Published:Updated:

மோடி ஆடை ரூ.4.31 கோடிக்கு ஏலம் போனது!

விகடன் விமர்சனக்குழு
மோடி ஆடை ரூ.4.31 கோடிக்கு ஏலம் போனது!
மோடி ஆடை ரூ.4.31 கோடிக்கு ஏலம் போனது!

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் ஒபாமா உடனான சந்திப்பின்போது பிரதமர் மோடி அணிந்திருந்த ஆடை ரூ.4.31 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன், ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மோடி, வயலட்நிற பந்த்கலா கோட் என்ற உயர்ரக கோட், சூட் ஆடை அணிந்திருந்தார்.

மோடி ஆடை ரூ.4.31 கோடிக்கு ஏலம் போனது!

அந்த கோட்டில், தங்க நிறத்தில் நரேந்திர தாமோதர்தாஸ் மோடி என்று அனைத்து லைனிலும் அவரது பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி அணிந்து இருந்த ஆடையின் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் என்று  எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியும், டெல்லியில் பிரசாரம் செய்தபோது கடுமையாக விமர்சனம் செய்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடி அணிந்திருந்த ஆடை மற்றும் கடந்த 9 மாதங்களில் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட 455 அன்பளிப்புகள் சூரத்தில்  ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, நேற்று முன்தினம் ஏலம் தொடங்கியது. மோடியின் ஆடை முதலில் ஏலம் அறிவிக்கப்பட்டபோது, ராஜுபாய் அகர்வால் என்பவர் அதனை 51 லட்சம் ரூபாய்க்கு ஏலம் கேட்டார். அதனைத் தொடர்ந்து சுரேஷ் அகர்வால் என்பவர் 1 கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்டார். அவரைத் தொடர்ந்து குஜராத்தை சேர்ந்த வெளிநாட்டு இந்தியர் விரால் சவுக்சி என்பவர் 1.11 கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்டார். பின்னர், ராஜேஷ் ஜுனேஜா என்ற தொழிலதிபர் 1.21 கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்டார். 

தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று நடந்த ஏலம் ரூ.1.25 கோடியுடன் தொடங்கியது. முதலில் முகேஷ் படேல் என்பவர் ரூ. 1.39 கோடிக்கு கேட்டார். இதனையடுத்து கோமால்காந்த் சர்மா என்பவர் ரூ. 1.41 கோடிக்கு ஏலம் கேட்டார். அத்துடன் நேற்றைய ஏலம் முடிவடைந்தது.

இந்நிலையில் இன்று இறுதிக்கட்ட ஏலம் விடப்பட்டது. அப்போது, குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி லால்ஜிபாய் பட்டேல் ரூ.4.31 கோடிக்கு ஏலம் கேட்டார். அதைத் தொடர்ந்த மோடியின் உடை அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த ஏலத்திலிருந்து வசூலான ரூ.4.31 கோடி ரூபாயும், கங்கா நதி தூய்மை திட்டத்துக்காக தரப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.