேகரன்
''கருணாநிதி -  ஜெயலலிதா மறைமுக ஒப்பந்தம்!''
''கருணாநிதி -  ஜெயலலிதா மறைமுக ஒப்பந்தம்!''
''கருணாநிதி - ஜெயலலிதா மறைமுக ஒப்பந்தம்!''
விஜயகாந்த் 'திடுக்' பேட்டி!
''கருணாநிதி -  ஜெயலலிதா மறைமுக ஒப்பந்தம்!''

'கேப்டன் டி.வி.' பார்த்துக்கொண்டு இருந் தார் கேப்டன்!

''எங்களுக்கு ஒரு கொடி கொடுங்கன்னு கேட்டாங்க ரசிகர்கள். கொடுத்தேன். அவங்களே நமக்கு ஒரு கட்சி வேணும்னு கேட்டாங்க. ஆரம்பிச்சேன். இன்று படைத் தளபதிகளா நிக்குறாங்க. நமக்கு ஒரு சேனல் வேணும்னு சொல்லிட்டே இருந்தாங்க. கேப்டன் டி.வி. ஆரம்பிச்சாச்சு'' - நம்பிக்கை விட்டமின்கள் கண்களில் மின்ன, பேசத் தொடங்கியவரை, 'ஆனால்...' போட்டு பேட்டிக்கு இழுத்தேன்!

''கருணாநிதி -  ஜெயலலிதா மறைமுக ஒப்பந்தம்!''

''''ஆனால், பென்னாகரத்தில் நீங்கள் வாங்கிய வாக்குகளைப் பார்த்தால் சொல்லிக்கொள்வது மாதிரி இல்லையே?''

''பென்னாகரத்துல டெபாசிட் வாங்கலியேன்னு நேரடியாவே கேளுங்களேன். அ.தி.மு.க-வுக்கும்தான் டெபாசிட் போச்சு. இதைச் சொல்லிச் சிரிக்கிற தி.மு.க.வும், கடந்த தேர்தலில் இதே பென்னாகரம் தொகுதியில் டெபாசிட் போன கட்சிதான். சென்னையில் இருந்து பென்னாகரத்துக்கு நான் கார்ல போன டீசல் செலவு தவிர, எங்க கட்சிக்கு எந்தச் செலவும் இல்லை. ஓட்டுக்குப் பணம் கொடுக்கலை. வீடு வீடா பட்டுவாடா பண்ணலை. ஆனா, ஜெயிச்ச தி.மு.க. இழந்த பணம் எவ்வளவு? கருணாநிதியின் மனசாட்சிக்குத்தான் தெரியும். இத்தனை கோடிகள் செலவு பண்ணியும் என்ன பெருசா ஓட்டு வாங்கிட்டாங்க? கொட்டின பணத்துக்கு மொத்த ஓட்டும் வாங்கியிருக்கணும்ல. வாங்க முடியலை. அவங்க மட்டுமில்லை; மத்த கட்சிகளும் செலவழிச்சதுக்குத் தகுந்த மாதிரி ஓட்டு வாங்க முடியலை. என்னைப் பொறுத்தவரையில் பென்னாகரத்தில் ஜனநாயக முறைப்படி தேர்தலைச் சந்திச்ச நாங்கதான் உண்மையான வெற்றியை வாங்கியிருக்கோம்.

தி.மு.க. ஜெயிச்சது அத்தனையும் இடைத் தேர்தல்கள்தான். ஆட்சி இருக்கு, அதிகாரம் இருக்கு, அராஜகம் பண்றதுக்கு ஆட்கள் இருக்காங்க. அள்ளி வீசக் கோடி கோடியாப் பணம் இருக்கு. அதனால், இடைத் தேர்தல் வெற்றிகள். இருக்கட்டும்... இனி வரும்ல ஒண்ணு... பொதுத் தேர்தல்னு... அப்போ இருக்கு கச்சேரி!''

''தேர்தலில் தோல்விகள் தொடர்வது உங்க ளுக்கு சோர்வைத் தரவில்லையா?''

''நான் கட்சி ஆரம்பிச்சு அஞ்சு வருஷம்தான் ஆச்சு. அதுக்குள்ள 11 இடைத் தேர்தல்களைச் சந்திச்சிருக்கேன். அத்த னைத் தேர்தல்களிலும் எனக்கான வாக்கு சதவிகிதத்தைத் தக்கவெச்சிருக்கேன். புரட்சித் தலைவருக்கே அஞ்சு வருஷம் கழிச்சுத்தான் வெற்றி கிடைச்சது!''

