Published:Updated:

ராகுல் காந்தி வேவு பார்க்கப்பட்டாரா?: காங்கிரஸ் ஆவேசம்; அரசு மறுப்பு!

Vikatan Correspondent
ராகுல் காந்தி வேவு பார்க்கப்பட்டாரா?: காங்கிரஸ் ஆவேசம்; அரசு மறுப்பு!
ராகுல் காந்தி வேவு பார்க்கப்பட்டாரா?: காங்கிரஸ் ஆவேசம்; அரசு மறுப்பு!

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி வேவு பார்க்கப்பட்டதாக கூறி நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆவேசம் காட்டிய நிலையில், அக்குற்றச்சாட்டை பா.ஜனதா மறுத்துள்ளது.

ராகுல் காந்தி வேவு பார்க்கப்பட்டாரா?: காங்கிரஸ் ஆவேசம்; அரசு மறுப்பு!

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி வீட்டிற்குச் சென்ற டெல்லி போலீசார், ராகுல் தலைமுடி கலர் மற்றும் கண் நிறம் குறித்து விசாரித்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், மத்திய அரசு ராகுல் காந்தியை உளவு பார்க்கிறது என்றும்  காங்கிரஸ் கூறியுள்ளது விவாதத்தை எழுப்பியுள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடியதும் காங்கிரஸ் உறுப்பினர் மல்லிகார்ஜூன கார்கே, கேள்வி நேரத்தை ஒத்திவைத்து ராகுல் குறித்து விசாரணை நடத்தப்பட்டது பற்றி அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இது குறித்து காங்கிரஸ் தரப்பில், "ராகுல் காந்தியை அரசியல் உளவு பார்க்கிறது நரேந்திர மோடி அரசு. ராகுலின் அலுவலகத்துக்கு போலீஸார் அத்துமீறி சென்று தேவை இல்லாத விவரங்களைக் கேட்டுள்ளனர். ராகுல் காந்தி கண்களின் நிறம் என்ன, அவர் எப்படி இருப்பார், அவர் என்ன மாதிரியான ஷூ அணிவார் என்றெல்லாம் விசாரித்துள்ளனர்.

மோடியையும், பா.ஜனதாவையும் எதிர்க்கும் எதிர்க்கட்சித் தலைவர்களை உளவு பார்ப்பது குஜராத்தில் வழக்கம். குஜராத்தில்தான எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், முக்கிய நபர்கள் கண்காணிக்கப்பட்டனர்.

அதே பாணியை இப்போது தேசிய அரசியல் கட்சித் தலைவர் களிடமும் மோடி அரசு பின்பற்றுகிறது" என்று குற்றம் சாட்டியிருந்தனர்.

இந்நிலையில் இப்பிரச்னை தொடர்பாக விளக்கம் அளித்து பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, "காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி வேவு பார்க்கப்படவில்லை. நாட்டில் உள்ள முக்கிய பிரமுகர்கள் (வி.ஐ.பி.க்கள்) குறித்து அவ்வப்போது தகவல் திரட்டப்படும். சுமார், 526 முக்கியப் பிரமுகர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அந்த வகையில்தான் ராகுல் காந்தி குறித்தும் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. ஒன்றுமே இல்லாத விஷயத்தை மலையளவு பெரிதாக்குகிறது காங்கிரஸ். 1987-ம் ஆண்டும் முதல் இவ்வாறு வி.ஐ.பி.க்கள் குறித்த தகவல்களை திரட்டுவதை அரசு வழக்கமாகக் கொண்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காகவே இவ்வாறு தகவல் திரட்டப்படுகிறது.

வி.ஐ.பி.க்கள் குறித்த தகவல் திரட்டும் நடைமுறைகள் கடந்த 1999-ம் ஆண்டு திருத்தப்பட்டது. திருத்தப்பட்ட நடைமுறையின்படிடே முன்னாள் பிரதமர்கள் தேவே கவுடா, ஐ.கே.குஜ்ரால், மன்மோகன் சிங், வாஜ்பாய் ஆகியோர் குறித்த தகவல்களும் திரட்டப்பட்டன.

இதே நடைமுறைப்படித்தான் கடந்த 2004, 2009, 2010, 2011 மற்றும் 2012 ஆண்டுகளில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறித்த தகவல்களும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவராவதற்கு முன்னர் 2001, 2007, 2008, 2009 மற்றும் 2012 ஆண்டுகளில் அவர் குறித்த தகவல்கள் இந்த நடைமுறையின் கீழ்தான் பதிவு செய்யப்பட்டன.

பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், அகமது படேல் ஆகியோரும் இதற்கு விதிவிலக்கல்ல.

முக்கியப் பிரமுகர்களை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்படும் ஒரு வெளிப்படையான நடைமுறை. இதில் வேவு, உளவு என்ற பேச்சுக்கே இடமில்லை. ராகுல் காந்தியின் ஷூ அளவு கேட்டது தொடர்பாக சர்ச்சை எழுப்பப்படுகிறது. ஆனால், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது அவரது ஷூ அளவு கொண்டே அவரது சடலத்தை அடையாளம் காண முடிந்தது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில், பாதுகாப்பு அமைப்புகளுக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும். அதில் நாம் தலையிடக்கூடாது" என்றார்.

டெல்லி போலீஸ் கமிஷனர் விளக்கம்

இதனிடையே ராகுல் காந்தியை போலீஸார் உளவு பார்த்ததாக எழுந்த சர்ச்சை குறித்து டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ்.பாஸ்ஸி, உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜுவிடம் விளக்கமளித்துள்ளார்.