Published:Updated:

சிக்கிய உதவி கமிஷனர்... சிக்காத அதிகாரிகள்!

Vikatan Correspondent
சிக்கிய உதவி கமிஷனர்... சிக்காத அதிகாரிகள்!
சிக்கிய உதவி கமிஷனர்... சிக்காத அதிகாரிகள்!
சிக்கிய உதவி கமிஷனர்... சிக்காத அதிகாரிகள்!

வாட்ஸ் அப் வசதியுள்ள செல்போனில் படுவேகமாக பரவும் அப்டேட் இதுவாகத் இருக்கும். உதவி கமிஷனர் ஒருவர், பெண் காவலருடன் கொஞ்சி பேசிய கிளுகிளுப்பான பேச்சு கொண்ட ஆடியோ 'வைரஸ்' போல வேகமாக பரவி, ஒட்டுமொத்த காவல்துறைக்கும் களங்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

என்னதான் இருக்கிறது அந்த ஆடியோவில்?

பெண் காவலரின் அழகில் மயங்கிய அந்த உதவி கமிஷனர் முதலில் அவரின் அழகைப்பற்றி வர்ணிக்கிறார். பிறகு, 'டைட்டாக உடை அணியாதே மற்றவர்கள் பார்ப்பார்கள்' என்று அட்வைஸ் செய்கிறார். பிறகு தன்னுடைய வாட்ஸ் அப் நம்பர் கொடுத்து அதில் அவளுடைய புகைப்படத்தை அனுப்பி வைக்குமாறு சொல்கிறார். அதையடுத்து தன்னை பாய் பிரண்டாகவும், தனியாக செல்வோம் என்றும் பேசுகிறார். கடைசியில் ஒன்னு (முத்தம்) தரட்டுமா என்று அந்த ஆடியோ உரையாடல் முடிகிறது. உதவி கமிஷனர் தனது கடமையை மறந்து ஒரு கவிஞனாக மாறி ஆபாசமாக பேசி இருக்கிறார் அந்த பெண் காவலரிடம்.

யார் அந்த உதவி கமிஷனர்?

வடசென்னையில் பணியாற்றும் உதவி கமிஷனருக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தான் டூயூட்டி. அப்போது பாதுகாப்பு பணிக்கு வந்த பெண் காவலர் ஒருவரை உதவி கமிஷனர் பார்த்துள்ளார். அந்த பெண் காவலரின் அழகில் உதவி கமிஷனர் மதி மயங்குகிறார். பிறகு தன்னுடைய அள்ளகை மூலம் அந்த பெண் காவலர் குறித்த விவரங்களை சேகரிக்கிறார் உதவி கமிஷனர். பிறகு பெண் காவலரின் செல்போனுக்கு நள்ளிரவு நேரத்தில் பேச முயற்சிக்கிறார். இரண்டு தடவை உதவி கமிஷனர் பேசும்போது அவர் பேசுவதை தவிர்த்து இருக்கிறார். இதன்பிறகு மூன்றாவது முறையாக அவர் பேசும்போது அந்த பெண் காவலர் அதை ரெக்கார்டு செய்திருக்கிறார். இந்த ரெக்கார்டு தான் இப்போது விணையாக மாறி இருக்கிறது.

நடவடிக்கை பாய்கிறது

சம்பந்தப்பட்ட உதவி கமிஷனர் கடந்த 1987ல் சென்னையில் சப்-இன்ஸ்பெக்டராக பணிக்கு சேர்ந்துள்ளார். இவரது சொந்த ஊர் சேலம். ஜாம்பஜார், திருவல்லிக்கேணி ஆகிய போலீஸ் நிலையங்களில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி இருக்கிறார். வேலூர் சி.பி.சி.ஐ.டியில் டி.எஸ்.பியாக பணியாற்றி உள்ளார். இன்னும் 8 மாதங்களில் ஓய்வு பெற உள்ளார். இவருக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். மகன் பல் டாக்டருக்கும், மகள் இன்ஜினியரிங் படிக்கிறார்கள். மகளுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இதனால் படிப்பு முடிந்ததும் அவருக்கு திருமணம் நடத்த திட்டமிட்டு இருக்கிறார் உதவி கமிஷனர். இந்த சூழ்நிலையில் அவர் இந்த விவகாரத்தில் சிக்கி இருக்கிறார் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், சம்பந்தப்பட்ட உதவி கமிஷனர் பெண் காவலரிடம் உரையாடும் போது வாட்ஸ் அப் நம்பர் கொடுத்துள்ளார். அதுவே இப்போது அவர்தான் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. இதனால் சம்பந்தப்பட்ட உதவி கமிஷனரை முதலில் எச்சரித்த உயரதிகாரிகள், இப்போது மீண்டும் அவரை விசாரணைக்கு அழைத்துள்ளனர். விசாரணைக்குப் பிறகு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எப்படி பரவியது?

உதவி கமிஷனரும், பெண் காவலரும் பேசும் ஆடியோவில் சம்பந்தப்பட்ட உதவி கமிஷனர் தன்னை மறந்து பேசுவது தெரிகிறது. அவரது பேச்சுக்கு பெண் காவலரும் அமைதியாகவே பதிலளிக்கிறார். உதவி கமிஷனரின் மீதுள்ள மரியாதை நிமித்தமாக அவர் பேசுவது பல இடங்களில் தெரிகிறது. இருப்பினும் இணைப்பை துண்டிக்காமல் உதவி கமிஷனருக்கு, பெண் காவலர் பதிலளித்து வருகிறார். கடைசியில் குழந்தைகள் கூப்பிடுவதாக சொல்லி இணைப்பை துண்டிக்கிறார். அப்போதும் கூட, முத்தம் கொடுக்கட்டுமா? என்று கேட்கிறார் அந்த உதவி கமிஷனர். இவர்கள் இருவரும் பேசியது பெண் காவலரின் செல்போனில் ரெக்கார்டு செய்யப்பட்டுள்ளது. அதை சக பெண் காவலர் ஒருவரிடம் சம்பந்தப்பட்ட பெண் காவலர் காண்பித்துள்ளார். அதை வாட்ஸ்அப் மூலம் அந்த பெண் காவலர் இன்னொருவருக்கு அனுப்பி இருக்கிறார். இந்த தகவல் உதவி கமிஷனருக்கு வேண்டாத சிலரது கையில் கிடைக்க அவர், இந்த உரையாடலை பிரபலப்படுத்தி விட்டார்கள். கடந்த ஒரு வாரம்காலமாக இந்த உரையாடல் போலீஸ் அதிகாரிகள் வட்டாரத்தில் உலா வந்து இருக்கிறது. இதை அப்படியே மூடி மறைக்க சம்பந்தப்பட்ட உதவி கமிஷனர் சில வேலைகளை செய்து இருக்கிறார். கடைசியில் மீடியாவிடம் ஒருவர் கொடுத்து உதவி கமிஷனரின் ஆபாச ஆடியோவை அம்பலப்படுத்த, அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.

பெண் காவலரின் செல்போன் நம்பர் கிடைத்தது எப்படி?

சம்பந்தப்பட்ட பெண் காவலர் ஆயுதப்படைப்பிரிவில் உள்ளார். அவருக்கும் உதவி கமிஷனருக்கும் எந்தவித சம்பந்தமும் ஏற்பட வாய்ப்பில்லை. அந்த பெண் காவலர் உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த போது உதவி கமிஷனரின் கண்ணில் பட்டுள்ளார். இதனால் உதவி கமிஷனர் அவரது உதவியாளர் மூலம் அந்த பெண் காவலரின் செல்போன் நம்பரை வாங்கி பேசி இருக்கிறார். முதல் தடவை அவர் பேசியதே இப்போது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தி விட்டதாம்.

இது முதன்முறை அல்ல

பார்ப்பதற்கு வசீகர தோற்றமுடைய அந்த பெண் காவலரிடம் ஏற்கனவே கடந்த ஆண்டு இரண்டு கான்ஸ்டபிள்கள் அத்துமீறியுள்ளனர். இது உயரதிகாரிகளுக்கு தெரிந்ததும் சம்பந்தப்பட்ட கான்ஸ்டபிள்கள் மீது நடவடிக்கை பாய்ந்ததாக காவல்துறை வட்டாரங்கள் சொல்கின்றன. இப்போது அந்த பட்டியலில் உதவி கமிஷனர் சிக்கி இருக்கிறார்.

சிக்கிய உதவி கமிஷனர்... சிக்காத அதிகாரிகள்!

சிக்காத பல அதிகாரிகள்

தமிழக காவல்துறையில் இந்த உதவி கமிஷனரைப் போல பல அதிகாரிகள் இருக்கிறார்கள். இவர் வெளியே தெரிந்து விட்டார். மற்றவர்கள தெரியவில்லை என்று பாதிக்கப்பட்ட பெண் காவலர்கள் மற்றும் நேர்மையான அதிகாரிகளின் குமுறலாக உள்ளது.

இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத பெண் காவலர் ஒருவர் கூறுகையில், "பணிக்கு சேர்ந்தவுடன் பயிற்சி என்ற பெயரில் சில ஆண் காவலர்கள் மற்றும் அதிகாரிகள் பெண்களிடம் அத்துமீறுவதுண்டு. அதையெல்லாம் சகித்து கொண்டால் மட்டுமே காவல்துறையில் காலம் கடத்த முடியும்.  மாறாக அதிகாரிகளை பகைத்துக் கொண்டால் அவ்வளவுதான். வேலையை ராஜினாமா செய்து விட்டு வேறு வேலைக்குச் செல்லும் சூழ்நிலையை உருவாக்கிவிடுவார்கள்.

நைட் டியூட்டி என்று போட்டு பழிவாங்குவார்கள். இல்லை எதற்கெடுத்தாலும் குறைச் சொல்லி நிம்மதியாக வேலைப்பார்க்க விடமாட்டார்கள். எல்லா காவல்துறை அதிகாரிகளையும் குறைச்சொல்லவில்லை. பெண் காவலர்களிலும் சிலர், அதிகாரிகளை மடக்கிப் போட்டால் காரியத்தை முடிக்கலாம் என்று நினைக்கிறார்கள். எனவே பெண் காவலர்களின் குறைகளை நியாயமான உயரதிகாரிகள் ரகசியமாக கேட்டால் காவல் துறையில் பணியாற்றும் கறைப்படிந்த அதிகாரிகளை எளிதில் அடையாளம் காணலாம்" என்றார்.

காவல் துறையிலேயே பெண் காவலர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால், பொதுமக்களின் நிலைமை கேள்விக் குறி தான்?

-க்ரைம் புலி