Published:Updated:

ஒரு மெகா வாட் மின்சாரம்: அரசியலிருந்து விலகுவதாக மு.க.ஸ்டாலின் சவால்!

Vikatan Correspondent
ஒரு மெகா வாட் மின்சாரம்: அரசியலிருந்து விலகுவதாக மு.க.ஸ்டாலின் சவால்!
ஒரு மெகா வாட் மின்சாரம்: அரசியலிருந்து விலகுவதாக மு.க.ஸ்டாலின் சவால்!
ஒரு மெகா வாட் மின்சாரம்: அரசியலிருந்து விலகுவதாக மு.க.ஸ்டாலின் சவால்!

வேலூர்: கடந்த 4 ஆண்டுகளில் புதிதாக 1 மெ.வாட் மின் உற்பத்தி செய்ததாக நிரூபித்தால் பொதுவாழ்விலிருந்து நான் விலக தயார் என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் சவால் விட்டுள்ளார்.

வேலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும், இளைஞர் எழுச்சி நாள் பொதுக்கூட்டமும் ராணிப்பேட்டையில் நடந்தது. இந்த கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசும்போது, ''இதுநாள் வரை எனது பிறந்தநாளையொட்டி நடைபெறும் இளைஞர் எழுச்சி நாள் பொதுக்கூட்டத்தில் எங்கும் கலந்து கொண்டது கிடையாது. ராணிப்பேட்டையில் கலந்து கொள்வதுதான் முதல் முறை. இதற்கு காரணம் பிறந்தநாள் விழா என்பதற்காக அல்ல. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்பதற்காக.

இங்கு பேசிய துரைமுருகன் 2016ல் தி.மு.க. ஆட்சிக்கு வரும் என சத்தியம் செய்தார். அந்த சத்தியத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஜனநாயக முறைப்படி சட்டமன்றம் நடக்கவில்லை. தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க.தான் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி. சட்டமன்றத்தில் நம்மால் பேச முடியவில்லை. தொழில் துறையில் பீகார் மாநிலம்தான் முன்பு கடைசியில் இருந்தது. ஆனால் இப்போது தமிழகம் 18–வது இடத்தில் இருக்கிறது.

தமிழ்நாட்டில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது விதி 110ன் கீழ் 4 ஆண்டுகளில் 139 அறிவிப்புகளை வெளியிட்டு ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்து 500 கோடிக்கான அறிவிப்புகளை வெளியிட்டார். ஆனால், 2014–15ல் மொத்த நிதி ஒதுக்கீடே ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்து 389 கோடி தான். அப்படியென்றால் அறிவிப்புகளுக்கான தொகை எப்படி ஒதுக்கப்பட்டு நிறைவேற்ற முடியும்.

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 1 மெகாவாட் மின் உற்பத்தி கூட புதிதாக உற்பத்தி செய்யப்படவில்லை. அப்படி உற்பத்தி செய்யப்பட்டிருப்பதை ஆதாரத்துடன் நிரூபித்தால் நான் பொது வாழ்க்கையில் இருந்து விலக தயார். ராணிப்பேட்டையில் தோல் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் 10 பேர் பலியாகினர். இதற்கு காரணம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் முறையாக செயல்படாததுதான்.

தமிழகத்தில் 4 ஆண்டுகளில் 7 ஆயிரத்து 59 கொலைகள் நடைபெற்றுள்ளன. இதை நான் கூறவில்லை. ‘போலீஸ் ரிப்போட்’ கூறுகிறது. வேளாண்மை துறை அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்டதை விசாரிக்க மத்திய அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மீனவர்களுக்கு வழங்குகிற மானிய விலை டீசலில் ஊழல் நடைபெற்றுள்ளது என்று நான் சொல்லவில்லை. மீனவ மக்கள் தலைவர் சொல்கிறார். நான் சொல்வது பொய் என்றால் வழக்கு போடுங்கள், சந்திக்கிறேன்" என்றார்.