ஜனவரி 12-ம் தேதி மாலை 4.53-க்கு ஹைத்தி தீவில் கடலுக்கு அடியில் டெக்டானிக் பிளேட்டுகள் உரசிக்கொண்டது, தொடர் துயரங்களின் உச்சகட்ட சோகம். சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், இந்தத் தீவில் இருந்த பலவீனமான பள்ளிக்கூடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 500 குழந்தைகள் அப்படியே இறந்துபோனார்கள். சென்ற ஆண்டு, அடுத்தடுத்து இந்தத் தீவைத் தாக்கிய புயல் மழையில் ஏராளமான வீடுகள் கரைந்தன. சுமார் 10 லட்சம் மக்கள் வீடுகளை இழந்தனர். மிச்சம் இருந்த கட்டடங்களையும் அந்தப் பேய் மழை பலவீனமாக்கிச் சென்றது. இப்போது ஏழு ரிக்டர் ஆவேசத்தோடு பூமி குலுங்கி, எஞ்சிய கட்டடங்களைக் கலைத்துக் குலைத்து நாசப்படுத்திவிட்டது.
45 விநாடிகள்தான்... வட அமெரிக்காவுக்கும் தென் அமெரிக்காவுக்கும் இடையே கண்ணீர்த் துளி வடிவில் மிதந்துகொண்டு இருந்த தீவு, உலகின் பிரமாண்டமான கல்லறையாகிவிட்டது. ஜனாதிபதி மாளிகையில் இருந்து சாதாரணனின் வீடு வரை சர்வ நாசம். தீவின் அத்தனைக் கட்டடங்களும் பெரும் சத்தத்துடன் சரிந்தபோது, உயிர் பயத்தின் ஓலம் உலகையே உலுக்கியது. இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்துக்கும் மேலே என்பது உறுதி. இடிபாடுகளுக்குச் சிக்காமல் தப்பிப் பிழைத்த சிலரையும் புழுதிப் புயல் மூச்சுத் திணற வைத்துச் சாகடித்தது. கொடுமையிலும் கொடுமையாக, அந்த நாட்டில் இருந்த இரண்டே தீயணைப்பு நிலையங்களும்கூட இடிந்துபோனதில், தீயணைப்பு வாகனங்கள் இடிபாடுகளில் சிக்கிச் செயலிழந்துவிட்டன. சுமார் 90 லட்சம் கறுப்பின மக்களின் வசிப்பிடமாக விளங்கும் அந்தத் தீவில் எத்தனை லட்சம் பேர் இறந்தார்கள் என்பதைக் கணக்கெடுக்கக்கூட அங்கே கட்டமைப்பு வசதிகள் இல்லை. காயமடைந்து உயிருக்குப் போராடும் லட்சக்கணக்கான மக்களுக்கு முதலுதவி செய்ய மருத்துவ உபகரணங்களோ, மருந்து மாத்திரைகளோ இல்லை. ‘இறந்துபோனவர்கள் பாக்கியவான்கள்!’ என்று உயிர் மட்டும் மிச்சம் இருப்பவர்கள் கதறிக் கொண்டு இருக்கிறார்கள்.
|