பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்
தலையங்கம்

'எந்த மலரும் நாம் விரும்பியதால் மலரவில்லை. களைகள், நாம் விரும்பாத போதும் முளைக்காமல் இருப்பதில்லை!' - ஜப்பானிய மண்ணில் பூத்த டோகன் எனும் ஞானி 12-ம் நூற்றாண்டில் சொன்னது இது.

இரண்டாம் உலகப் போரின்போது, ராட்சதக் களையாக ஹிரோஷிமாவிலும் நாகசாகியிலும் முளைத்து எழும்பிய அணுகுண்டுப் புகையின் மூட்டம் தணிவதற்குள்ளேயே, அதில் இருந்து நிமிர்வதற்கான ஆன்ம பலத்தைத் தங்கள் மனத் தோட்டத்தில் பூக்கச் செய்தவர்கள் ஜப்பானியர்கள்!

'நாளையைப்பற்றி நீ பேசினால், கூரையில் இருக்கும் எலிகளும் சிரிக்கும்' என்பது இவர்களின் ஒரு பண்டைய பொன்மொழி. ஆனால், தீர்க்கமான புத்திசாலித்தனமும், கட்டுப்பாடான சுறுசுறுப்பும் இருந்துவிட்டால், எதிர்காலம் நம் காலடியில் மண்டியிடும் என்று நிரூபித்து முன்னேறியவர்கள் அவர்கள்.

இருந்தாலும், 'அயராத உழைப்பும் அசாத்திய மன வலிமையும் இருந்தால், தாண்டி வர முடியாத சோதனைகளே இல்லை' என்பதை உலகத்துக்கு உணர்த்தும் எடுத்துக்காட்டாக, திரும்பத் திரும்ப ஜப்பானையே இயற்கை தேர்ந்தெடுப்பதுதான் விசித்திரமான கொடுமை!

பூகம்ப நடுக்கமோ, எரிமலைக் குமுறலோ, அணு அபாயமோ, 'துறைமுகப் பேரலை' என்று இவர்கள் பெயரிட்டு அழைக்கும் சுனாமி அரக்கனோ... இந்த 'சாமுராய்' தேசத்தின் மீது போர் தொடுப்பது புதிதல்ல என்றாலும், இம்முறை நிகழ்ந்திருக்கும் பேரழிவு... இந்த தீவுக் கூட்ட நாட்டின் மீது விழுந்த பேரிடி.

உணவு, உறைவிடம், குடிநீர் எல்லாம் பறிக்கப்பட்டு... உயிர் வாழ்க்கையே கேள்விக் குறி ஆனபோதும்... கதவுகளே இல்லாமல் திறந்துகிடக்கும் கடைகளின் முன்னால் வரிசையில் நின்று குடி நீரும் உணவும் இவர்கள் வாங்கிச் சென்ற கட்டுப்பாடு ஒன்றே போதும்...

எத்தனை முறை கடலுக்குள் புதைந்தாலும், இந்த 'சூரியனின் தேசம்' மறுபடி ஒளியோடு உதித்து எழும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு