என் விகடன் - புதுச்சேரி
ஸ்பெஷல் -1
Published:Updated:

''ஸ்பெக்ட்ரம் ஒரு பிரச்னையே இல்லை!''

குஷ்பு குபீர்எஸ்.கலீல்ராஜா, படங்கள் : என்.விவேக்

##~##
கு
ஷ்புவின் வீட்டு வரவேற்புஅறையில் கலைஞர் ஓவிய மாகச் சிரிக்கிறார். ஸ்டாலின் போட்டோவில் புன்னகைக்கிறார். நான்கு தலையணைகளை அள்ளிக்கொண்டு வந்து அமர்கிறார் குஷ்பு. ''என் வயித்துல மைனர் ஆபரேஷன் ஒண்ணு பண்ணாங்க. 10 நாள்ல பிரசாரத்துக்குக் கிளம்பணுமே... அதான் இப்போ ஃபுல் ரெஸ்ட்ல இருக்கேன்!''- கண்கள் இடுங்கி வெளிப்படுகிறது குஷ்பு மார்க் சிரிப்பு. இந்தத் தேர்தலில் தி.மு.க-வின் முக்கியமான 'க்ரௌடு ஃபுல்லர்’!

''முதன்முதலா பிரசாரத்துக்குக் கிளம்புறீங்க. என்ன பேசுவீங்க... பயமா இருக்கா?''

''ஸ்பெக்ட்ரம் ஒரு பிரச்னையே இல்லை!''

''எனக்குப் பயமே கிடையாது. 20 வருஷமா இங்கேதான் இருக்கேன். ரெண்டு பெரிய கட்சிகளைப்பத்தியும் நல்லாவே தெரியும். திராவிட அரசியல் வரலாறு தெரியும். நாட்டு நடப்பு தெரியும். வழக்கமான அரசியல்வாதிங்க மாதிரி நான் பேச மாட்டேன். எதிர்க் கட்சி யைப்பத்தியோ, அதன் தலைவர்களைப்பத்தியோ தப்பா பேச மாட்டேன். தலைவர் கலைஞர், தமிழ் மக்களுக்காக இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், 108 ஆம்புலன்ஸ், இலவச டி.வி, இலவச நிலம், ஒரு ரூபாய் அரிசின்னு அத்தனை விஷயங்களையும் பார்த்துப் பார்த்துப் பண்ணியிருக்கார். அதைச் சொன்னாலே, கோடிக்கணக்கான மக்களின் ஓட்டு எங்களுக்குத்தான்!''

''பா.ம.க, விடுதலைச் சிறுத்தைகள் ரெண்டு கட்சிகளும் ஒரு காலத்தில் உங்களைக் கடுமையா எதிர்த்தாங்க. இப்போ அவங்ககூட இணைந்து பிரசாரம் செய்யும் சந்தர்ப்பம் வந்தால்..?''

''கண்டிப்பா இணைந்து பிரசாரம் செய்வேன். இப்போ அவங்க எங்க அணியில்தானே இருக்காங்க. தலைவர் பாலிஸிதான் என் பாலிஸியும். மறப்போம்... மன்னிப்போம்!''

''ஸ்பெக்ட்ரம் பிரச்னை தி.மு.க-வுக்கு எதிரா இருக்குதே?''

''உண்மையில் ஸ்பெக்ட்ரம் ஒரு பிரச்னையே இல்லை. மீடியாதான் எல்லாத்துக்கும் காரணம். பரபரப்புக்காக, 'அவ்ளோ நஷ்டம்... இவ்ளோ நஷ்டம்’னு கிளப்பிவிடுறாங்க. கடைசியில், இப்போ டயர் பஞ்சர் ஆன மாதிரி புஸ்ஸுனு போயிருச்சு. எதிர்க் கட்சிகளுக்கு தி.மு.க-வைக் குறை சொல்லக் காரணமே இல்லை. அழுத குழந்தை கையில் பொம்மையைக் கொடுத்தா, அதையே வெச்சு விளையாடும். அது மாதிரி எதிர்க் கட்சிகள் ஸ்பெக்ட்ரமைக் கெட்டியாப் பிடிச்சுக்கிட்டாங்க!''  