''இந்த ஐந்தாண்டு கால அரசியல் வாழ்க்கை உங்களுக்குக் கற்றுக்கொடுத்த பாடம் என்ன?''

''ஒண்ணே ஒண்ணுதான்... கருணாநிதி மாதிரியான ஒரு மோசமான அரசியல்வாதி இந்த நாட்டில் இருக்கக் கூடாது சார். ஜனநாயகம்னு வாய்ல பேசுறது. ஆனா, சர்வாதிகாரமா நடக்கிறது. தமிழனுக்காக உயிரை விடுவேன்னு கர்ஜிக்கிறது. ஆனா, தமிழினத்தையே ஒட்டுமொத்தமாக் கொல்லும்போது கதை, வசனம் பேசிக்கிட்டு வேடிக்கை பார்க்கிறது. 'கொள்கைங்கிறது வேட்டி மாதிரி, பதவிங்கிறது துண்டு மாதிரி'ன்னு பசப்பு வார்த்தையைச் சொல்றது. ஆனா, மானம், மரியாதையை இழந்தாலும் பதவியில் ஒட்டிக்கிட்டே இருக்க எந்த எல்லைக்கும் போறது. கட்சிதான் என் குடும்பம்னு சொல்றது. ஆனா, கட்சியையே தன்னோட குடும்பச் சொத்தா மாத்துறது. இவ்வளவு லாகவமா ஏமாத்துற ஓர் அரசியல்வாதியை உலகத்தில் எந்த நாடும் பார்த்திருக்காது. இந்த அஞ்சு வருஷத்துல அவரோட எல்லா முகத்தையும் நான் தெரிஞ்சுக்கிட்டேன். இன் னொரு முறை கருணாநிதி கையில இந்த நாடு சிக்கிடக் கூடாதுங்க!''

''கருணாநிதி -  ஜெயலலிதா மறைமுக ஒப்பந்தம்!''

''அழகிரியா - ஸ்டாலினா என்ற போட்டி தி.மு.க-வில் ஆரம்பித்திருக்கிறது. இவர்களில் யார் பெஸ்ட்?''

''ரெண்டு பேருமே அட்டர் வேஸ்ட்!

'தாயைப்போல பிள்ளை... நூலைப்போல சேலை'ன்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க. கருணாநிதியைப் போலவே இவங்க ரெண்டு பேராலும் தி.மு.க-வுக்கும் நன்மை இல்லை; இந்த நாட்டுக்கும் நன்மை இல்லை. இன்னிக்கு நான் சொல்றதைப் பார்த்துக் கோபப்படுறவங்க, 'அன்னிக்கே விஜயகாந்த் சொன்னான்'னு கொஞ்ச நாட்களிலேயே நிச்சயம் ஞாபகப்படுத்திப் பார்ப்பாங்க!''

''தி.மு.க. மீது நீங்கள் கோபத்தை உமிழ்கிறீர்கள். ஆனால், தமிழ்நாட்டில் எதிர்க் கட்சிகள் என்று யாராவது இருக்கிறார்களா என்ன?''

''நான் ஒருத்தன் மட்டும் கத்தினாப் போதுமா? மற்ற கட்சிகள் என்ன பண்ணுது? கருணாநிதிக்கு எதிரா புரட்சித் தலைவர் ஆரம்பிச்ச கட்சி, இன்னிக்கு அவரோடயே மறைமுக ஒப்பந் தம் வெச்சிருக்கோன்னு சந்தேகமா இருக்கு. மிடாஸ் கம்பெனியைப்பத்தி எதிர்க் கட்சியா இருந்தப்போ கத்திய கலைஞர், இன்னிக்குஅதைப் பத்திப் பேசுறாரா? மிடாஸ்ல இருந்து டாஸ்மாக்குக்கு சரக்கு வாங்குறதை நிறுத்தினாரா? சசிகலாவுக்கும் கலைஞருக்கும் கூட்டணி இருக்கான்னு நான் கேட்ட கேள்விக்கு இதுவரை பதில் இல்லையே! தமிழ்நாடு சட்டமன்றத்துல, 'புரட்சித் தலைவரின் சத்துணவுத் திட்டத்தில் சத்து இல்லை'ன்னு ஒரு மந்திரி பேசுறார். யாரு, எம்.ஜி.ஆர். போட்ட உப்பைத் தின்னு வளர்ந்த ஏமாத்துற வேலு. அதைக் கேட்டுட்டு சபையை நடத்தவிடலாமா அ.தி.மு.க? எங்க போச்சு புரட்சித் தலைவர் ஊட்டிய தைரியமும் ஆக்ரோஷமும்?

