Published:Updated:

வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தால் 2 ஆண்டுகள் சிறை: சட்டம் வருகிறது!

வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தால் 2 ஆண்டுகள் சிறை: சட்டம் வருகிறது!
வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தால் 2 ஆண்டுகள் சிறை: சட்டம் வருகிறது!
வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தால் 2 ஆண்டுகள் சிறை: சட்டம் வருகிறது!

புதுடெல்லி: தேர்தலின்போது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் வகையில் மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வருகிறது.

தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு அதிக பணம் கொடுப்பது அல்லது மது, துணிமணி, தொலைக்காட்சி பெட்டி போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள் கொடுப்பது தற்போது நடைபெற்று வருகிறது. உள்ளாட்சி தேர்தல் முதல் நாடாளுமன்ற தேர்தல் வரை வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் இதுபோன்ற நிகழ்வுகளை முற்றிலுமாக தடுக்க தேர்தல் கமிஷன் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

தற்போதைய சட்டப்படி, வாக்காளர்களுக்கு பணம் அல்லது பொருள் லஞ்சமாக கொடுப்பது குறித்து புகார் செய்யப்படுவதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு ஒரு வருடம் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும், ஒரு இடத்தில் ஏராளமான பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக உறுதியான தகவல் வந்தாலும், ‘வாரண்ட்’ இல்லாமல் அந்த இடத்தை சோதனை போட முடியாத நிலை உள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டிலேயே இதற்கான சட்டத்தை திருத்தி அமைக்க வேண்டும் என்று மத்திய உள்துறைக்கு, தலைமை தேர்தல் கமிஷன் பரிந்துரைத்தது. அதன்படி, புகார் இல்லாமலேயே வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதை நேரில் காணும் தேர்தல் அதிகாரி, தாமே முன்வந்து வழக்கு பதிவு செய்யும் அதிகாரம் வழங்கவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க வகை செய்யும்படி சட்டத்தை திருத்த வேண்டும் என்பதாகும்.

இந்த தேர்தல் சட்டத்தை திருத்தும் நடவடிக்கையில் தற்போது மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம், தலைமை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பியுள்ள தகவலில், குற்றவியல் நடைமுறை சட்டத்திருத்தப் பணியை தொடங்கி உள்ளதாகவும், இது தொடர்பான வரைவு மசோதாவை தயாரிக்கும்படி சட்டத்துறைக்கு தகவல் அனுப்பி உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.