''கலைஞர் ஆட்சியில் அவர் குடும்பத்தினரின் ஆதிக்கம் அதிகம் என்பது ஒரு முக்கியக் குற்றச்சாட்டு...''

''ஸ்பெக்ட்ரம் ஒரு பிரச்னையே இல்லை!''

''அப்படின்னு மக்களா சொன்னாங்க? எதிர்க் கட்சிகள் புதுசு புதுசா யோசிச்சு காரணம் சொல்றாங்க. 'இவ்வளவு நல்லது பண்ணி இருக்கோம்’னு தைரியமா எங்களால் சொல்ல முடியும். அவங்களால சொல்ல முடியுமா? கலைஞர் ஆட்சியில் தப்பு கண்டுபிடிக்கப் பெரிய ஆராய்ச்சியே பண்ணிட்டு இருக்காங்க!''

''கார்த்திக், விஜயகாந்த், சரத்குமார்னு உங்க சினிமா நண்பர்கள் எதிர் அணியில் இருக்காங்களே?''

''நான் அவங்களை எதிர்த்துப் பேசறதுக்காகவோ, குறைச்சுப் பேசறதுக்காகவோ அரசியலுக்கு வரலை. ஒருவேளை, அவங்க என்னைத் தாக்கிப் பேசினாலும், நான் அவங்களைத் தாக்கிப் பேச மாட்டேன். எதிர்க் கட்சி என்பதால், அவங்க எனக்கு எதிரிகள் கிடை யாது. நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் ஆனப்போ, கட்சி வித்தியாசம் இல்லாம எல்லாப் பெண் எம்.பி-க்களும் ஒண்ணா நின்னு கை கொடுத்தாங்களே... அப்படித்தான் நான் அரசியல் பண்ண ஆசைப்படுறேன்!''

''விஜய் அரசியலுக்கு வர்றதைப்பத்தி...''

''நாட்டுக்கு நல்லது பண்ணணும்னு நினைக்கும் யாரும் அரசியலுக்கு வரலாம். ஆனால், சினிமா வேற... அரசியல் வேற! சினிமாவில் கை தட்டி, விசில் அடிப்பாங்க. அவங்க அப்படியே நமக்குத்தான் ஓட்டுப் போடுவாங்கன்னு நம்பி வரக் கூடாது. அரசியல்... சினிமாவைவிடச் சிக்கலான ஏரியா!''

''சரி... சினிமா பத்திப் பேசுவோம். உங்களுக்குப் பிடிச்ச ஹீரோயின் யாரு?''

''எனக்கு ஜோதிகாவை ரொம்ப ரொம்பப் பிடிக்கும். அவங்க ஒரு கம்ப்ளீட் ஹீரோயின். ரொம்ப வருஷம் கழிச்சு, இப்போ அனுஷ்காவைப் பிடிச்சிருக்கு. 'அருந்ததி’யில் பிரமாதமான பெர்ஃபார்மன்ஸ். நல்ல உயரம், நல்ல அழகு... நம்பர் ஒன் ஹீரோயினுக்கான எல்லா தகுதிகளும் அவங்களுக்கு இருக்கு!''

''ஸ்பெக்ட்ரம் ஒரு பிரச்னையே இல்லை!''

''பலர் உங்களுக்கு ரசிகர்கள். நீங்க யாருக்கு ரசிகை?''

''நான் ஸ்கூல் படிக்கும்போது ரவி சாஸ்திரியோட ஃபேன். ஆனா, இதுவரை ஒரு தடவைகூட அவரை நேரில் பார்த்தது இல்லை. அது பெரிய வருத்தம். நடிகர்களில் நான் கார்த்திக் ரசிகை. 23 வருஷமா அவர் எனக்கு நல்ல ஃப்ரெண்ட். அவர் ஒரிஜினல் பேரான 'முரளி’ன்னு சொல்லித்தான் இப்பவும் நான் கூப்பிடுவேன். என் குழந்தைகளுக்கு அவர் பேரே தெரியாது. 'பெரியப் பா’ன்னு சொன்னாத்தான் தெரியும். என் குடும்பத்தில் அவரும் ஒருவர்!''