''கருணாநிதி -  ஜெயலலிதா மறைமுக ஒப்பந்தம்!''

இன்னொரு கட்சி, பென்னாகரத்துல வீராதி வீரனா தி.மு.க-வை எதிர்ப்பதாகச் சொல்லிப் போட்டி போட்டது. ஜெயிக்க முடியலைன்னதும், மறு வாரமே மகனுக்கு எம்.பி. பதவியையாவது வாங்கிப்போடுவோம்னு கோபாலபுரத்துக்குத் தூது அனுப்பிட்டுத் திரியுது.

வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுனு பேசணும் சார். கடைசி வரைக்கும் பேசணும். அவங்களைத்தான் மக்கள் நம்புவாங்க. நான் தயவுதாட்சண்யம் பார்க்காம, நாளைக்கு என்ன நடக்கும்னு யோசிக்காம, மக்களுக்கு இன்னிக்கு என்ன தேவையோ அதைப்பத்திப் பேசுறேன். எனக்குப் பயம் இல்லை!''

''ஆனால் நீங்கள், அ.தி.மு.க-வை அதிகம் விமர்சித்துப் பேசுவது இல்லையே?''

''அட, அந்தம்மா என்ன அரிவாளாவெச்சிருக்கு, நான் பயப்படுறதுக்கு?
இன்னிக்கு யாரு சார் முதலமைச்சர் பதவியில உட்கார்ந்திருக்கிறது? கலைஞர்! இன்னிக்கு மக்களுக்கு ஒரு பிரச்னைன்னா, பதில் சொல்லக் கடமைப்பட்டவர் அவருதான். அதனால், அவரைப்பத்திதான் நான் பேச முடியும். பேசுவேன். வீட்டுல சும்மா உட்கார்ந்துட்டு இருக்கிற ஜெயலலிதாவைப்பத்தி என்ன பேசுறது?''

''காங்கிரசுக்கும் உங்களுக்கும் ரகசியமான ஒப்பந்தம் இருப்பதாகச் சொல்லப்படுகிறதே?''

''காங்கிரஸை எல்லாம் ஏன் சார் ஞாபகப்படுத்துறீங்க? அது கருணாநிதியின் கிளைக் கழகமாக மாறிப்போய் பல வருஷமாச்சு. உலகத்துலயே மோசமானவன் யாரு தெரியுமா? சொந்தக் கட்சிக்குத் துரோகம் பண்றவன்தான். இன்னிக்கு இருக்கிற மகளிர் சுய உதவிக் குழுங்கிறது மத்திய அரசோட திட்டம். வேலைவாய்ப்பு உறுதித் திட்டமும் மத்திய அரசோட திட்டம். டயல் நம்பர் 108 ஸ்கீமும் மத்திய

''கருணாநிதி -  ஜெயலலிதா மறைமுக ஒப்பந்தம்!''

அரசாங்கத்தோட திட்டம். தமிழ்நாட்டுல மட்டும்இல்ல; 14 மாநிலத்துல 108 ஸ்கீம் ஓடுது. இப்படி எத்த னையோ மத்திய அரசாங்கத்தின் திட்டங்களைத் தங்களோட சாதனைகளா கருணாநிதி பேசுறதை எடுத்துச் சொன்னா, கோபிச்சுக்குவாரோன்னு சொல்லத் துணிச்சல் இல்லாதவங்க காங்கிரஸ் காரங்க. காங்கிரஸ் வளர்ந்தா என்ன, வளராட் டிப் போனா என்ன... மாசா மாசம் நமக்கு வர்றது வந்தாப் போதும்னு காங்கிரஸ்காரங்க திருப்தி ஆயிட்டாங்க. இவங்களோடு சேர்ந்து என்ன பண்ண முடியும்?''

''தி.மு.க-வைப் பிடிக்காத காங்கிரஸ் பிரமுகர்கள் உங்கள் மீது பாசமாக இருப்பதாகத் தெரிகிறதே?''

''அந்தப் பாசமும் மேலவை வந்ததும் முடிஞ்சுபோகும். இதுவரை சரிப்படுத்த முடியாதவங்களை எம்.எல்.சி. ஆக்கிச் சரி பண்ணிடுவார் கருணாநிதி. அறிஞர்கள், திறமையானவர்கள் இருந்து அரசாங்கத்துக்கு ஆலோசனை சொல்ல வேண்டிய அவை, மேலவை. ஆனா, அதை முதியோர் சபையா மாத்தப் போறாங்க!''

''உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற் பீர்களா?''

''நாட்டுல இது ஒண்ணுதான் குறைச்சல்! ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் வீட்டுல கரன்ட் இல்ல. வியாபாரம் கெட்டுப்போச்சு. தொழிற்சாலைகள் ஸ்தம்பிச்சு நிக்குது. பசங்க படிக்க முடியலை. தாய்மார்கள் சமைக்க முடியலை. ஆஸ்பத்திரிகள்ல நோயாளிகள் அவஸ்தைப்படுறாங்க. அதைப்பத்தி இந்த அரசாங்கத்துக்கு அக்கறை இருக்கா? ஆற்காட்டார் அதுக்கான மந்திரி. அவருக்கே உடம்பு சரி இல்லை. அவரை மாத்திட்டு, ஆக்டிவ்வான மந்திரியைப் போட்டு மின்சாரப் பிரச்னையைத் தீர்க்கக் கூடாதா? அத்தியாவசியப் பண்டங்களோட விலை எல்லாமே யானை விலை, குதிரை விலை ஆயிடுச்சு. அதைக் குறைக்க வேண்டியது, குறைக்கிறதுக்கான முயற்சியாவது எடுக்க வேண்டியது அரசாங்கத்தோட வேலை இல்லையா?

கையில காசு இருக்கோ இல்லியோ, கடன் வாங்கியாவது சட்டசபைக் கட்டடம் கட்ட ணும், மாநாடு நடத்தணும்னு மஞ்சக் குளிக்கிறதுல மட்டும் ஆர்வமா இருக்கார் ஒரு முதலமைச்சர்.

''கருணாநிதி -  ஜெயலலிதா மறைமுக ஒப்பந்தம்!''

சரி, சட்டசபைக்கு காலங்காலமா இருக் கப்போற கட்டடத்தையாவது ஒழுங்காக் கட்டினாரா? அது ஏதோ இந்தியன் ஆயில் டேங்க் மாதிரி இருக்கு. அடுத்த முறை ஆட்சிக்கு வர மாட்டோம்னு தெரிஞ்சுபோய், பாதி கட்டின பில்டிங்ல செட் போட்டுத் திறப்பு விழா நடத்துறார். இப்படிச் செலவழிக்கிற பணத்துல, மின்சாரப் பிரச்னையைத் தீர்க்கலாம். விலைவாசியைக் குறைக்க நடவடிக்கை எடுக்கலாம். மக்களோட அடிப்படைப் பிரச்னை யைத் தீர்க்க நேரம் இல்லை. ஆனா, மாசத் துக்கு ஒரு சினிமாவுக்கு வசனம் எழுதவும் எடிட்டிங் போகவும், பாராட்டு விழாக்கள்ல கலந்துக்கவும் மட்டும் நேரம் இருக்கு ஒரு முதல்வருக்கு!

கோவையில் அம்மன்குளம் பகுதியில் குடிசை மாற்று வாரியம் கட்டின வீடுகள் இடிஞ்சு விழுந்துட்டே வருது. அரசாங்கம் கட்டுற கட்டடங்கள் மண்ணுக்குள்ள புதைஞ்சிட்டே போகுது. உயிருக்கு உத்தரவாதம் இல்லாம, அவசர அவசரமா வீடுகளை ஏன் கட்டணும்? போலி மருந்துகள், காலாவதியான மருந்துகளை டன் டன்னாகப் பிடிப்பதைப் பார்த்தா பகீர்னு இருக்கு. இதுவரைக்கும் இந்த மருந்துகளைப் பயன்படுத்திய மக்களுக்கு இந்த அரசாங்கம்தான் பதில் சொல்லணும். இன்னிக்குப் பறிமுதல் பண்றீங்கன்னா, நேத்து வரை அனுமதிச்சதும் நீங்கதானே.எதையும் கண்டுக்காம, இனி புதுசா எப்படிப் பாராட்டலாம்னு இன்னொரு ஐடியா போட்டு... செம்மொழி மாநாடு. கொடுமைடா சாமி!''

''பிரபாகரனின் தாய்க்கு மருத்துவ உதவி தர மறுத்து திருப்பி அனுப்பி உள்ளார்களே?''

''இந்தப் பாவத்துக்குக் காரணமானவங்களை அவங்க மனசாட்சியே தூங்க விடாதுங்க. சட்டமன்றத்துல இதைப்பத்திக் கேட்டா, மறு நாள் காலையிலதான் எனக்கு விஷயம் தெரியும்னு முதல்ல கருணாநிதி சொல்றாரு. அப்புறமா அவரே, ராத்திரி 12 மணிக்குத் தகவல் வந்துச்சுங்கிறார். எதுக்கு மாத்தி மாத்திப் பேசணும்? பார்வதி அம்மா வர்றது மருத்துவச் சிகிச்சைக்காக. விமான நிலையத்துல மத்திய, மாநில அரசு உளவுத் துறை இருக்கு. பிரபாகரனின் தாயார், சிகிச்சைக்காக வந்திருக்கார்னு தெரிஞ்சதுமே மாநில உளவுத் துறை... முதல்வருக்கும், மத்திய உளவுத் துறை... சிதம்பரத்துக்கும் தகவல் தந்திருப்பாங்க. ரெண்டு பேரும் பேசி பார்வதி அம்மா ளைத் திருப்பி அனுப்பி இருக்காங்க. நாடு முழுக்க எதிர்ப்பு வந்ததும் என்னிடம் கோரிக்கைவைத்தால் பரிசீலனை பண்ணத் தயார் என்கிறார்.

காங்கிரஸ் கூட்டணிக்காக இப்படி எத்தனை பல்டிகள் வேண்டுமானாலும் அடிப்பார் கருணாநிதி. 18 வருஷம் ஜெயில்ல இருக்கிற நளினி மீது ஒரு குற்றச்சாட்டுகூட இல்லை. ஆனா, இன்னிக்குக் குற்றச்சாட்டு. அந்தம்மா ஆட்சியில... கஞ்சா வெக்கிற மாதிரி... இப்ப செல்போனா? ம்... என்ன கூத்தெல்லாம் நடக்குதுன்னு பார்ப்போம். கடைசியில மக்கள் குத்துவாங்க... கும்மாங்குத்து!''

''இவ்வளவு பேசும் உங்களைப் 'பகுதி நேர அரசியல்வாதி' என்றுதானே குட்டுகிறது முரசொலி?''

''யாரு... நானா? என் குடும்பத்துக்கு வருமானம் வேணும். என்னை நம்பி இருக்கிற சிலருக்குச் சம்பளம் கொடுக்கணும். என்னால் முடிஞ்ச உதவிகளைத் தொடர்ந்து செய்யணும். அதனால் எனக்குத் தெரிஞ்ச தொழிலான சினிமாவில் உழைச்சுச் சம்பாதிக்கிறேன். ஆனா, இதைப் பேசுற ஆளுங்க என்ன பண்றாங்க? 'பெண் சிங்கம்' படத்துக்கு கதை-வசனம் எழுதிக்கிட்டே இந்தக் கிண்டலா? 'பாசப்பறவைகள்', 'கண்ணம்மா', 'மதுரை மீனாட்சி', 'உளியின் ஓசை', 'பொன்னர் சங்கர்'னு கதை-வசனம் எழுதிக்கிட்டு, ஆட்சியில இருக்கிற முரசொலியார்தான் பகுதி நேரம் அரசியல் பண்றார். அவர் செய்தால் கலைச் சேவை. நாங்க செய்தா பகுதி நேரமா? அதோடு, நான் இன்னும் என் தொகுதி நேர அரசியல்வாதியும்கூட. ஆனால் அவர், அவருடைய தொகுதிப் பக்கம்கூட எட்டிப்பார்க்காத அரசியல்வாதி!''

''எல்லோரையும் திட்டிக்கிட்டே இருந்தா, யாருடன் கூட்டணிவைப் பீர்கள்? ஆமா, அடுத்த முறையும் விருத்தாசலம் தொகுதிதானா?''

''இதுவரைக்கும் நீங்க கேட்டதுக்கு எல்லாம் பதில் சொன்னேன். ஆனா, இனி எல்லாமே சஸ்பென்ஸ்தான்!'' - சிவப்பு விழிகளில் சிரிக்கிறார் விஜயகாந்த்!

 
''கருணாநிதி -  ஜெயலலிதா மறைமுக ஒப்பந்தம்!''
''கருணாநிதி -  ஜெயலலிதா மறைமுக ஒப்பந்தம்!''