Published:Updated:

பீகார் மாநில முதலமைச்சராக 22 ஆம் தேதி பதவியேற்கிறார் நிதிஷ் குமார்!

பீகார் மாநில முதலமைச்சராக 22 ஆம் தேதி பதவியேற்கிறார்  நிதிஷ் குமார்!
பீகார் மாநில முதலமைச்சராக 22 ஆம் தேதி பதவியேற்கிறார் நிதிஷ் குமார்!
பீகார் மாநில முதலமைச்சராக 22 ஆம் தேதி பதவியேற்கிறார்  நிதிஷ் குமார்!

பாட்னா: பீகார் மாநில முதலமைச்சராக நிதிஷ்குமார் நாளை மறுநாள் (22ஆம் தேதி) பதவியேற்கிறார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில், பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று, நிதிஷ் குமார் முதல்வர்  பதவியிலிருந்து விலகினார். அதைத் தொடர்ந்து, அவரது தீவிர ஆதரவாளராக இருந்த ஜிதன் ராம் மான்ஜி , கடந்த மே மாதம் 20 ஆம் தேதி முதல்வராக பதவியேற்றார். ஆனால் நிதிஷ் குமார் இப்போது முதல்வர்  பதவியை ஏற்க விரும்பினாலும், அவருக்கு மான்ஜி வழி விட மறுத்துவிட்டதால் பீகாரில் அரசியல் குழப்ப நிலை உருவாகியது.

இதனையடுத்து பீகார் சட்டமன்றத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருந்த நிலையில் முதல்வர் மான்ஜி  தனது பதவியை ராஜினாமா செய்தார்.மான்ஜி தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் கேசாரி நாத் திரிபாதியிடம் வழங்கினார். கடிதத்தில் ஒரு வரியில் மட்டும் ராஜினாமா சமர்பிக்கப்பட்டது என்று குறிப்பிட்டு இருந்தார்.

காலை 10 மணியளவில் கவர்னரை மான்ஜி 15 நிமிடங்கள் சந்தித்து பேசியபோது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார். சட்டமன்றத்தில்  பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மான்ஜி , தனக்கும், தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கும் கொலை மிரட்டல் வந்ததையடுத்து ராஜினாமா செய்ததாகக்  கூறினார். இதனையடுத்து பீகார் சட்டமன்றம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், பீகார் மாநில முதலமைச்சராக ஐக்கிய ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ் குமார் நாளை மறுநாள் (22ஆம் தேதி) பதவியேற்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே,  நிதிஷ் குமார் மாநில மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ் குமார், பாஜக,  பீகாரில் எங்களுடைய கட்சியை உடைக்க முயற்சி செய்கிறது என்று குற்றம் சாட்டினார்.

 "பா. ஜனதா, பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளத்தை உடைக்க முயற்சி செய்தது, ஆனால் தோல்வி அடைந்துவிட்டது. நான் என்னுடைய தவறை உணர்ந்து கொண்டேன். நான் என்னுடைய மக்களிடம் மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். பீகாரில் ஆட்சி அமைக்க நாங்கள் ஏற்கனவே எங்களுடைய பெரும்பான்மையைக்  காட்டிவிட்டோம். கவர்னர் விரைவில் எங்களை ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார்" என்று அவர்  தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பீகார் மாநில முதலமைச்சராக நிதிஷ்குமார் நாளை மறுநாள் (22ஆம் தேதி) பதவியேற்பார் என ஐக்கிய ஜனதா தளக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.