Published:Updated:

அரசியல் மாற்றத்தை தமிழக மக்கள் எதிர்பார்துள்ளனர்: மு.க.ஸ்டாலின் பேச்சு!

விகடன் விமர்சனக்குழு
அரசியல் மாற்றத்தை தமிழக மக்கள் எதிர்பார்துள்ளனர்: மு.க.ஸ்டாலின் பேச்சு!
அரசியல் மாற்றத்தை தமிழக மக்கள் எதிர்பார்துள்ளனர்: மு.க.ஸ்டாலின் பேச்சு!
அரசியல் மாற்றத்தை தமிழக மக்கள் எதிர்பார்துள்ளனர்: மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை: தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்று தொண்டர்கள் மத்தியில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்த நாளில் உரையாற்றினார்.

திமு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்த நாளையொட்டி சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றும்போது, ''உங்களின் ஆர்வத்தையும், ஆரவாரத்தை பார்க்கும்போது நிச்சயமாக உங்களுடைய வாழ்த்துக்கள் எனக்கு உற்சாகத்தை வழங்கிடும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

பேரறிஞர் அண்ணா வழியில் இன்றைக்கும் நம்மை வழி நடத்திக் கொண்டிருக்கக்கூடிய நம்முடைய தலைவர் கலைஞர் திராவிட இயக்கத்தை வளர்ப்பதற்காக எந்த அளவிற்கு அரும் பாடுபட்டு இருக்கிறார்கள் என்பது உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும். இப்படிப்பட்ட தலைவருடைய தொலை நோக்கு தான் நம்மைபோன்ற இளைஞர்களை இன்றைக்கு ஓரளவுக்கு பக்குவப்படுத்தி, தொடர்ந்து நாம் ஆற்றக்கூடிய பணிகளுக்கு உரமூட்டக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

மார்ச் 1 ஆம் தேதியை பாகுபாடு ஒழிக்கக் கூடிய தினமாக ஐக்கிய நாடுகள் சபை இந்த நாளை கொண்டாடுகிறது. அதனால், கருணாநிதியின் வழி காட்டுதலோடு அதை மனதிலே வைத்துக் கொண்டு நம்முடைய கழகம் பாடுபட வேண்டும். அந்த பாகுபாடுகளை ஒழிப்பதற்கு நாம் சபதம் ஏற்க வேண்டும், உறுதி எடுக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றுதான் என்பதை நினைவுபடுத்தக் கூடிய வகையில் இந்த மார்ச் 1 ஆம் நாள் இருந்திட வேண்டும்.

நம் அனைவருடைய நரம்புகளில் ஓடுவது ஒரே ரத்தம்தான் என்பதை நாம் மறந்துவிட முடியாது. நம்மை உயிரோடு வைத்திருக்கக் கூடிய ரத்தம், மற்றவரை உயிரோடு இருக்கவைக்கவும் உதவுகிறது. கடவுள் மீது நம்பிக்கைக் கொண்டிருப்பவர்கள் தரக்கூடிய ரத்தம் கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்களை வாழ வைக்கிறது. அதேபோல், கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் தரக்கூடிய ரத்தம் கடவுள் மீது நம்பிக்கை உள்ளவர்களை வாழவைக்கிறது. அதனால், ரத்தத்தை பொறுத்தவரையிலே பாகுபாடு கிடையாது.

அதனால், மார்ச் 1 ஆம் தேதியிலிருந்து இந்த மாத இறுதிக்குள்ளாக 1 லட்சம் யூனிட் ரத்தம் நம்முடைய இளைஞர் அணியின் சார்பில் வழங்கப்பட்டிருக்கிற செய்தி வந்தாக வேண்டும் என்று என்னுடைய வேண்டுகோளை உங்கள் முன் வைக்கிறேன். இந்த மார்ச் 1 ஆம் தேதியை இளைஞர் எழுச்சி நாளாக மட்டுமல்ல, பாகுபாடு ஒழிப்பு தினமாகவும் நாம் இன்றைக்கு நடத்துகிறோம் என்பதை மனதில் வைத்துக் கொண்டு ரத்ததானம் வழங்குவதற்கு அனைவரும் உறுதி எடுப்போம்.

தமிழக மக்கள் அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை எதிர் நோக்கி காத்திருக்கிறார்கள். அதற்காக நாம் உறுதி ஏற்று பாடுபடுவோம் என்று உங்களை எல்லாம் நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். இதை நான் என்னுடைய பிறந்த நாள் செய்தியாக, வாழ்த்து சொல்ல வந்திருக்கக் கூடிய உங்கள் அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறேன்" என்றார்.

மேலும், மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளையொட்டி ரத்த தானம் செய்யும் படி தொண்டர்களுக்கு வேண்டுக்கோள் விடுத்ததோடு நில்லாமல் தானும் ரத்த தான முகாமில் கலந்து கொண்டு ரத்தம் வழங்கினார். இதேபோல், அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் ரத்த தானம் செய்தார்.