Published:Updated:

வேட்டையாடி விளையாடுகிறா போலீஸ்?

வேட்டையாடி விளையாடுகிறா போலீஸ்?

பிரீமியம் ஸ்டோரி
ம.கா.செந்தில்குமார்
வேட்டையாடி விளையாடுகிறா போலீஸ்?
வேட்டையாடி விளையாடுகிறா போலீஸ்?
வேட்டையாடி விளையாடுகிறா போலீஸ்?
ரவுடிகளின் 'காக்க காக்க' புலம்பல்
வேட்டையாடி விளையாடுகிறா போலீஸ்?
வேட்டையாடி விளையாடுகிறா போலீஸ்?

கீழே விழுந்துகிடக்கும் மோட்டார் சைக்கிளைச் சுற்றிலும் அரிவாள், கத்தி, நாட்டு வெடிகுண்டுகள் சிதறிக்கிடக்கும். போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்தைப் புறங்கையைக் கட்டியபடி வந்து பார்ப்பார்கள். பக்கத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள காயமடைந்த போலீஸாரிடம் நலம் விசாரிப்பார்கள். படுத்திருக்கும் போலீஸ்காரர்கள் முழங்கையிலும், காலிலும் கட்டு போட்டிருப்பார்கள். ஆனால், 'ஐயோ... டூட்டிக்குப் போன என் புருஷன் இப்படி சாகக்கிடக்காரே, காலையில வேலைக்கு கிளம்பிப் போன எங்க அப்பா இப்படி அடிபட்டுக் கெடக்காரே' என்று அந்த போலீஸாரின் மனைவியோ, குழந்தைகளோ சுற்றி நின்று கதறியதாக இதுவரை நான் பார்த்ததே இல்லை. இறந்த ரவுடிகளின் குடும்பத்தாரோ, 'வீட்ல சாப்பிட்டுக்கிட்டு இருந்தவனை விசாரணைனு அழைச்சுட்டுப் போய் சுட்டுக் கொன்னுப்புட்டாங்க. நியாயம் கிடைக்கும் வரை பையனோட உடலை வாங்க மாட்டோம்' என்பார்கள். பிறகு, டி.ஆர்.ஓ. தலையிட்டு சமாதானம் செய்த பிறகு உடலை வாங்கிச் செல்வார்கள். 'இது திட்டமிட்ட கொலை. என்கவுன்ட்டர் செய்த போலீஸார் மீது குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும்' என்று உண்மை அறியும் குழுவைச் சேர்ந்தவர்கள் பேட்டி கொடுப்பார்கள். 'கேள்வி கேட்கிற ஆட்களுக்கு இந்த காக்கிச் சட்டையைப் போட்டாத்தான் உண்மை விளங்கும்' என்று பதில் சவால்விடுவார் போலீஸ் அதிகாரி. இந்த என்கவுன்ட்டர் சினிமா சளைக்காமல் ஓடுகிறது தமிழ்நாட்டில்.

அயோத்திக் குப்பம் வீரமணி, கபிலன், ஆசைத்தம்பி, ஃபங்க் குமார், வெள்ளை ரவி உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் மட்டுமல்ல... ராஜாராம் போன்ற தமிழ்த் தேசியத் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களும் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளார்கள். வெங்கடேசப் பண்ணையாரின் மரணம் அரசியல் பலம்கொண்ட சக்திகளால் கண்டிக்கப்பட்ட பிறகும் எந்த நடவடிக்கையும் இல்லை. அவரது மனைவி ராதிகா செல்வி சார்ந்த கட்சி ஆளும் கட்சியாக இருக்கும் நிலையில் என்கவுன்ட்டரில் சம்பந்தப்பட்ட அதிகாரி செல்வாக்கான பதவியிலேயே தொடர்கிறார். இதை வைத்துப் பார்க்கும்போது என்கவுன்ட்டருக்கான போலீஸின் நியாயங்களை எந்த அரசாங்கமும் தடுத்துவிட முடியாது என்றே தெரிகிறது.

