காங்கிரஸூம் விடுதலைச் சிறுத்தைகளும் மட்டுமே இன்று தி.மு.க அணியின் முக்கியக் கூட்டணிக் கட்சிகள். 13 கட்சிகளின் கூட்டணி என்று பட்டியல் போட்டாலும், அவை அவரால் வெளியில் சொல்ல முடியாத லக்கேஜ்கள்தான். ஆறாவது முறையும் ஆட்சியில் அமர ஆசைப்பட்டால், இவை போதாது.
ஆக, கருணாநிதியின் மனக்கண் முன்னால் முதலாவது தோன்றுபவர் டாக்டர் ராமதாஸ். 'கருணாநிதியின் பார்வை தன் மீது படாதா?' என்று ராமதாஸ் ஏங்கித் திரியும் காலம் இது. இருந்தாலும், பென்னாகரம் இடைத் தேர்தலில் பா.ம.க வாங்கிய 40 ஆயிரம் வாக்குகள் ராமதாஸூக்கு மரியாதையைக் கூட்டியிருக்கிறது. 'ராமதாஸூக்குப் பழைய செல்வாக்கு இல்லை' என்று உளவுத் துறை சொன்னதையும் மீறி, தனது செல்வாக்கை ராமதாஸ் நிரூபித்துக் காட்டினார். எனவே, அன்புமணிக்கு எம்.பி. பதவி, பா.ம.க மீதான வழக்குகளைத் திரும்பப் பெறுவது என்று கொஞ்சம் சார்பான மன நிலைக்கு கருணாநிதி மாறி வருகிறார். இதை அண்ணன், தம்பிகளான அழகிரியும் ஸ்டாலினும் விரும்பவில்லை.
'பா.ம.க. நம் கூட்டணிக்கு வரட்டும். அதுபற்றிக் கவலை இல்லை. அதற்காக ஒரு எம்.பி. பதவியைக் கொடுத்துதான் இழுக்க வேண்டுமா?' என்று அழகிரி கேட்டதாக தி.மு.க. வட்டாரம் சொல்கிறது. 'பா.ம.க. நமது அணிக்குள் வந்தால் வட மாவட்டங்களில் பல தொகுதிகளை அவர்களுக்குத் தாரை வார்க்க வேண்டி வரும். இதனால், தனது ஆதரவாளர்கள் வெற்றிபெறும் எண்ணிக்கை குறையுமே' என்பது ஸ்டாலினின் கவலை. ஆனால், இதைப்பற்றி எல்லாம் கருணாநிதி யோசிக்கவில்லை. பா.ம.க. தன் அணியில் இணைவதையே அவர் விரும்புகிறார்.
டெல்லி காங்கிரஸ் தலைமையின் சுற்றுவட்டாரம், விஜயகாந்த்தை இணைத்துக்கொள்ளச் சொல்லி இருக்கிறது. ஆனால், இதில் கருணாநிதிக்கு உடன்பாடு இல்லை. தன் மீது விஜயகாந்த் வைத்த விமர்சனங்களைக்கூட மறக்க கருணாநிதி தயாராக இருக்கிறார். ஆனால், காங்கிரஸூக்கும் விஜயகாந்த்துக்கும் சேர்த்து 100 இடங்கள் தேவை என்று சொல்லப்படும் கணக்குதான் அவருக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. அப்ப டிக் கொடுத்தால், அடுத்த முறையும் இதேபோன்ற மைனாரிட்டி அரசையே ஆள வேண்டியிருக்கும். அல்லது அவர்கள் இருவரும் இன்ன பிற கட்சிகளுடன் இணைந்து ஒரு கூட்டணி ஆட்சியை அமைத்துவிட்டால் என்னாவது என்ற பயமும் கருணாநிதிக்கு உண்டு. எனவே, காங்கிரஸின் விஜயகாந்த் கனவை முளையிலேயே முறித்துவிடுவது நல்லது என்று நினைக்கிறார்.
'விஜயகாந்த் தனித்து நின்று வாக்குகளைப் பிரித்தால்தான், தி.மு.க. கூட்டணி பிரச்னை இல்லாமல் வெற்றி பெறும். ஒருவேளை அவர் அ.தி.மு.க-வுடன் ஐக்கியமானால் வெற்றிக்குச் சிக்கல் வரும்' என்று காங்கிரஸில் இருக்கும் சில 'நட்பு' சக்திகள் விஷம அறிவுரைகளைச் சொல்கிறார்கள். 'கருணாநிதியைக் கழற்றிவிட்டு காங்கிரஸ் தனியாக வந்தால், நான் கூட்டணியைப் பற்றி யோசிப்பேன். நீங்கள் கருணாநிதியுடன்தான் இருப்பீர்கள் என்றால், எனக்கு எந்த அட்வைஸூம் பண்ண வேண்டாம்' என்று விஜயகாந்த் தரப்பு பதில் அளித்துள்ளது. என்றாலும், அவரைக் கடைசி வரை தனித்து நிற்கவைப்பதற்கான வேலைகளை அறிவாலயமும் டெல்லியும் இணைந்து பார்க்கும்.
சரத்குமாருக்கு ஒரு முக்கியத்துவம் தர வேண்டும் என்று கருணாநிதியை ராதிகா சந்தித்து கோரிக்கைவைத்தார். ஆனால், 'முன்கூட்டியே முக்கியத்துவம் தராமல் தேர்தல் நேரத்துத் தேவைக்காக அவரைப் பயன்படுத்திக்கொள்ளலாம்' என்பது கருணாநிதியின் திட்டமாக இருக்கிறது.
இந்த நிலையில், காங்கிரஸின் வாக்கு வங்கி, பா.ம.க. மற்றும் விடுதலைச் சிறுத்தைகளுக்கு வட மாவட்டங்களில் இருக்கும் செல்வாக்கு, மத்திய - மாநில அரசுகளின் அதிகார பலம், அரசு ஊழியர்களின் ஆதரவு, இலவச டி.வி-யை வாங்கியவர்கள், ஒரு ரூபாய் அரிசியை வாங்குபவர்கள், ஸ்டாலின் மற்றும் குஷ்புவின் பிரசார பலம், அழகிரியின் தேர்தல் வேலைகள் ஆகியவற்றைவைத்து மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றலாம் என்பது கருணாநிதி போட்டுவைத்திருக்கும் மனக் கணக்கு!
ஜெயலலிதா ஜெயிக்கும் சூத்திரம்!
|