Election bannerElection banner
Published:Updated:

3s திட்டத்துடன் பாஜக; 5G கோஷத்துடன் காங்கிரஸ் - அஸ்ஸாம் தேர்தல் கள நிலவரம்

அஸ்ஸாம் தேர்தல்
அஸ்ஸாம் தேர்தல்

அஸ்ஸாம் மாநிலத்தில் 126 தொகுதிகளில், 35 தொகுதிகளில் தேயிலை தொழில் சார்ந்த பழங்குடி மக்கள் வாழ்ந்துவருகின்றனர். இவர்கள் முக்கிய வாக்கு வங்கியாக இருக்கின்றனர்.

2016 அஸ்ஸாம் சட்டமன்றத் தேர்தல் வெற்றியின் மூலம், 15 ஆண்டுக்கால காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி முதன்முறையாக வடகிழக்கு மாநிலம் ஒன்றில் பாஜக ஆட்சியைப் பிடித்தது. 126 தொகுதிகள் அஸ்ஸாஅமில், ஆட்சி அமைக்க 64 தொகுதிகள் தேவைப்பட்ட நிலையில் 60 தொகுதிகளை வென்று, பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தது. குடியுரிமை திருத்தச் சட்டம், காங்கிரஸ் மூத்த தலைவர் தருண் கோகாய் மறைவு, பாஜக கூட்டணி முறிவு எனப் பல நிகழ்வுகளுக்கு மத்தியில், 2021 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கிறது அஸ்ஸாம்.

அஸ்ஸாம்
அஸ்ஸாம்
AP

தேர்தலைச் சந்திக்கும் ஐந்து மாநிலங்களில் அஸ்ஸாமில் மட்டுமே பாஜக ஆட்சியில் இருக்கிறது. மார்ச் 27 (47 தொகுதிகள்), ஏப்ரல் 1 (39 தொகுதிகள் ) மற்றும் ஏப்ரல் 6 (40 தொகுதிகள் ) என மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. 2016-ம் ஆண்டு தேர்தலில் பாஜக 60 தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சிகளான அசோம் கன பரிஷத் 14 , போடோலாந்து மக்கள் முன்னணி 12 தொகுதிகளிலும் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தன. மறுபுறம் காங்கிரஸ் 24 இடங்களிலும் , அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி தனியாகப் போட்டியிட்டு 13 இடங்களிலும் வெற்றிபெற்றிருந்தன.

ஆனால், 2021 தேர்தல் களத்தில் கூட்டணி சற்றே மாறியிருக்கிறது. இந்தமுறை பாஜக, அசோம் கன பரிஷத் மட்டும் கூட்டாக தேர்தலைச் சந்திக்கின்றன. போடோலாந்து மக்கள் முன்னணி பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொண்டு காங்கிரஸ் கூட்டணியில் இணைந்திருக்கிறது. இந்த முறை போடோலாந்து மக்கள் முன்னணி காங்கிரஸுடன் இணைந்திருப்பதால் 2016 தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்க்கும்போது காங்கிரஸ் கூட்டணி வாக்கு சதவிகிம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

அஸ்ஸாம் மாநிலத்தின் மக்கள்தொகையில் 35 சதவிகிதம் உள்ள இஸ்லாமியர்களின் வாக்குகள், அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணிக் கட்சிக்கு ஆதரவாக இருக்கின்றன. மேலும், சிஏஏ (குடியுரிமை திருத்த சட்டம் ) குறித்து அஸ்ஸாம் மக்களின் பார்வை சந்தேகம் கொண்டதாகவே இருக்கிறது. இதை காங்கிரஸ் தங்களுக்குச் சாதகமாகப் பார்க்கிறாது. சிஏஏ போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒரு பகுதியினர் பாஜக-வில் இணைந்தனர். மற்றொரு பகுதியினர் இணைந்து சிறிய கட்சிகளாக உருவெடுத்துள்ளனர். அவை பாஜக வாக்குகளை பிரிக்கக்கூடும் என்று கணிக்கிறது காங்கிரஸ்.

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

தேசிய காங்கிரஸ் தலைமை பிரியங்கா காந்தியை களத்தில் இறக்கியிருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கட்சிப் பணியாற்றிவரும் பிரியங்கா, வேறு ஒரு மாநிலத்தில் பிரசாரம் செய்வது இதுவே முதன்முறை. வேலைவாய்ப்பு, சிஏஏ மற்றும் விலைவாசி உயர்வு பிரச்னைகள் குறித்துக் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார் பிரியங்கா. ’சிஏஏ குறித்து மற்ற மாநிலங்களில் பேசிவரும் பாஜக தலைவர்களுக்கு, அஸ்ஸாம் மாநிலத்தில் அது குறித்துப் பேச தைரியம் இருக்கிறதா’ என்று பிரியங்கா காந்தி சவால் விடுத்துள்ளார்.

'3S' - Suraksha, Samriddhi Sanskriti (பாதுகாப்பு, பழங்குடி மக்களின் கலாசார பாதுகாப்பு, செழிப்பான ஆட்சி) என்ற முழக்கத்தை முன்னிறுத்தி, பிரசாரம் செய்துவருகிறது பா.ஜ.க. அதேபோல் காங்கிரஸ் 5G என்ற முழக்கத்துடன் பிரசாரம் செய்துவருகிறது. அதில் சிஏஏ-வை எதிர்த்து மாநில சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்படும், 5 லட்சம் பேருக்கு அரசு வேலை, ஆட்சி பொறுப்புக்கு வந்த உடன் 30 நாள்களுக்குள் தேயிலை தொழிலாளர்களுக்கு 365 ரூபாயாக சம்பளம் உயர்த்தப்படும், 200 யூனிட் மின்சாரம் இலவசம், தாய்மார்களுக்கு மாதம் 2,000 ரூபாய் வழங்கப்படும் என்று பிரசாரம் செய்துவருகிறது.

அஸ்ஸாம் மாநிலத்தைப் பொறுத்தவரையில் 10 லட்சம் தேயிலை தோட்டத் தொழிலார்கள் உட்பட 60 லட்சம் பழங்குடி மக்கள் வாழ்ந்துவருகின்றனர். 126 தொகுதிகளில், 35 தொகுதிகளில் தேயிலைத் தொழில் சார்ந்த பழங்குடி மக்கள் வாழ்ந்துவருகின்றனர். இவர்கள் முக்கிய வாக்கு வங்கியாக இருக்கின்றனர். பிப்ரவரி மாதம் ராகுல் காந்தி பிரசாரத்தின்போது தேயிலைத் தோட்ட தொழிலார்களுக்கு 365 ரூபாய் தின உதியம் வழங்கப்படும் என்று பேசிய, ஒரே வாரத்தில் ஆளும் பாஜக அரசு 167 ரூபாயிலிருந்து 217ரூபாயாக ஊதியத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் வெல்வாரா மம்தா... பினராயி விஜயனுக்கு பின்னடைவா... அஸ்ஸாமில் ஆட்சியைப் பிடிப்பது யார்?

அஸ்ஸாம் மாநிலத்தில் காங்கிரஸின் முகமாக இருந்த தருண் கோகாய் மறைந்தநிலையில், அந்த இடத்தை நிரப்ப காங்கிரஸிடம் சரியான தலைவர்கள் இல்லை. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ரிபுன் போரா, தீபப்ரதா சைக்கியா, கௌரவ் கோகாய் , சுஸ்மிதா தேப் ஆகியோர் களத்தில் இறங்கி பிரசாரம் செய்துவருகின்றனர்.

வடகிழக்கு பகுதியின் பெரிய மாநிலமான அஸ்ஸாமில், 15 ஆண்டுகள் நீடித்த காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்திய பாஜக., இந்த முறை ஆட்சியைத் தொடருமா என்பது மே 2-ம் தேதி தெரிந்துவிடும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு