Published:Updated:

ரஜினி, விஜயகாந்த், வாசன் தேர்தல் கூட்டணி: பரபரப்பை ஏற்படுத்தும் தமாகா போஸ்டர்!

ரஜினி, விஜயகாந்த், வாசன் தேர்தல் கூட்டணி: பரபரப்பை ஏற்படுத்தும் தமாகா போஸ்டர்!
ரஜினி, விஜயகாந்த், வாசன் தேர்தல் கூட்டணி: பரபரப்பை ஏற்படுத்தும் தமாகா போஸ்டர்!
ரஜினி, விஜயகாந்த், வாசன் தேர்தல் கூட்டணி: பரபரப்பை ஏற்படுத்தும் தமாகா போஸ்டர்!

தஞ்சாவூர்: ரஜினிகாந்த், விஜயகாந்த், ஜி.கே.வாசன் படத்துடன் தேர்தல் கூட்டணி தலைவர்கள் வாழ்த்துக்களுடன் என்று தமாகாவினர் ஒட்டி உள்ள போஸ்டரால் தஞ்சையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்த ஜி.கே.வாசன் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கி, தற்போது உறுப்பினர் சேர்க்கையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். அவரது தந்தை மூப்பனார், ரஜினி மற்றும் விஜயகாந்திடம் மிகவும் நெருக்கமாக பழகி வந்தவர். அந்த நட்பு, தொடர்ந்து ஜி.கே.வாசனிடமும் நெருக்கம்கொள்ள வைத்துள்ளது.

கடந்த வருடம் நடந்த மூப்பனார் நினைவு நாள் நிகழ்ச்சியில் விஜயகாந்த் கலந்து கொண்டார். அது, அப்போது பரபரப்பை ஏற்படுத்தியதுடன் தி.மு.க.வையும், அ.தி.மு.க.வையும் அதிர வைத்தது. ரஜினிகாந்தும், மூப்பனார் மேல் மிகுந்த மரியாதை கொண்டவர். தமிழ் மாநில காங்கிரஸ் உருவாவதற்கு அவர் கொடுத்த ஊக்கமும் முக்கிய காரணம்.

இந்நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனின் நெருங்கிய ஆதரவாளர் இல்ல திருமண விழா இன்று தஞ்சையில் நடைபெறுகிறது. இந்த திருமண விழாவில் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார். இதற்காக ஒட்டபட்டுள்ள போஸ்டார்களில், ரஜினி, விஜயகாந்த், ஜி.கே.வாசன் ஆகிய மூவரின் பெரிய படத்துடன் கூட்டணி கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களுடன் என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது. இது அனைவரையும் ஆச்சரியப்படுத்துவதுடன், அனைத்து அரசில கட்சி நிர்வாகிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பரபரப்பு போஸ்டர் குறித்து சில அரசியல் ஆர்வலர்கள் கூறும்போது, ''லிங்கா பட பாடல் கேசட் வெளியீட்டு விழவில் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது, எனக்கு அரசியலின் ஆழம் தெரியும். அதில் இறங்கினால் நிறைய பேரை மிதிக்க வேண்டியிருக்கும். நிறைய பேரின் தோள்களில் நடக்க வேண்டியிருக்கும். அதற்காகத்தான் பயப்படுகிறேன். அரசியலை நினைத்து பயப்படவில்லை. எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். அதன் பிறகு ரஜினி அமைதியாக இருந்தாலும், அவரது ரசிகர்கள் நல்ல செய்தி வரும் என எதிர்பார்த்து தான் இருக்கிறார்கள்.

விஜயகாந்த், கூட்டணி முறிவுக்கு பின் அ.தி.மு.க.வை கடுமையாக சாடி வருகிறார். அதேபோல், இதுவரை மத்திய அரசை மட்டுமே விமர்சித்து வந்த ஜி.கே.வாசனும் தற்போது, தமிழக அரசை வசைபாட ஆரம்பித்துள்ளார். அதேநேரம், தமிழக மக்களும் தி.மு.க., அ.தி.மு.க.வை தவிர்த்து பலமான மூன்றாவது அணி அமைய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இதை எல்லாம் பார்க்கும்போது, 2016ல் தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பதற்கான முன்னோட்டமாக இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருக்கலாம்" என்கின்றனர்.

செய்தி, படங்கள்: கே.குணசீலன்