Published:Updated:

இது ஜெயலலிதாவுக்கு தெரியுமா?

இது ஜெயலலிதாவுக்கு தெரியுமா?
இது ஜெயலலிதாவுக்கு தெரியுமா?

மிழக அரசின் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்த  விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் கறவை மாடுகள் வழங்கும் திட்டம் முடங்கிக் கிடப்பதாக கேட்கத் தொடங்கி உள்ளன.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தவாறு, ஏழைகளுக்கு இலவசமாக ஆடு, மாடுகள் வழங்கும் திட்டத்தைக்  கடந்த 2011 ஆம் ஆண்டு  அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் தேதி  தொடங்கி வைத்தார்   ஜெயலலிதா.

அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் சென்னை தவிர்த்த  பிற மாவட்டங்களில் ஏழைஎளிய மற்றும் விதவைப்பெண்கள் மாற்றுத் திறனாளிகள் ஆகியோரைக் கண்டறிந்து இலவசமாக வெள்ளாடுகள் மற்றும் கறவை மாடுகள் வழங்கப்பட்டன. ஆனால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடையாமல் அத்திட்டம் முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இது ஜெயலலிதாவுக்கு தெரியுமா?

தமிழகத்தில்  நிலம் மற்றும் விவசாயம் சார்ந்து வாழக்கூடியவர்களில் 36%-க்கும் மேலானோர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்கிறார்கள். இது தேசிய சராசரியான 21.12%-ஐக் காட்டிலும் மிக அதிகம் என்று  திட்டக் குழு அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இதனைக் கருத்தில் கொண்டும்  மாநில அரசு சார்பில் தலித் மற்றும் பழங்குடி மக்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும் இலவசத் திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. 

அதன்படி விறு விறுப்பாக செயல்படத் தொடங்கிய இந்தத் திட்டம்,  தற்போது சுனங்கியுள்ளதாக  இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறையின் 2014 ஆம்  ஆண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறையின் கீழ் இயங்குகிற‌ இந்த  திட்டம் மட்டுமல்லாமல்  இது போன்று விவசாயம், கூட்டுறவு, சிறு - குறு தொழில் என இன்னும் பல திட்டங்களையும் அது மதிப்பீடு செய்து, பல குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியுள்ள‌து.

ஆண்டொன்றுக்கு 12,000 வீதம் 2011 ஆம் ஆண்டிலிருந்து 2016 ஆம் ஆண்டு வரை ஐந்தாண்டுக்குள் 60,000 ஜெர்ஸி மற்றும் ஹோல்ஸ்டீன் பிரிசியன் வகைக் கறவை மாடுகளை வழங்குவது இதன் நோக்கம். தமிழகத்தில் பால் உற்பத்தி மற்றும் பால் கூட்டுறவுச் சங்கங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள மாவட்டங்கள்  அடிப்படையில் பயனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

ஒரு பசு வாங்க 30,000 என அரசு அறிவித்த‌து. அதன் அடிப்படையில் 2011 - 12 முதல் 2012 - 13 வரை

இது ஜெயலலிதாவுக்கு தெரியுமா?

பசுக்களின் விலை, போக்குவரத்து, காப்பீடு மற்றும் இதர செலவு என 24,000 பசுமாடுகள் வாங்க இதுவரையிலும் ரூ. 84.28 கோடி செலவிடப்பட்டுள்ளது.
கறவை மாடுகள் வழங்கும் திட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை இந்தியக் கணக்காயரின் தணிக்கைத் துறை 21 மாவட்டங்களின் 136 கிராமப் பஞ்சாயத்துக்களில் விரிவான ஓர் ஆய்வை மேற்கொண்டது. கடந்த ஆண்டு வெளியிட்ட‌ அந்த‌ அறிக்கையைப் பார்த்தால் மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது.

அதாவது, அருகில் உள்ள சந்தைகளில் பசுக்கள் வாங்காமல், ஜெர்சி பசு வாங்குவதற்கு ஏற்ற இடமாக இல்லாத‌ ஆந்திர மாநிலத்தின்  புங்கனூர், பலமனேர் மற்றும் பீலேறு சந்தைகளில் வாங்கியதால் தரம் குறைந்த - வயதான, பால் சுரப்பற்ற பசு மாடுகளை, திட்ட அறிவிப்புக்காக மிக அவசரமாக அரசு வாங்கியுள்ள‌து தெரிய வந்துள்ளது.  அது மட்டுமல்லாமல் பயனாளிகளைத் தேர்வுசெய்வதில் வெளிப்படையான தன்மை எதுவும் பின்பற்றப்படாமல் தகுதியற்ற பயனாளிகளைத் தேர்வுசெய்துள்ளனர் என்றும், தேர்வு செய்வதில் அரசியல் பிரமுகர்களின் தலையீடு இருப்பதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதே போல வழிகாட்டும் நெறிமுறை சொல்கிற 30% தலித் - பழங்குடியினப் பெண்கள் ஒரு கிராமத்தில்கூடத் தேர்வு செய்யப்படவில்லை. அவர்களுக்குக் கறவை மாடுகளும் வழங்கப்படவில்லை. மேலும் கொடுக்கப்பட்ட பசுக்களுக்குத் தீவனம் எங்கிருந்து பெறுவது என்பதைப் பற்றியோ, கொள்ளை நோய்க் காலத்தில் பாதிக்கப்பட்டால் இழப்பீடு பெறக் காப்பீடு வழங்கப்படுவது குறித்தோ எந்த உத்தரவாதம் எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது ஜெயலலிதாவுக்கு தெரியுமா?

சொத்துக் குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட சிறைத்தண்டனை மற்றும் அபராதம் காரணமாக முதல்வர் பதவியை ஜெயலலிதா இழந்த பிறகு,   தமிழக முதல்வரானார் ஓ.பன்னீர் செல்வம். புதிய திட்டங்கள் எதுவும் கடந்த 4 மாதங்களாக தொடங்கப்படவில்லை.அதே நேரத்தில் ஜெயலலிதா தொடங்கிவைத்து செயல்படுத்தப்பட்டு வந்த திட்டமான இலவச வெள்ளாடுகள், கறவை மாடுகள் திட்டமும் முன்னேற்றம் கொள்ளாமல் இருப்பது கவனிக்கத்தக்கது.

கிராமப் பொருளாதரத்தில் வளர்ச்சி கொண்டு வருவதை இலக்காகக் கொண்டு செயல்படுத்தப்பட்ட இந்த திட்டம் குறித்து கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை சார்பிலான கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டிற்கான இலக்கும் 2015- 2016 ஆம் ஆண்டிற்கான பயனாளிகள் ஆண்டுக்கு தலா 1.50 லட்சம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நடப்பாண்டில் வழங்கப்பட்ட ஆடுகள் மற்றும் மாடுகளின் எண்ணிக்கை சொற்ப அளவிலானதே.

தான் தொடங்கி வைத்த திட்டத்தின் தற்போதைய நிலை என்ன என்பது ஜெயலலிதாவுக்கு தெரியுமா? அல்லது தெரிந்தும் கண்டுகொள்ளாமல் உள்ளாரா?

உண்மை நிலை என்ன என்பதை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம்தான் சொல்ல வேண்டும்!

- தேவராஜன்