Published:Updated:

சிறுதானியத்தின் தற்கால சவால்கள்!

Vikatan Correspondent
சிறுதானியத்தின் தற்கால சவால்கள்!
சிறுதானியத்தின் தற்கால சவால்கள்!

எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தில் இப்போதெல்லாம் இயற்கை வேளாண்மை, பல்லுயிரினப் பெருக்கம், சிறுதானியங்கள் என்ற பேச்சுக்களை அடிக்கடி கேட்க முடிகிறது. இதை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சிகள், கருத்தரங்குகளும் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக சர்வதேச வேளாண் வளர்ச்சி நிதியம் ஏற்பாடு செய்திருந்த சிறுதானியங்கள் பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது. 'இண்டர்நேஷனல் பயோடைவர்சிட்டி' என்ற அமைப்பு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தது.

சிறுதானியத்தின் தற்கால சவால்கள்!

உலகளவில் பல்லுயிரினங்களை பாதுகாப்பதில் பாரம்பரிய ரகங்களும், பாரம்பரிய விவசாய முறைகளுமே முக்கிய பங்காற்றி வருகின்றன என்பதை இந்த கருத்தரங்கு ஆணித்தரமாக எதிரொலித்தது. பொலிவியா நாட்டில் ‘கினோவா’ என்கிற சிறுதானிய ரகமும், நேபாளத்தில் பாரம்பரிய கீரை ரகங்களும், இந்தியாவில் சிறுதானியங்களும் பல்லுயிரின பாதுகாப்பில் முக்கிய பங்காற்றி வருகின்றன. கருத்தரங்கின் ஒருபகுதியாக கொல்லிமலை, ஜவ்வாது மலை, ஒடிசா, உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் சிறுதானிய சாகுபடியில் உள்ள சவால்கள், தொழில் நுட்பங்கள் பற்றி பேசிய தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

"காலங்காலமாக சிறுதானியங்கள பயிர் செஞ்சு, அதுல வர்ற தானியங்களையும், உணவு பதார்த்தங்களையும் விழாக்களில் சாமிகளுக்கு படைக்கும் பழக்கம் உண்டு. எங்கள் தாத்தா காலத்திலேயிருந்தே இந்த பழக்க வழக்கங்களை கடைப்பிடிச்சிட்டு வர்றோம். மரபு வழியாகவே சிறுதானியங்களோடு பல ஆண்டுகளாக தொடர்பு உண்டு. 1990களுக்கு பிறகு சிறுதானியங்களை பயிர் செய்கிற வழக்கம் குறைஞ்சாலும், இப்போ சில அமைப்புகளோட முயற்சியால திரும்பவும் சிறுதானியங்கள பயிர் செஞ்சிட்டு வர்றோம்.

சிறுதானியத்தின் தற்கால சவால்கள்!

அதுக்கு காரணம் மதிப்புக்கூட்டி விற்கும் முறைதான். ராகி, சாமை, தினை, குதிரைவாலி, வரகு, பனிவரகு தானியங்களை எல்லாம் பொட்டு நீக்கி அரிசியாக்கி விற்பனை செய்றோம். அதையே மாவாக்கி பேக்கெட் போட்டும் விக்கிறோம். இதோட முறுக்கு, பக்கோடா, லட்டு, ராகி மால்ட், பாயாசம் மிக்ஸ், கஞ்சி மாவுன்னு ரெடிமேடாக பயன்படுத்தும் விதத்தில் தயார் செய்றோம். தானியங்களா விக்கும்போது 1 கிலோவுக்கு 20 ரூபாய்குள்ளதான் கிடைச்சது. இப்போ மதிப்பு கூட்டி விக்கிறதால 1 கிலோ 30 ரூபாய்ன்னு வித்துட்டு இருக்கோம். இன்னைக்கும் மண் பானைகள், சாணம் மெழுகப்பட்ட பானைகள்லதான் தானியங்களை சேமிக்கிறோம். சேமிச்சி வைக்கிற விதைகள குழுக்கள்ல இருக்கிறவங்களே பகிர்ந்து பயன்படுத்திக்கிறோம்"  என்று பேசியவர்கள், இதிலுள்ள சவால்களை பற்றியும் பேசினர்.

"மலைப் பகுதிகளில்தான் சிறுதானியங்களை அதிகளவில் பயிர் செய்கிறோம். இதை நகரப் பகுதிகளுக்கு கொண்டு வந்து விக்கிறதுக்கு போக்குவரத்து செலவும், நேரமும் அதிகமாகிறது. இதற்கு அரசுகளோ, தன்னார்வ அமைப்புகளோ மாற்று ஏற்பாடு செய்து கொடுத்தால் உதவியாக இருக்கும்.

நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்களுக்கும், சிறுதானியங்களுக்கும் இடையே இருக்கிற விலை வித்தியாசம் தொடர்ந்து விவசாயிகளை பணப்பயிர்களை நோக்கியே ஈர்க்கிறது. சிறுதானிய பொருட்களுக்கும் உரிய விலை கிடைக்கச் செய்தால் சாகுபடியும் அதிகரிக்கும்.

சிறுதானியத்தின் தற்கால சவால்கள்!

நுகர்வோருக்கு, சிறுதானியங்களும் அதிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களும் எங்கே கிடைக்கும் என்ற விவரங்களும் பரவலாக இல்லை.

அங்கன்வாடி மையங்கள், பொது விநியோகத் திட்டங்களில் சிறுதானியங்களை பயன்படுத்தினால் உற்பத்தி அதிகரிக்கும். பயன்பாடும் கூடும்.

சிறுதானியத்தின் தற்கால சவால்கள்!

சிறுதானியங்களின் சிறப்பே நுண்ணூட்டச் சத்துக்கள்தான். இதன் தேவை அறிந்து நிறைய பேர் வாங்குகிறார்கள். ஆனால், அதை எப்படி பயன்படுத்துவது என்று தெரியவில்லை. இதை சார்ந்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில பரவ வழிவகை செய்யவேண்டும்" என்று அதன் சவால்களையும் பேசினார்கள்.

கருத்தரங்கின் துவக்க விழாவில் பேசிய வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், "பல்லுயிரின பாதுகாவலர்களை நாம் பாதுகாப்பதும், ஊக்கப்படுத்துவதும், அங்கீகரிப்பதும் அவசியம். நுண்ணூட்டச் சத்து என்ற அடிப்படையில் மதிய உணவுத் திட்டத்தில் சிறுதானியங்களை சேர்த்து கொள்ள அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேசமயம் மாறிவரும் பருவநிலை மாற்றத்தால், உணவு உற்பத்திக்கு சிறுதானியங்களை சாகுபடி செய்வதும் அவசியம்" என்று வலியுறுத்தினார்.

"பருவநிலை மாற்றம், உணவு பாதுகாப்பு, நுண்ணூட்டச் சத்து என்ற வகையில் சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து தேசிய அளவில் வலிமையான கொள்கைகளை உருவாக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார் பயோடைவர்சிட்டி அமைப்பின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபனோ படுலோசி.

த. ஜெயகுமார்

படங்கள்: ச.சந்திரமௌலி (மாணவ பத்திரிகையாளர்)