Published:Updated:

`6 மணி நேரத்தில் 1,800 பேர் கொலை!'- அஸ்ஸாமைத் துரத்தும் நெல்லி படுகொலை #NellieMassacre

நெல்லி படுகொலை
நெல்லி படுகொலை

1983-ம் ஆண்டு, பிப்ரவரி 18-ம் தேதியன்று, நெல்லி உள்ளிட்ட முஸ்லிம்கள் அதிகம் வாழ்ந்துவந்த கிராமங்கள் அஸ்ஸாம் இயக்கப் போராட்டக்காரர்களால் சூழப்பட்டன. அரிவாள்களும், நாட்டுத் துப்பாக்கிகளும் அவர்களின் கைகளில் இருந்தன. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவரும் தாக்கப்பட்டு, கொல்லப்பட்டனர்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடியுரிமைப் பதிவேடு முதலானவற்றிற்கு எதிரான தொடர் போராட்டங்களால் பதற்றமாக இருக்கிறது அஸ்ஸாம். கடந்த அரை நூற்றாண்டாக அஸ்ஸாம் மாநிலத்தின் அரசியலைத் தீர்மானித்து வரும் இந்தப் பிரச்னை, 37 ஆண்டுகளுக்கு முன்பு, கடந்த 1983-ம் ஆண்டு அஸ்ஸாமின் நெல்லி பகுதியில் மிகப்பெரிய துயரமாக உருவெடுத்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின், குறிப்பிட்ட மதத்தினர் மீதான தாக்குதல்களுள் மிகவும் கொடூரமான தாக்குதலாக, நெல்லி தாக்குதல் சுட்டிக்காட்டப்பட்டது.

பாகிஸ்தானிலிருந்து கிழக்கு பாகிஸ்தான் என்ற தனிநாடு, வங்காளதேசம் என்ற பெயரோடு உருவாவதற்கு இந்திய அரசு உதவி செய்தது. போர்ச் சூழலில், வங்காளதேசத்திலிருந்து வெளியேறிய அகதிகள், அண்டை நாடான இந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்தனர். எல்லையோர மாநிலங்களான அஸ்ஸாம், திரிபுரா முதலான மாநிலங்களில் வங்காளதேச அகதிகள் அதிகளவில் குடிபெயர்ந்தனர். இது நீண்ட காலமாக, அதே மண்ணில் வாழ்ந்துவந்த மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அஸ்ஸாம் இயக்கம்
அஸ்ஸாம் இயக்கம்

1979-ம் ஆண்டு, அஸ்ஸாம் மாநிலத்தின் அனைத்து அஸ்ஸாம் மாணவர் சங்கம், அஸ்ஸாம் கனபரிஷத் முதலான அமைப்புகள் `சட்டவிரோதக் குடியேறிகளுக்கு' எதிராக போராடத் தொடங்கினர். சட்டவிரோதக் குடியேறிகளின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து, அவர்களை வைத்து தேர்தல்களைக் கட்சிகள் வெல்வதாகவும், அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் கோரிக்கை வைத்தனர். மேலும், சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் உடனடியாக சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்றும் போராடினர்.

சட்டவிரோதமாக குடியேறியவர்களை எதிர்த்து தொடங்கப்பட்ட போராட்டம், நாளடைவில் வங்க மொழி பேசிய அனைவரின் மீதும் திரும்பியது. இந்தப் போராட்டங்களால், வங்க மொழி பேசிய இந்துக்களும், முஸ்லிம்களும் குறிவைக்கப்பட்டனர். போராட்டக்காரர்கள், தமது நிலங்களையும் வேலைவாய்ப்புகளையும் `குடியேறிகளிடம்' இழந்துவிடுவோம் என்ற அச்சத்தில் போராடி வந்தனர்.

அஸ்ஸாம் இயக்கம்
அஸ்ஸாம் இயக்கம்

1979-ம் ஆண்டு, அஸ்ஸாம் மாநிலத்தின் மங்கல்தோய் நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பி ஹிராலால் பட்வாரி மரணமடைந்தார். அவர் ஜனதாக் கட்சியைச் சேர்ந்தவர். முஸ்லிம்கள் அதிகம் வாழ்ந்த மங்கல்தோய் நாடாளுமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழல் உருவானது. சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் தேர்தலைப் புறக்கணிப்பதாகவும் அஸ்ஸாம் இயக்கத்தின் போராட்டக்காரர்கள் தேர்தல் புறக்கணிப்புக்கு அறைகூவல் விடுத்தனர். இதே சூழலில், அஸ்ஸாம் மாநிலத்தின் சட்டமன்றத்திலும், எம்.எல்.ஏ-க்கள் இடையிலான கூட்டணி பேரங்களால் ஆட்சி கவிழ்ந்தது.

அஸ்ஸாம் போராட்டக்காரர்கள் தேர்தல் புறக்கணிப்பு என்று அறிவித்திருந்தபோதும், இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு வாக்காளர் பட்டியலைத் திருத்தம் செய்யாமல், 1983-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அஸ்ஸாம் மாநிலத் தேர்தல் நடைபெற வேண்டும் என்று அறிவித்தது. அனைத்து அஸ்ஸாம் சிறுபான்மை மாணவர் சங்கம் என்ற புதிய அமைப்பு, 1971-ம் ஆண்டுக்கு முன் அஸ்ஸாம் மாநிலத்தில் குடியேறிவர்களுக்கு குடியுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று எதிர் போராட்டத்தைத் தொடங்கினர். இதனால், அஸ்ஸாம் மாநிலத்தில் துணை ராணுவம் குவிக்கப்பட்டதோடு, காவல் பலப்படுத்தப்பட்டது.

அஸ்ஸாம் இயக்கம்
அஸ்ஸாம் இயக்கம்

பதற்றமான சூழலில், 1983-ம் ஆண்டு ஜனவரி 7 முதல் பிப்ரவரி 21 வரை சட்டமன்றத் தேர்தல்கள் பல கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அஸ்ஸாம் மொழிபேசிய மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த தொகுதிகளில் தேர்தல் புறக்கணிப்பு வெற்றிகரமாக அனுசரிக்கப்பட்டது. தேர்தல் புறக்கணிப்புக்கு எதிராக வங்காள மொழி பேசிய இந்திய முஸ்லிம்கள் வாக்குச் செலுத்தினர். இதனால் வங்காளி முஸ்லிம்கள் மீது சமூகப் புறக்கணிப்பு விதித்தனர் அப்பகுதி மக்கள்.

1983-ம் ஆண்டு, பிப்ரவரி 18 அன்று, நெல்லி உள்ளிட்ட முஸ்லிம்கள் அதிகம் வாழ்ந்துவந்த கிராமங்கள் அஸ்ஸாம் இயக்கப் போராட்டக்காரர்களால் சூழப்பட்டன. அரிவாள்களும், நாட்டுத் துப்பாக்கிகளும் அவர்களின் கைகளில் இருந்தன. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவரும் தாக்கப்பட்டு, கொல்லப்பட்டனர். வீடுகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. அன்றைய தினத்தில், ஆறுகளில் பிணங்கள் மிதந்ததாகக் கூறப்பட்டது. கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெண்களும், குழந்தைகளும் ஆவர். காலை 8 மணிக்குத் தொடங்கிய இந்த மனித வேட்டையில், வெறும் 6 மணி நேரத்துக்குள் 14 கிராமங்கள் தரைமட்டமாக்கப்பட்டன; 1800 பேர் கொல்லப்பட்டனர். அதிகாரபூர்வமற்ற தகவல்கள் இறந்தவர்களின் எண்ணிக்கையை 3,000 எனக் குறிக்கின்றன.

அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, குடியரசுத் தலைவர் ஜெயில்சிங் ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களை ஒரு வாரத்துக்குப் பின் சந்தித்தனர். கொல்லப்பட்டவர்களுக்கு 5,000 ரூபாயும் காயம் அடைந்தவர்களுக்கு 3,000 ரூபாயும் நிவாரணமாக வழங்கப்பட்டது.
நெல்லி படுகொலை
நெல்லி படுகொலை

நெல்லியின் மாபெரும் படுகொலைக்குப் பிறகு, 688 வழக்குகள் பதியப்பட்டன. அவற்றில், 299 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. எனினும், 1,800 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்ட இந்த நிகழ்வுக்காக ஒருவருக்குக் கூட தண்டனை வழங்கப்படவில்லை. திவாரி என்ற ஐ.பி.எஸ் அதிகாரி தலைமையில், இந்தப் படுகொலைகளை விசாரிக்க கமிஷன் அமைக்கப்பட்டது. நெல்லி படுகொலைகளை விசாரித்த திவாரி கமிஷன் 1984-ம் ஆண்டு, அறிக்கையைச் சமர்ப்பித்தது. இந்த அறிக்கை தற்போதுவரை வெளியிடப்படவில்லை. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றது.

1985-ம் ஆண்டு, அஸ்ஸாம் போராட்டக்காரர்களுடன் சுமுகப் பேச்சுவார்த்தை நடத்திய ராஜீவ் காந்தி அரசு, அஸ்ஸாம் ஒப்பந்தம் என்ற ஒப்பந்தத்தின் மூலம், 1971-ம் ஆண்டுக்குப் பிறகு அஸ்ஸாமில் குடியேறியவர்கள் சட்டவிரோதக் குடியேறியவர்கள் எனவும், அதற்கு முன்பு குடிபெயர்ந்தவர்கள் குடியுரிமைப் பெறுவர் எனவும் கூறப்பட்டது. சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட்டன. அஸ்ஸாம் மாநிலப் போராட்டங்களை முன்னின்று நடத்திய அஸ்ஸாம் கன பரிஷத் ஆட்சியமைத்தது.

நெல்லி படுகொலை
நெல்லி படுகொலை
திரும்பும் வரலாறு... அஸ்ஸாம் மீண்டும் பற்றி எரிவது ஏன்? #CAB

அஸ்ஸாம் மொழி பேசுவோருக்கும், வங்க மொழி பேசுவோருக்கும் இடையிலான பிரச்னை பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. அதன் நீட்சியாக, உச்சநீதிமன்றம் என்.ஆர்.சியை அறிவித்தது. தற்போது என்.ஆர்.சி கணக்கெடுப்பு முடிந்துள்ளதோடு, 19 லட்ச மக்கள் சந்தேகத்திற்குரிய குடிமக்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்; இவர்களுள் 12 லட்சம் பேர் வங்காள மொழி பேசும் இந்துக்கள். தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம் மூலம், 12 லட்ச இந்துக்களுக்குக் குடியுரிமை வழங்கப்படும் என்பதுதான் தற்போது அஸ்ஸாமில் சி.ஏ.ஏ எதிர்ப்புப் போராட்டங்களுக்குக் காரணம்.

ஒரு சட்டமன்றத் தேர்தலின்போது, அஸ்ஸாம் மக்கள் இனவாதத்தால் பிரிக்கப்பட்டனர்; நெல்லி படுகொலை அரங்கேற்றப்பட்டு, 1800 பேர் உயிரிழந்தனர். தற்போதும், மக்கள் இனத்தின் பெயரால், மதத்தின் பெயரால் அரசு ஆதரவோடு பிரிக்கப்பட்டுள்ளனர். 2021-ம் ஆண்டு, சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கிறது அஸ்ஸாம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, அப்போதைய பி.ஜே.பி தலைவர் அமித் ஷா அஸ்ஸாமில் பிரசாரம் செய்தபோது, ``அஸ்ஸாம் இன்னொரு காஷ்மீர் ஆகிவிடக் கூடாது" என்றார். ஆம்! மாண்புமிகு உள்துறை அமைச்சர் சொன்னதுபோல, அஸ்ஸாம் இன்னொரு காஷ்மீர் ஆகிவிடக் கூடாது!

அடுத்த கட்டுரைக்கு