Published:Updated:

அயோத்தியில் ராமர் கோவில் திட்டம் கைவிடப்படவில்லை!

Vikatan Correspondent
அயோத்தியில் ராமர் கோவில் திட்டம் கைவிடப்படவில்லை!
அயோத்தியில் ராமர் கோவில் திட்டம் கைவிடப்படவில்லை!
அயோத்தியில் ராமர் கோவில் திட்டம் கைவிடப்படவில்லை!

நாக்பூர்:  அயோத்தியில் ராமர்கோவில் கட்டப்படும் திட்டம் கைவிடப்படவில்லை என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 3 நாள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும்   ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொதுச்செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

" அயோத்தி ராமர் கோவில் பிரச்னை தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றத்தின்  தீர்ப்பு இந்துக்களுக்கு சாதமாக உள்ள போதிலும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. வழக்கு விசாரணை மெதுவாக நடைபெறுகிறது. இதை விரைவுபடுத்த வேண்டும்.

இந்த பிரச்னை தொடர்பாக போராட்டம் எதுவும் நடத்த வேண்டிய தேவை இல்லை. ஆனால் ராமர் கோவில் கட்டும் திட்டத்தை நாங்கள் கைவிட்டு விடவில்லை.

வெளிநாடுகளில் வசிக்கும் இந்துக்களுக்கு உரிய பாதுகாப்பும் நீதியும் கிடைப்பது இல்லை. பாகிஸ்தானில் இருந்து நூற்றுக்கணக்கான இந்து குடும்பத்தினர் இந்தியாவுக்கு தப்பி வந்து குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வசித்து வருகின்றனர். அவர்கள், இந்திய அரசு தங்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்கள். அவர்களுடைய கோரிக்கையை அரசு தீவிரமாகப்  பரிசீலிக்க வேண்டும்.

பசுக்கள் கொல்லப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அரியானா மாநில பா.ஜனதா அரசு, மாட்டு இறைச்சி விற்பனைக்கு தடை விதித்து உள்ளது. பா.ஜனதா ஆட்சி பொறுப்பில் இருக்கும் மற்ற மாநிலங்களிலும் இதேபோல் தடை விதிக்க வேண்டும். பசுவதைத்  தடை சட்டம் பேச்சளவில் இருந்தால் மட்டும் போதாது. அதை தீவிரமாகச்  செயல்படுத்த வேண்டும்.

மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை வன்மையாகக்  கண்டிக்கிறேன். நாகரிக சமுதாயத்தில் இதுபோன்ற செயல்கள் கண்டனத்துக்குரியவை. ஆனால் இதுபோன்ற சம்பவங்களைப்  பயன்படுத்தி சமுதாயத்தில் பதற்ற நிலையை ஏற்படுத்த முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்" என்று அவர் தெரிவித்தார்.