2006-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி. ரவுடி ஃபங்க் குமார் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட அன்று இரவு, சென்னை கமிஷனர் அலுவலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருந்தது. ஃபங்க் குமார் என்பவன் யார் என்று தொடங்கி அவனைப்பற்றிய ஏ டு இசட் தகவல்கள் பத்திரிகைகளுக்கு ஃபேக்ஸில் பறந்துகொண்டு இருந்தன. மறுநாள் நாளிதழ்களில் ஃபங்க் குமார்தான் தலைப்புச் செய்தி. அன்று காலை வழக்கறிஞர் ஒருவர் தனது சகாக்களுடன் வந்து, 'ஃபங்க் குமாரைச் சுட்டுக் கொன்ற போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கோரி கமிஷனரிடம் மனு கொடுத்தார். பின்னர் மனுவின் நகலை அங்கே இருந்த நாளிதழ்களின் நிருபர்களிடம் விநியோகித்தார். அப்போது பூனைபோல் நடந்து வந்த உளவுப் பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவர், 'தயவுசெய்து இந்தப் புகாரை செய்தியாகப் பிரசுரிக்க வேண்டாம்' என்று ஒவ்வொரு நிருபரிடமும் கெஞ்சாத குறையாக மன்றாடுகிறார். அந்தப் புகார் கிடப்பில் போடப்பட்டதைப் போன்றுதான் என்கவுன்ட்டர்களுக்கு எதிரான ஒவ்வொரு புகாரும் அமுக்கப்படு கிறது.

என்கவுன்ட்டர் செய்யப்படும் மனிதர்கள் அத்தனை பேரும் உத்தமர்கள் என்று சொல்வதற்கு இல்லை. அவர்கள் மீது என்னஎன்ன புகார்கள் உள்ளன என்று போலீஸார் கொடுக்கும் பட்டியலை யும் நிராகரிக்கவில்லை. அதற்காக கொலைகாரர்களை, கொள்ளை யர்களைச் சுட்டுப் பொசுக்கும் அதிகாரத்தை எந்தச் சட்டம் கொடுக்கிறது என்பதுதான் பிரதான கேள்வி. 'இந்த மாதிரி ரவுடிகளை நடுரோட்டுல விட்டு சுட்டாத்தான் க்ரைம் குறையும்' என்று சராசரி மனிதன் ஆதங்கப்படுவது உண்மையாக இருந்தால், கடந்த 15 ஆண்டுகளில் சுடப்பட்ட பட்டியலைப் பார்த்தால் குற்றங் கள் குறைந்திருக்க வேண்டுமே. குறையவே இல்லை.

வேட்டையாடி விளையாடுகிறா போலீஸ்?

''தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை 23 என்கவுன்ட்டர்கள் நடந்துள்ளன'' என்கிறார் மனித உரிமைச் செயல்பாட்டாளர் பேராசிரியர் அ.மார்க்ஸ். ''என்கவுன்ட்டர்களுக்கு எதிராகப் போராட்டம், மாநாடு அறிவித்தோம். என்கவுன்ட்டர் செய்த அதிகாரியின் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும், அவர் சம்பவம் நடந்த எல்லைக்கு உட்பட்ட போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்தால், அவரை சி.பி.சி.ஐ.டி. போன்ற பிற போலீஸ் பிரிவின் மூலம் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று கோரினோம். இதையடுத்து 2008-ம் ஆண்டு அரசாணை ஒன்றை வெளியிட்டது தமிழக அரசு. அதில், 'என்கவுன்ட்டர் செய்யும் அதிகாரிகளுக்கு வீரப் பரிசு தரக் கூடாது, முன்கூட்டியே பதவி உயர்வு தரக் கூடாது. அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்' என்பது உட்பட பல்வேறு விஷயங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன. ஆனால், அந்த அரசாணை இந்நாள் வரை நிறைவேற்றப்படவில்லை. அந்த அரசாணைக்குப் பிறகும் இதுவரை 10 என்கவுன்ட்டர்கள் நடந்துள்ளன.

வீரப்பன் தேடுதல் வேட்டைக்கான சிறப்பு அதிரடிப் படையின் தலைவராக இருந்த தேவாரம் 30-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்களை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றிருக்கிறார். இது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட சதாசிவம் கமிஷனிடம் தங்கம்மா என்ற பெண், தேவாரம் மீது பாலியல் தொடர்புடைய புகாரையே கூறினார். ஆனால், தேவாரத்துக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டுமனைப் பட்டா வழங்கிக் கவுரவித்தது ஜெயலலிதா தலைமையிலான அன்றைய தமிழக அரசு.

வேட்டையாடி விளையாடுகிறா போலீஸ்?

ரவுடிகள், தாதாக்கள் மாத்திரம் அல்லாமல் நீதிமன்றக் காவலில் உள்ளோரையும் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். இதற்கு நீதிமன்றம்தானே பொறுப்பு. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ராஜாராமன், சரவணன் என்ற தமிழ்த் தேசியவாதிகள் இருவரை காவல் நீட்டிப்புக்காக சிறையில் இருந்து அழைத்துச் செல்லும் வழியில் சுட்டுக் கொன்றார்கள். அதாவது, சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எதிரே இருந்த மத்திய சிறையில் இருந்து சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்கு கைதிகளை அண்ணாசாலை வழியாக அழைத்துச் செல்வதுதான் வழக்கம். ஆனால், இருவரையும் வழக்கத்துக்கு மாறாக கோட்டூர்புரம் வழியாக அழைத்துச் சென்று, அந்தப் பகுதியில் போக்குவரத்தை நிறுத்திவிட்டுச் சுட்டுக் கொன்றார்கள்.

அதேபோல் திருச்சி சிறையில் இருந்த மணல்மேடு சங்கரை போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்போவதாக அவரது அம்மா ஜோதிக்குத் தகவல் கிடைத்துக் கதறித் துடித்தார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு போட்டார். 'அதைப்போன்ற எந்தத் திட்டமும் தங்களிடம் இல்லை' என்றனர் போலீஸார். ஆனால், தாங்கள் சொன்னதற்கு மாறாக, மணல்மேடு சங்கரை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.

வெள்ளை ரவி என்கவுன்ட்டரின்போது உண்மை கண்டறியும் குழு அமைத்து விசாரணை நடத்தினோம். அப்போது அவரது மனைவி, போலீஸார் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளைக் கூறினார். நாங்கள் 2008-ம் ஆண்டு அரசாணையை மேற்கோள்காட்டி புகார் கொடுத்தும் இதுநாள் வரை விசாரிக்கப்படவில்லை.

வெளிமாநிலங்களில் ஒரு குரூப்பிடம் காசு வாங்கிக்கொண்டு வேறு குரூப் ஆட்களை என்கவுன்ட்டர் செய்வது சர்வசாதாரணம். மகாராஷ்டிராவில் தயாநாயக் என்ற போலீஸ் அதிகாரி இதுபோன்ற போலி என்கவுன்ட்டரில் சிக்கியுள்ளார். இதேபோன்று தமிழகத்திலும் போலீஸ் அதிகாரிகள் சிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை'' என்று குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார் அ.மார்க்ஸ்.

வேட்டையாடி விளையாடுகிறா போலீஸ்?

''அரசியல் பகை, அதிகாரப் பகை, பழிக்குப் பழி என ஏதோ ஒரு வகையில் இங்கு கொலைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இவனுக்கும் அவனுக்கும்தான் பகை. இவனைக் கொன்றது அவன்தான் என அனைவருக்குமே வெளிப்படையாகத் தெரிகிறது. நாங்களும் விசாரித்து சம்பந்தப்பட்ட நபரைக் கைது செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறோம். இதுபோன்ற 90 சதவிகித வழக்குகளில் தண்டனை நிரூபிக்கப்படவில்லை என்று கொலையாளியை எளிதாக வெளியே அனுப்பிவிடுகிறார்கள். அப்படி என்றால், இறந்தவன் என்ன தற்கொலையா செய்துகொண்டான்? இதுபோன்ற சமயங்களில் 'நம்மை என்னடா பண்ண முடியும். அதிகபட்சம் ஒரு மாசம் உள்ள வெப்பானுங்க' என்ற தைரியம் வந்து சம்பந்தப்பட்ட நபர் எக்கச்சக்கமாக ஆட்டம்போடும்போது என்கவுன்ட்டர் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது!'' - அடையாளத்தை மறைத்துப் பேசும் இந்த போலீஸ் அதிகாரி, காவல் துறையின் இயலாமையையும் பட்டியலிடுகிறார்.

''தமிழகத்தில் என்கவுன்ட்டர்கள் என்ற பெயரில் அப்பாவிகள் யாரும் இதுவரை செத்ததில்லை. ஏதோ ஒரு வகையில் அநியாயம் செய்தவர்கள்தான் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். அதற்காக என்கவுன்ட்டரை நான் நியாயப்படுத்தவில்லை. அதேபோல் என்கவுன்ட்டர்கள் அனைத்தும் பிடித்துவைத்து சுட்டுக் கொல்வது என்று பொத்தாம்பொதுவாகக் குற்றம்சாட்டுவதும் தவறு. வெளியே இருந்தால், கூலிக்காகவோ, சாதி உணர்விலோ கூட்டு சேர்ந்துகொண்டு கொலை செய்கிறான் என்று உள்ளே பிடித்துப்போட்டால், அங்கேயும் போய் ஸ்கெட்ச் போட்டுக்கொண்டு இருக்கிறவனை என்ன செய்து தான் திருத்த முடியும்? நல்லவர்கள் நிம்மதியாக நடமாட சிலர் பலியிடப்படுவதில் தவறு இல்லை என்ற முடிவுக்கு வரவேண்டி இருக்கிறது.

காவிரி டெல்டா ரவுடிகள் என்கவுன்ட்டர் சம்பவங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். முட்டை ரவிக்கும் மணல்மேடு சங்கருக்கும் தீராத சாதிப் பகை. முட்டை ரவிக்கு ஓர் அரசியல்வாதி அடைக்கலம் கொடுத்தார். அதனால், அந்த அரசியல்வாதி மீதும் சங்கருக்குக் கோபம். சமயம் கிடைக்கும்போது போட்டுவிட இரு தரப்பும் காத்திருந்தது. இரு தரப்பிலும் ஏகப்பட்ட உயிர்ச்சேதம். மக்கள் பயத்தில் தவித்தனர். வேறு வழியின்றி போலீஸ் துப்பாக்கிக்கு இருவரும் இரையானார்கள். பழைய பகையை மனதில்வைத்து சங்கர் குரூப் ஆட்கள் லோக்கல் ஆசாமிகளுடன் சேர்ந்து அந்த அரசியல்வாதியையே கொன்றனர். அதற்காகக் கைது செய்யப்பட்ட சங்கர் ஆட்கள் தற்போது அவரது தம்பியைக் கொலை செய்யத் திட்டமிட்டது தெரியவந்ததால்தான் குற நடராஜன் என்கவுன்ட்டர் செய்யப்பட்டு இருக்கிறான் என நினைக்கிறேன்.

வழக்கைச் சரியாக நடத்தாததால், குற்றவாளிகள் தப்பிக்க போலீஸாரும் ஒருவகையில் காரணமாக இருக்கிறார்கள் என்பது உண்மைதான். இதற்கு போலீஸ் அதிகாரிகளை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. பல்வேறு காரணங்களால் போலீஸார் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுவதும் ஒரு காரணம். இன்று நடந்த கொலைபற்றி விசாரிக்கத் தொடங்கும் இன்ஸ்பெக்டரை நாளை வேறு இடத்துக்கு மாற்றிவிடுகிறார்கள். புதிதாக அந்த வழக்கைக் கையில் எடுப்பவர் தலையும் புரியாமல் வாலும் புரியாமல் தவிப்பார். இதனால் சரியான சாட்சிகள், ஆதாரங்களோடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியாமல் போகலாம். மேலும், போலீஸாரை வி.ஐ.பி. பந்தோபஸ்து உட்பட பல்வேறு பணிகளுக்கு அனுப்புவதாலும் வழக்கு விசாரணை பாதிக்கப் படுகிறது.

வேட்டையாடி விளையாடுகிறா போலீஸ்?

குறிப்பிட்ட வழக்கை எடுத்துக் கொண்டு அது முடியும் வரை வேறு வழக்கைக் கையில் எடுக்காததால் தான் எங்களைவிட சி.பி.சி.ஐ.டி, சி.பி.ஐ. போலீஸார் குற்றவாளி களுக்கு அதிக வழக்குகளில் தண்டனை பெற்றுத் தருகிறார்கள். போலீஸ் கமிஷனில் குறிப்பிட்டுள்ளதைப்போல போக்குவரத்து போலீஸைத் தவிர, சட்டம் - ஒழுங்கு, விசாரணை, நீதிமன்றத்தில் வாதாடுதல் என போலீஸாரை மூன்று பிரிவுகளாகப் பிரித்தால் மட்டுமே இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு ஏற்படும்'' என்கிறார் அந்த அதிகாரி.

இதற்கிடையில் மதுரை 'பீப்பிள்ஸ் வாட்ச்' அமைப்பின் செயல் இயக்குநர் ஹென்றி டிஃபேன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், 'என்கவுன்ட்டர் மரணங்களைப்பற்றி ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்' என்று கோரியுள்ளார். இதுபற்றி பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் மூலமாவது என்கவுன்ட்டர் மரணங்களுக்கு முற்றுப்புள்ளிவைத்தாக வேண்டும். சமீபத்தில் மதுரையில் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட இரண்டு பேர் மீது மிகச் சாதாரணமான வழக்குகள்தான் இருந்தன. அது போன்ற ஆட்களை அசகாயச் சூரர்களாகக் காட்டி என்கவுன்ட்டர் செய்வது, குற்றங்களையும் குறைக்காது. போலீஸையும் பெருமைப்படுத்தாது. ஆளுங்கட்சியின் எல்லைக் கோட் டுக்குள் உள்ளே போய்விட்ட வர்களை இந்த என்கவுன்ட்டர் பூதம் கடிப்பதில்லை. வெளியே நிற்பவர்களைத்தான் விரட்டுகிறது.

குற்றவாளி செய்தாலும் போலீஸ் செய்தாலும் கொலை என்பதன் அர்த்தம் கொலைதான். நீதிமன்றங்களே தூக்குத் தண்டனைகள் வழங்கக் கூடாது எனும்போது போலீஸ் மட்டும் விதிவிலக்கா என்ன?

 
வேட்டையாடி விளையாடுகிறா போலீஸ்?
வேட்டையாடி விளையாடுகிறா போலீஸ்?
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு