Published:Updated:

செஷல்ஸ் புறப்பட்டுச் சென்றார் மோடி!

Vikatan Correspondent
செஷல்ஸ் புறப்பட்டுச் சென்றார் மோடி!
செஷல்ஸ் புறப்பட்டுச் சென்றார் மோடி!
செஷல்ஸ் புறப்பட்டுச் சென்றார் மோடி!

புதுடெல்லி: செஷல்ஸ், மொரீசியஸ், இலங்கை ஆகிய நாடுகளுக்கு 5 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று செஷல்ஸ் புறப்பட்டு சென்றார்.

பிரதமர் நரேந்திர மோடி, செஷல்ஸ், மொரீசியஸ், இலங்கை ஆகிய நாடுகளில் 5 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார். அதன் முதற்கட்டமாக இன்று காலை அவர் செஷல்ஸ் புறப்பட்டுச் சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் ஜேம்ஸ் அலெக்சிஸ் மிச்செல்லை சந்தித்து பிரதமர் மோடி பேச்சு வார்த்தை நடத்துகிறார். அப்போது, கடல்சார் பாதுகாப்பு, மேம்பாடு மற்றும் ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை செய்யப்படும் எனத் தெரிகிறது. மேலும், அந்நாட்டில் கடலோர கண்காணிப்பு ரேடார் மையம் ஒன்றையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

இதையடுத்து, பிரதமர் மோடி, 12ஆம் தேதி மொரீசியஸ் செல்கிறார். அங்கு அந்நாட்டு பிரதமர் அனிரூத் ஜகநாத்துடன் பேச்சு வார்த்தை நடத்தும் மோடி, அந்நாட்டு நாடாளுமன்றத்திலும் உரையாற்றுகிறார். மேலும், அந்நாட்டின் 42வது தேசிய தின கொண்டாட்டத்திலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

இதைத் தொடர்ந்து, மொரீசியஸ் நாட்டின் கடலோர பாதுகாப்பு படைக்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்த எம்.சி.ஜி.எஸ். பராகுடா என்ற ரோந்து கப்பலையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

இந்த பயணங்களை முடித்துக் கொண்டு 13 மற்றும் 14ஆம் தேதிகளில் பிரதமர் மோடி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின்போது, அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன்  பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது, இரு நாட்டு உறவுகள், பொருளாதார ஒத்துழைப்பு, இலங்கையில் இந்திய அரசின் கூட்டு முயற்சியுடன் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர். அதேபோல், அந்நாட்டு பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுடன் பேச்சு வார்த்தை நடத்தும் பிரதமர் மோடி, அந்நாட்டு நாடாளுமன்றத்திலும் உரையாற்றுகிறார்.

அதைத்தொடர்ந்து, இந்திய அமைதிப்படையின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் மோடி, புத்தமதத்தினரின் புனித நகரமான அனுராதபுரத்தில் புதிய ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். அதன்பின் யாழ்ப்பாணம் செல்லும் மோடி, தமிழர்கள் வசிக்கும் பகுதிகளை பார்வையிடுகிறார். அப்போது இந்திய உதவியுடன் அங்கு கட்டப்பட்டுள்ள 20 ஆயிரம் வீடுகளை பயனாளிகளுக்கு பிரதமர் மோடி ஒப்படைக்கிறார்.

உறவு மேம்படும்

வெளிநாடுகளுக்கு பிரதமர் மோடி புறப்படும் முன் விடுத்துள்ள அறிக்கையில், ''இருநாட்டு உறவை மேலும் வலுப்படுத்த இலங்கை பயணம் உதவும். இலங்கையுடன் அடிக்கடி தொடர்பில் இருக்கவும் தனது பயணம் உதவும். இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் விக்ரமசிங்கேயுடன் பேச்சு நடத்துவேன். இந்த பேச்சுவார்த்தை மூலம் இருநாட்டு உறவில் புதிய அத்தியாயம் உருவாகும்'' எனக் கூறியுள்ளார்.

செஷல்ஸ் தீவுக்கு கடந்த 1981ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி சென்றார். அதன் பிறகு அங்கு செல்லும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி என்பதும், இலங்கைக்கு கடந்த 1987ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி சென்றார். அதன் பிறகு சுமார் 28 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கைக்கு செல்லும் இந்திய பிரதமர் மோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.