Published:Updated:

கழகத்தில் ஜூலைக் கலகம் !

கழகத்தில் ஜூலைக் கலகம் !

கழகத்தில் ஜூலைக் கலகம் !

கழகத்தில் ஜூலைக் கலகம் !

Published:Updated:

ப.திருமாவேலன் படங்கள் :க.குமரேசன்
கழகத்தில் ஜூலைக் கலகம் !
கழகத்தில் ஜூலைக் கலகம் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கழகத்தில் ஜூலைக் கலகம் !
கழகத்தில் ஜூலைக் கலகம் !

தொடர்ந்து வெற்றிகள் குவிந்தாலும், தி.மு.க. தலைமை மகிழ்ச்சியாக இல்லை!

நாளை, நாளை மறுநாள் என்ன நடக்குமோ என்ற பதற்றம் அறிவாலயத்தில் சுழன்றடிக்க ஆரம்பித்திருக்கிறது. இன்றைய தி.மு.க-வில் இரண்டு அணிகளையும் தலைமையேற்று நடத்துபவர்கள் கட்சியின் தலைவரான கருணாநிதியின் மகன்கள் என்பதால், அவர்களது ஒவ்வோர் அசைவும் கட்சியில் பலத்த அதிர்வுகளை உண்டாக்குகிறது. இந்தப் புதிய பூகம்பத்தின் ரிக்டர் அளவு இந்த வாரத்தில் ரொம்பவே அதிகம்!

முதல்வர் கருணாநிதி சில மேடைகளில் உதிர்க்கும் வார்த்தைகள் அதற்குக் கட்டியம் கூறுவதாகவே இருக்கின்றன. ''புதிய சட்டசபைக் கட்டடம் திறப்பு, அண்ணா நூற்றாண்டு நூலகம் திறப்பு, உலகச் செம்மொழி மாநாடு ஆகிய விழாக்களில் பங்கேற்ற பிறகு, இந்த அரசியல், அமைச்சர் பதவிகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு, மக்களுடன் உங்களில் ஒருவனாக என்னை நெருக்கமாக இணைத்துக்கொள்வேன்'' என்று கடந்த டிசம்பர் 5-ம் நாள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த விழாவில் முதல்வர் கருணாநிதி அறிவித்தபோது, தொண்டர்கள் மத்தியில் ஆச்சர்யமோ, அதிர்ச்சியோ இல்லை. 'தலைவா ஓய்வுபெறாதே!'என்று கண்ணீர் வடிக்கும் அறிக்கைகளோ, விளம்பரமோ இல்லை. காரணம், அது கோபாலபுரத்துக்குள் மட்டுமே வெடித்த கோபக் குண்டு என்பதைத் தொண்டன் உணர்ந்திருந்தான்.

கழகத்தில் ஜூலைக் கலகம் !

மீண்டும் வள்ளுவர் கோட்டம் - திருவள்ளுவர் திருநாள் விழா. ''நாங்கள் விட்டுச்செல்கிற பணிகளையெல்லாம் அவர் (ஸ்டாலின்) ஆற்ற வேண்டும். அவரும் நீங்களும் தொடர வேண்டும்''என்று உருகியிருக்கிறார் முதல்வர். ''அடுத்த முதல்வர் யார் - கருணாநிதி விளக்கம்''என்று தினப் பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடும் அளவுக்கு கருணாநிதியின் பேச்சு சூட்சுமங்கள் நிறைந்ததாக இருந்தது.

கடந்த ஞாயிறன்று நடந்த திருமணம் ஒன்றில் 'கத்தியைத் தீட்டாதே, புத்தியைத் தீட்டு'என்று அவர் எதிர்க்கட்சிகளை நோக்கிச் சொல்லியிருப்பதையும், சொந்தக் கட்சிக்குச் சொன்னதாகவே உள்விவகாரங்கள் அறிந்தவர்கள் சொல்கிறார்கள். தி.மு.க-வை வீழ்த்தும் பலத்தில் எந்த எதிர்க்கட்சிகளும் இல்லாதபோது அவர்களைப்பற்றி கருணாநிதி பயந்து பேச வேண்டிய அவசியம் இல்லை.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்ததும், அதன் வெற்றிக்கு முழுமையாக இரண்டு மாத காலம் உழைத்ததற்காக அமைச்சர் மு.க. ஸ்டாலின் துணை முதல்வராக ஆக்கப்பட்டார். அவர் முதல்வராக இருக்கும் வரை இவர் துணை முதல்வராக இருப்பார் என்பதே அன்றிருந்த நிலை. ஆனால், நிலைமை அப்படியே தொடரவில்லை. ''ஸ்டாலின் முதல்வராக இருப்பதை கலைஞர் பார்க்க வேண்டும். அவர் இருந்து வழிநடத்த வேண்டும்''என்று குடும்பத்துக்குள் பேச்சுக்கள் கிளம்பின. இது கருணாநிதியே எதிர்பாராதது. ''அப்படியானால், ஜூன் மாதம் நானே விலகிக்கொள்கிறேன்''என்று பகிரங்கமாக கருணாநிதி அறிவித்தார். அது இன்னொரு பக்கத்தில் வெடிப்பை ஏற்படுத்தியது. இந்தப் பதவி விலகலை மகன் அழகிரியும், துணைவி ராஜாத்தியும் விரும்பவில்லை என்று செய்தி கிளம்பியது. 'தங்களது அரசியல் வாழ்க்கைக்கு வைக்கப்பட்ட முற்றுப்புள்ளியாக அவர்கள் இதைப் பார்க்க ஆரம்பித்தார்கள்'என்று தி.மு.க. வட்டாரத்தில் பகிரங்கமாகப் பேசப்பட்டது. ''தலைவர் விலக மாட்டார். அவருக்குள்ள பொறுப்புகள் விலகவிடாது''என்று அழகிரி அடித்த கமென்ட் உள்கோபத்தை வெளிப்படுத்தியது.

''ஸ்டாலினுக்குப் பதவி கொடுப்பதைப்பற்றிக் கவலை இல்லை. ஆனால், எனக்குக் கட்சியில் பொதுச் செயலாளர் பதவி வேண்டும்''என்று அழகிரி நினைப்பதாக அவரது ஆதரவாளர்கள் வெளியில் ஒரு தகவலைப் பரப்பினார்கள். மத்திய அமைச்சர், தென் மண்டல தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆகிய இரு பதவிகள் அழகிரி வசம் உள்ளன. அவை அவருக்குப் போதுமான மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை என்றே தெரிகிறது. நாடாளுமன்ற விவாதங்களில் கலந்துகொள்ளாதது, உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லாதது ஆகியவை டெல்லிப் பத்திரிகைகளால் மிக மோசமாகக் கிண்டலடிக்கும் காட்சிப்பொருளாக இருக்கிறது. சபையில் தமிழில் பதிலளிக்க வாய்ப்பு கேட்டு சபாநாயகருக்கு அவர் கடிதம் அனுப்பினார். கருணாநிதியும் பிரதமரிடம் பேசியிருக்கிறார். ஆனால், சபாநாயகரை அழகிரி சந்திக்க வில்லை. ''ஐந்து தடவைக்கு மேல் அழைப்பு அனுப்பியும் அமைச்சர் வந்து பார்க்கவில்லை''என்றார் அவர். 'அழகிரி டெல்லிக்கு வருவதே இல்லை. வந்தாலும் துறை அலுவலகத்துக்கு வருவதில்லை. அவரிடம் தமிழ்ப் பத்திரிகையாளர்கள் மட்டும் தனியே சந்திக்க அனுமதி கேட்டோம். அதற்கும் சம்மதிக்கவில்லை. அவரது இருப்பு ரகசியமாக இருக்கிறது'என்று டெல்லிப் பத்திரிகை யாளர்கள் புலம்புகிறார்கள். எனவே, மத்திய அமைச்சர் பதவியைவிட கட்சியில் பதவி கிடைப்பதையே முக்கியமானதாக அழகிரி நினைக்கிறார்.

கழகத்தில் ஜூலைக் கலகம் !

''தென்மண்டல அமைப்புச் செயலாளர்கட்டுப் பாட்டுக்குள் 9 மாவட்டங்கள் இருக்கின்றன. இதனுடன் திருச்சி, பெரம்பலூர், கரூர், தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களை இணைத்தால், 100-க்கும் மேற்பட்ட தொகுதிகள் வரும். இதை மொத்தமாக ஜெயிக்கவைக்க அண்ணனால்தான் முடியும்''என்று அழகிரி ஆட்கள் தங்களது அடுத்த அஸ்திரத்தை ஏவினார்களாம்.''இவர் கள் சொல்வதையெல்லாம் தென் மாவட்டங் களாக எப்படிச் சொல்ல முடியும்?''என்று தலைமை நிராகரிப்பதாகவும் கூறப்படு கிறது.

ஸ்டாலின் முதல்வராவதற்கு முன் அதற்குச் சமமான ஒரு பதவி அழகிரிக்கும் தரப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். பொதுச் செயலாளர் பதவியைக் குறிவைத்துக்கூடச் சிலர் பேசுகிறார்கள். கடந்த வாரம் மதுரையில் இருந்து சென்னை வந்த அழகிரி, தயாளு அம்மாவைப் பார்த்து வருத்தம் தோய்ந்த நிலையில் பேசித் திரும்பியுள்ளார். ''எனக்கு அமைச்சர் பதவிகூட வேண்டாம். கட்சியில் மரியாதையான பதவியைத் தரச் சொல்லுங்கள்''என்று சொல்லியிருக்கிறார். அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதம் கொடுத்ததாகவும் வதந்தி கிளம்பியது. 'கட்சியில் முக்கியமான பொறுப்பை அழகிரி வசம் ஒப்படைத்துவிட்டு, முதல்வராக மட்டும் ஆவதால் தனக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை'என்று ஸ்டாலின் தரப்பு நினைக்கிறது. இரண்டு பேருக்கும் நோகாமல் யாருக்கு எதைக் கொடுப்பது என்ற குழப்பத்தில் தலைவர் இருக்கிறார்''என்று தி.மு.க-வை உற்றுக் கவனிப் பவர்கள் சொல்கிறார்கள்.

கழகத்தில் ஜூலைக் கலகம் !

ஸ்டாலினும் அழகிரியும் ஒரே வாகனத்தில் பயணம் செய்து திருமங்கலத்தில் வாக்குகள் கேட்டதும், வேட்பாளர் வெற்றி பெற்றதும், இருவரும் கைகோத்துக்கொண்டதும் இன்றைய நிலையில் தொடரவில்லை என்றே தி.மு.க. தொண்டர்கள் நினைக்கிறார்கள். ஸ்டாலின் ஆதரவு அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களை அழகிரி வளைத்துப் பிடித்து போனில் கடிப்பதும் கண்டிப்பதுமான செய்திகளைக் கேள்விப்பட்டு, மனரீதியாக வருத்தப்படுகிறாராம் ஸ்டாலின். இந் நிலையில் கருணாநிதி முடிவெடுக்கும் காலம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது.

மார்ச் மாதம் புதிய சட்டமன்றத் திறப்பு விழா நடக்கிறது. அதைத் தொடர்ந்து பட்ஜெட் கூட்டத் தொடர் ஒரு மாதம் நடக்கும். மே மாதத்துக்குள் பொது நூலகக் கட்டடத்தைக் கட்டி முடிக்க உத்தரவிட்டுள்ளார். ஜூன் 3-ம் தேதி அவரது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடக்கும். அம்மாத இறுதியில்தான் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் நடக்கிறது. இவை அனைத்தையும் தன்னுடைய முக்கியமான சாதனைகளாக கருணாநிதி நினைக்கிறார். எனவே, ஜூன் வரை அவரே முதல்வர் பதவியில் தொடர்வார். எனவே, முன்னதாக விலகல் நடக்க வாய்ப்பு இல்லை. ஆனால், ஜூனுக்குப் பிறகு விலகும் முடிவைத் தடுக்க சிலர் நினைக்கிறார்கள்.

'ஜூலைக் கலகம்'தொண்டர்களைக் கவலை அடைய வைத்துள்ளது. அதை கருணாநிதி எதிர்கொள்ளும்விதத்தில்தான் அவரது ராஜதந்திரம் மட்டுமல்ல... தி.மு.க-வின் எதிர்காலமும் அடங்கிஇருக்கிறது.

பொதுவாக தான் நினைத்ததை எந்தத் தடங்கல் ஏற்பட்டாலும் எதிர்கொண்டு செயல்படுத்தி முடிப்பவர் கருணாநிதி. எத்தனை கட்சிகள் எதிர்த்தாலும் சாதித்துக் காட்டுவார். சொந்தக் கட்சியில் இருந்த எம்.ஜி.ஆர், வைகோ போன்ற சக்திகளும் தயவுதாட்சண்யம் பார்க்காமல் கழற்றிவிடப்பட்டவர் கள்தான். இப்போது தடையும் தடங்கலும் தன்னுடைய குடும்பத்துக்குள்ளிருந்தே வந்திருப்பதால், எப்படி நடந்துகொள்வார்?

கருணாநிதியின் ஜூலைக் கனவு நிறைவேறுமா?!

 
கழகத்தில் ஜூலைக் கலகம் !
கழகத்தில் ஜூலைக் கலகம் !
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism