Published:Updated:

ஸ்ரீரங்கத்தில் போலீஸ் துணையுடன் பணம் பட்டுவாடா ஆகிவிட்டது: கருணாநிதி

ஸ்ரீரங்கத்தில்  போலீஸ் துணையுடன்  பணம் பட்டுவாடா ஆகிவிட்டது: கருணாநிதி
ஸ்ரீரங்கத்தில் போலீஸ் துணையுடன் பணம் பட்டுவாடா ஆகிவிட்டது: கருணாநிதி

ஸ்ரீரங்கத்தில் போலீஸ் துணையுடன் பணம் பட்டுவாடா ஆகிவிட்டது: கருணாநிதி

ஸ்ரீரங்கத்தில்  போலீஸ் துணையுடன்  பணம் பட்டுவாடா ஆகிவிட்டது: கருணாநிதி

சென்னை: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போலீசார் துணையுடன் வாக்களர்களுக்குப் பணம் விநியோகிக்கப்படுவதாக   திமுக தலைவர் கருணாநிதி கடுமையாகக்  குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," நேற்றிரவு முழுவதும் ஸ்ரீரங்கம் தொகுதியில் அனைத்துப்  பகுதிகளிலும் வாக்காளர்களுக்கு வாக்கு ஒன்றுக்கு இரண்டாயிரம் ரூபாய் வீதம் ஆளுங்கட்சியினரால், அமைச்சர்களின் மேற்பார்வையில் முறையாக வழங்கப்பட்டு விட்டது.

குறிப்பாக ஒரு சில இடங்களில் மனசாட்சியுள்ள வாக்காளர்கள் அதிமுக வினர் கொடுத்த தொகையை வாங்க மறுத்த போது, அ.தி.மு.க. வினர் வலுக்கட்டாயமாக அந்த வாக்காளர்களின் வீடுகளில் பணம் அடங்கிய கவர்களை வைத்து விட்டு சென்றிருக்கிறார்கள்.

மற்ற எதிர்க்கட்சிக்காரர்கள் உடனடியாகச்  சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளை தொடர்பு கொள்ள, ஏற்கனவே விளம்பரம் செய்யப்பட்டிருந்த தொலைபேசி எண்களான 94450 29700, 75980 54455, 09448 90830, 74026 07627, 94441 74000, 94431 53253 ஆகியவற்றுக்கு தொடர்பு கொள்ள முயன்ற போது, எந்தப்  தொலைபேசியிலும் பதிலளிக்க ஆளில்லை.

இதிலிருந்து, அனைவரும் ஒருங்கிணைந்து கூட்டுச்சதியில் ஈடுபட்டே வாக்குகளுக்கு பணம் வாரி வழங்கப்பட்டிருக்கிறதென திருச்சி பத்திரிகையாளர்கள் பேசிக்கொள்கிறார்கள். நேரில் சென்று பணம் வழங்குவதை தடுத்திட முயற்சித்தவர்கள், ஆளுங்கட்சி குண்டர்களால் கடுமையாக ஆங்காங்கே தாக்கப்பட்டிருக்கிறார்கள்.

யாராலும், எதுவும் செய்ய இயலாதபடி, மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும், தேர்தல் ஆணையமும் கைகோர்த்துக்கொண்டு காரியத்தை முடித்து விட்டது.

நேற்றைய தினமே ஸ்ரீரங்கத்தில் பா.ஜ.க.வை சேர்ந்த தொண்டர்கள் மீது அ.தி.மு.க.வினர் பயங்கர தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இன்னொரு சம்பவத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களையும் சரமாரியாகத்  தாக்கியிருக்கிறார்கள். பாஜகவினர் மீது குறிப்பாக ஒரு வயதான பிரமுகர் மீது அ.தி.மு.க.வினர் உதைப்பதையும், கொடிக்கம்பால் அடிப்பதையும், அதைக்  கவனிக்காமல் காவல்துறையினர் வேறு பக்கம் பார்த்துக்கொண்டிருப்பதையும் புகைப்படமாகவே சில நாளேடுகள் வெளியிட்டிருக்கின்றன.

வீரேஸ்வரம் மேலத்தெருவில் பா.ஜ.க.வினர் பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது, அதை மறித்து அந்த பிரசார வாகனத்தில் இருந்த மைக்கை பிடுங்கி அ.தி.மு.க.வினர் எறிந்ததோடு, பா.ஜ.க. மாவட்ட தலைவர் பார்த்திபனை மைக்கின் ஒயரைக்கொண்டு தாக்கியிருக்கிறார்கள்.

அது போலவே கம்பரசம் பேட்டையில் மார்க்சிஸ்ட் கட்சித்தோழர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது, அந்த கட்சியைச்  சேர்ந்த சசிக்குமார் என்பவர் பேசிக்கொண்டிருந்ததை மறித்து அவரை அ.தி.மு.க.வினர் தாக்கியிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பா.ஜ.க., மார்க்சிஸ்ட் கட்சிகளைச்  சேர்ந்தவர்களும், இந்த அட்டூழியங்களைக்  கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இதன் தொடர்ச்சியாகத்தான் நேற்றிரவு முழுவதும் வாக்காளர்களுக்குப்  பணம் கொடுக்கின்ற காரியத்தை அ.தி.மு.க.வினர் செய்து முடித்துள்ளார்கள்.

சென்னையிலே உள்ள தலைமை தேர்தல் அதிகாரி இந்த தேர்தல் முறையாக நடக்கவேண்டுமென்று விரும்பிய போதிலும், அவருக்கு அடுத்த நிலையிலே உள்ளவர்களும், குறிப்பாக திருச்சியிலும், ஸ்ரீரங்கத்திலும் உள்ள அதிகாரிகள் ஆளுங்கட்சியினரின் எடுபிடிகளாகவும், ஏவலுக்கு கட்டுப்படும் சேவகர்களாகவும் செயல்படுகிறார்கள்.

பயங்கரவாதத்தையும், கொடிய வன்முறையினையும் அரங்கேற்றி விட்டு அந்தப்  பரபரப்பில் பணப்பட்டுவாடாவை அதிகாரவர்க்கத்தின் துணையோடு நிறைவேற்றி, பணநாயகத்தை முன்னிலைப்படுத்திய ஆளுங்கட்சியின் ஜனநாயக விரோதமான அராஜக செயல்பாடுகளை தி.மு.க.வின் சார்பில் மிகவும் வன்மையாக கண்டிப்பதோடு, தேர்தல் ஆணையம் இதற்குரிய நடவடிக்கைகளை இப்போதாவது விழித்தெழுந்து மேற்கொள்ள வேண்டுமென்றும்; அரசியல் சட்டத்தையும், மக்களாட்சி நெறி முறைகளையும் பாதுகாத்திட தங்கள் கடமையினை ஆற்றிட வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன்" என்று  வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு