பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்
தலையங்கம்
தலையங்கம்
ப(க)டை வீரர்கள்!
 
தலையங்கம்

த்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகள் அரசாங்கத்துக்கு எதிராக நடத்திய 'கொள்கை வேட்டை'க்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த எழுபத்தாறு வீரர்கள் பகடைக் காய்களாகப் பலியாகிவிட்டார்கள். இந்த மாபெரும் சோகத்துக்குப் பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ராஜினாமா கடிதம் அளித்தது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். அதோடு சேர்ந்தே எதிர்பார்க்கப்பட்டது - ராஜினாமாவை பிரதமர் நிராகரிப்பார் என்பதும். அரசியல் மேடை அப்படித்தான்!

ஆனால், சுட்டிக்காட்டிய திசை நோக்கி ஆயுதத்தை ஏந்தியபடி, உயிரைப் பணயம் வைத்து, கேள்வி எதுவும் கேட்காமல் போர் நடத்தும் காவல் படையினருக்கு இந்த அரசியல் எல்லாம் தெரியாது. அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் தேசப் பற்றும் கடமை உணர்வும் மட்டுமே. தங்களையே நம்பியிருக்கும் குடும்பத்தினரின் முகங்களைக்கூட போர்முனையில் மறந்து போகும் தியாகிகள் இவர்கள்!

வீட்டுக்கு மாட்டும் பூட்டுகூட உறுதியாக இருக்கிறதா என்று இழுத்துப் பார்க்கத் தெரிந்த நமக்கு, நாட்டைக் காக்கும் வீரர்களின் நலன் மீது எத்தனை அக்கறை இருக்கிறது?

நாற்பது வருடங்களுக்கு முன்பு, உயர்ந்த மலைச் சிகரத்தில் பணியாற்றியபோது ஒரு கையை இழந்துவிட்ட ராணுவ வீரருக்கான ஓய்வூதியத் தொகை குறித்த வழக்கு ஒன்று அண்மையில் உச்ச நீதிமன்றத்துக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் மனம் வெதும்பி, வெடியோசையாக வெளிப்படுத்திய வார்த்தைகளே மேற்கண்ட கேள்விக்குச் சரியான பதில்!

'டெல்லி மாநகரில் ஒரு பாத்திரத்தை ஏந்திக்கொண்டு நடுவீதியில் பிச்சை எடுத்தாலே, ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் வரை சம்பாதித்துவிட முடியும். ஆனால், நாட்டுக்காகத் தன் கையை இழந்த இந்த வீரருக்கு மாத ஓய்வூதியம் பிச்சைக் காசு ஆயிரம் ரூபாயும், மிகச் சொற்பமான பஞ்சப்படியும்தானா? உயிரையே விலையாகக் கொடுத்து நாட்டுக்காகப் போரிடும் இந்த வீரர்களை, சராசரி மனிதர்களாகக்கூட அரசாங்கமும் அதிகாரிகளும் மதிக்காவிட்டால் எப்படி?' என்று கொந்தளித்திருக்கிறார்கள் நீதிபதிகள்.

'பாடப்படாத' இந்த நிஜ கதாநாயகர்களை பூஜிக்க மனமில்லாத தேசமே... அவர்களைப் பாடாகப் படுத்தாமலாவது இரேன்!

 
தலையங்கம்
தலையங்கம்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு