Published:Updated:

அழகிரி போட்டியா? ஸ்டாலின் பதில்!

அழகிரி போட்டியா? ஸ்டாலின் பதில்!

அழகிரி போட்டியா? ஸ்டாலின் பதில்!

அழகிரி போட்டியா? ஸ்டாலின் பதில்!

Published:Updated:

01-04-09
அரசியல்
அழகிரி போட்டியா? ஸ்டாலின் பதில்!
அழகிரி போட்டியா? ஸ்டாலின் பதில்!
 
அழகிரி போட்டியா? ஸ்டாலின் பதில்!
அழகிரி போட்டியா? ஸ்டாலின் பதில்!
- ப.திருமாவேலன், எம்.பரக்கத் அலி

அழகிரி போட்டியா? ஸ்டாலின் பதில்!

தி.மு.க-வினருக்கு 'தளபதி... கழகத்தின் எதிர்காலம்'! கட்சி, ஆட்சி இரண்டிலுமே இப்போது இவர் சொல் மந்திரம். முன்போல எல்லாவற்றையும் தனது நேரடி கவனிப்பின் கீழ் செய்ய முடியாத நிலையில் கருணாநிதி இருப்பதால், ஸ்டாலினை நம்பித்தான் இருக்கிறது தேர்தல் களம்!

வேட்பாளர் தேர்வு, பிரசாரப் பயணங்களை வடிவமைப்பது என ஸ்டாலினின் செனடாப் சாலை வீடு, தேர்தல் விறுவிறுப்புக்குத் தாவிவிட்டது. ஒவ்வொருவராக அழைத்துப் பேசி அனுப்பிவிட்டு, நம்மோடு பேசத் தயாராகிறார் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின். தி.மு.க. இதுவரை வெளியிட்ட தேர்தல் அறிக்கைகளின் தொகுப்பைக் கையில் வைத்துக்கொண்டே பேசுகிறார்.

''திடீரென்று சென்னை மத்திய சிறைச்சாலையைப் பார்க்கப் போயிருந்தீர்களே, ஏன்?''

''நான் ஓராண்டுக் காலம் சிறைப்பட்ட இடமல்லவா அது! அந்த இடம் இடிக்கப்படவிருக்கிறது என்பதால், எனக்குள் ஓராயிரம் உணர்வலைகள். தனியாகப் போய் பார்த்திருந்தால்கூட இவ்வளவு தூரம் உணர்ச்சிவசப்பட்டிருக்க மாட்டேன். குடும்பத்தினர் அத்தனை பேரையும் அழைத்துப் போய், அவர்களுக்குச் சிறையைச் சுற்றிக் காட்டினேன். மத்திய சிறையின் எல்லா இடங்களும் எனக்குத் தெரியும். தி.மு.க-வின் போர் முனை வரலாற்றில் எனக்கும் ஒரு பங்கு உண்டு என்பதை எண்ணிப் பெருமைப்படக் கிடைத்த வாய்ப்பு அது. (மனைவி சாந்தாவிடம், 'எமர்ஜென்சி ஃபைல் வேணுமே' என்கிறார். கடிதக் கட்டுடன் சாந்தா வர, பேட்டி தொடர்கிறது.)

எனக்குக் கல்யாணம் ஆன ஐந்தாவது மாசமே மிசாவில் கைதாகி, சிறைக்குப் போயிட்டேன். அவங்க திருவெண்காடுங்கிற கிராமத்தில் இருந்து வந்தவங்க. பொதுவா, ஒரு பொண்ணு கல்யாணம் ஆகி வீட்டுக்கு வந்தா, நல்லது நடக்கணும்பாங்க. இவங்க வந்ததுமே, நான் ஜெயிலுக்குப் போனா, ஊர் மக்கள் என்ன பேசுவாங்களோன்னு ஒரு பயம் இருந்தது. ஆனா, அதைப் பற்றிக் கவலைப்படாமல், தலைவரும் குடும்பத்தினரும் இந்தக் கொடுமைகளைத் தாங்கினோம்.

சிறையில் இருந்து வெளியே வந்தபோது, மாறன் மாமா, 'நீ சிறைக்குப் போன மறுநாளே நானும் உள்ளே வந்தேன். ஆனா, ரெண்டு பேரும் ஒண்ணா ரிலீஸ்ஆகி யிருக்கோம். அதனால, அதிகமா சிறையில் இருந்ததில் நீதான் எனக்கு சீனியர்!' என்று கிண்டலடித்தார். நான் இருந்த இடத்தை, என்னைவிட என் குடும்பத்தினர்தான் பார்க்க ரொம்ப ஆசைப்பட்டார்கள். அதனால் அழைத்துப் போனேன்.''

''அவர்களுக்கு அந்தக் காலத்துக் கஷ்டங்களைச் சொன்னபோது எப்படி இருந்தது?''

''மிசா காலத்தில், உப்பு அதிகம் உள்ள களி, வேப் பெண்ணெய் சேர்த்த சோறு, மண் கலந்த இட்லி. இது தான் எங்களுக்குத் தரப்பட்ட சாப்பாடு. இருட்டில்தான் அடிப்பார்கள். யாரை அடிக்கிறார்கள் என்று அலறலில்தான் கண்டுபிடிக்க முடியும். என்னை மிகவும் மூர்க்கமாக அடித்தார்கள். ஒரு அதிகாரி பூட்ஸ் காலால் என் முகத்தில் மிதித்தார். லத்தியால் தோள்பட்டையில் வெளுத்தார் இன்னொருவர். வார்டன் என் கன்னத்தில் அறைந்தார். இதைப் பார்த்துப் பொறுக்க முடியாமல், சிட்டிபாபு என் மீது பாய்ந்து தடுத்தார். எனக்கு விழ வேண்டிய அடிகள் அவருக்கு விழுந்தன. அதுதான் அவரது உயிரைப் பறித்தது. இதையெல்லாம் குடும்பத்தினரிடம் சொன்னேன். 'இந்த இடத்துலயா இருந்தீங்க... அவ்வளவு மோசமாவா அடிச்சாங்க?' என்று அதிர்ச்சி அடைந்தார்கள். யாரும் அன்றைக்குச் சரியாகத் தூங்கவில்லை. அந்த அளவுக்கு அந்த இடம் அவர்களைப் பாதித்திருக்கிறது. அந்த ஓராண்டுக் காலத்தில் நான் சிறையில் இருந்து எழுதிய கடிதங்களும், கழகத்தின் முக்கியப் பிரமுகர்களும், குடும்பத்தினரும் எனக்கு எழுதிய கடிதங்கள்தான் இவை. என் மனச் சிறையில் இவற்றைப் பூட்டி வைத்திருக்கிறேன்'' என்றபடி முக்கிய கடிதங் களை வாசிக்க ஆரம்பிக்கிறார். மகன் உதயநிதி தன் மகன் இன்பனை அழைத்து வர, அந்த இடம் களை கட்டுகிறது.

''நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் வரவிருக்கிறது. எப்படி இருக்கிறது உங்கள் மனநிலை?''

''திராவிட முன்னேற்றக் கழகம் எந்தத் தேர்தலையும் துணிச்சலோடு சந்திக்கிற இயக்கம். ஒரு விளையாட்டு வீரன், மைதானத்தைத் தைரியத்தோடு பார்க்கிற மாதிரிதான் தி.மு.க-வும் தேர்தல் களத்தைப் பார்க்கும். நானும் அப்படியே பார்க்கிறேன். தியாகத்தின் திருவிளக்கு அன்னை சோனியாவும், தமிழினத் தலைவர் கலைஞரும் நிச்சயம் வெற்றியை வாங்கித் தருவார்கள். யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.''

''கடந்த தேர்தலில் 'நாளை நமதே, நாற்பதும் நமதே' என்றீர்கள். அது இப்போதும் சாத்தியமா?''

''முழுமையான வெற்றியை முன்னேற்றக் கழகம் அடையும். பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐந்தாண்டு கால ஆட்சியில், தமிழனின் நூற்றாண்டு காலக் கனவான சேதுசமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட்டது. இரண்டாயிரமாண்டு பழைமையான தமிழ் மொழிக்குச் செம்மொழி அந்தஸ்து தரப்பட்டது. பல்லாயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள் வந்திருக்கின்றன. இதுவரை யாரும் செய்யாத சாதனைகளைத் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவந்துள்ளோம் என்று பெருமையுடன் சொல்லும் துணிச்சல் எங்களுக்கு மட்டும்தானே! இது தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கும் தெரியும்!''

அழகிரி போட்டியா? ஸ்டாலின் பதில்!

''தேர்தல் நடப்பது டெல்லிக்காக இருந்தாலும், மாநில ஆட்சி பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதும் இந்தத் தேர்தலில் தெரியும், இல்லையா..?''

''அது குறித்து எந்தப் பயமும் எங்களுக்கு இல்லை. தலைவர் கலைஞர் தலைமையிலான ஆட்சி மாநிலத்தில் மலர்ந்து மூன்றாண்டுகள் முடியப் போகின்றன. தேர்தல் வாக்குறுதிகளாக எவையெல்லாம் தலைவர் சொன்னாரோ, அவற்றில் 95 சதவிகிதத்தை நிறைவேற்றி விட்டோம். அதில் கூறப்படாத எத்தனையோ திட்டங் களையும் முடித்துவிட்டோம்.

என் துறையில் மட்டும் 616 கோடிக்கு ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம், மீஞ்சூர் மற்றும் நெமிலியில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் பிரச்னைக்குத் தீர்வான ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் போன்றவற்றின் உண்மையான பயன் பல்லாண்டுகள் கழித்தும் மக்களுக்குத் தெரியும்.

கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் வரை வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது. இது போன்ற சாதனைகள் செய்ய என் துறை சார்பில் வாய்ப்பு கிடைத்தது. அதை அக்கறையுடன் செய்தேன்.''

''மகளிர் சுய உதவிக் குழுக்களை அரசியல் நோக்கத்துக்காகப் பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டு இருக்கிறதே?''

''கடந்த ஆட்சியில் ஜெயலலிதாதான் அப்படிப் பயன் படுத்தினார். அரசியல் நோக்கத்தோடு மட்டுமே பயன்படுத்தி னாரே தவிர, சமூக அக்கறையுடன் அவர் எதையும் செய்ய வில்லை. ஆனால், என்ன நோக்கத்துக்காக 20 ஆண்டுகளுக்கு முன் இதுபோன்ற குழுவை கலைஞர் ஆரம்பித்தாரோ, அதே சமூக நோக்கத்தோடுதான் தி.மு.க. ஆட்சி பயன்படுத்தி வருகிறது. இந்தியாவில் இந்தத் திட்டம் சிறப்பாகச் செயல்படக்கூடிய மாநிலங்களில் தமிழகமும் ஒன்று என்ற சான்றிதழை வாங்கிக் கொடுத்தது நாங்கள்தான்!''

''மத்திய-மாநில அரசுகளின் சாதனைகளை நீங்கள் அடுக்கினாலும், ஈழப் பிரச்னையும் இந்தத் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் விஷயமாக இருக்கப் போகிறது. அது காங்கிரஸ் - தி.மு.க. அரசுகளுக்கு நெருக்கடிதானே?''

''அரசியல் முகவரியை இழந்துவிட்ட சிலர், ஈழப் பிரச்னையைத் திடீரென்று கையிலெடுத்துப் பார்த்தார்கள். அதை, காங்கிரஸ் - தி.மு.க-வுக்கு எதிரான பிரசாரமாக மாற்ற முயற்சித்தார்கள். அவர்களின் முயற்சி எடுபடவில்லை. ஈழத் தமிழர்களுக்காக எத்தனையோ தியாகங்களைச் செய்தவர்கள் நாங்கள். அதை யாரும் அரசியலாக்க முடியாது.''

''இலங்கைப் பிரச்னையில் மத்திய-மாநில அரசுகள் எதுவும் செய்யவில்லை என்று உண்ணாவிரதம் இருந்தாரே ஜெயலலிதா?''

''இத்தனை மாதங்களுக்குப் பிறகு அவருக்கு மார்ச் 9-ம் தேதிதான் இலங்கைப் பிரச்னையே தெரிந்ததா? தேர்தலுக்காக ஜெயலலிதா நடத்திய நாடகம்தான் அந்த ஒரு நாள் உண்ணாவிரதம். ஈழ மக்களுக்கு உதவி செய்ய நிவாரண நிதியை தலைவர் திரட்டும்போது கண்டித்த ஜெயலலிதா, இன்று என்ன முகத்தோடு வசூலிக்கிறார்? அவருக்குத்தான் வெளிச்சம்.''

''மின்வெட்டு, விலைவாசி உயர்வு, சட்டம்-ஒழுங்கு ஆகிய மூன்று பிரச்னைகளை முன்வைத்துதான் அ.தி.மு.க. பிரசாரம் செய்யப் போகிறது. அதற்கு உங்கள் பதில் என்ன?''

''இது போன்ற எதிர்மறைப் பிரசாரங்கள் எப்போதும் எடுபடாது. ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, அனைத்துக் குடும்பத்துக்கும் இலவச டி.வி, கூட்டுறவுக் கடன் ரத்து, கலைஞர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், தமிழ்நாடு முழுவதும் கட்டப்பட்ட பாலங்கள், சாலைகள், அரசு ஊழியர்களுக்குச் செய்யப்பட்ட சலுகைகள் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இந்தச் சாதனைகளைப் பார்த்து வயிறு எரிந்து புலம்புகின்றன எதிர்க்கட்சிகள்.''

''ஆள் அப்படியே இளமையுடன் இருக்கிறீர்களே?''

''(சிரிப்புடன்) இதே கேள்வியை கமல்ஹாசன் என்னிடம் கேட்டார். தமிழரசுவின் மகள் திருமண வரவேற்புக்கு வந்த கமல், 'நீங்க என்ன அப்படியே இருக்கீங்க. உங்களுக்கு வயசே ஆகுறதில்லையா?' என்றார். 'அதுக்கு ஒரு ரகசியம் இருக்கு. சரியா சாப்பிடுறதில்லை, சரியா தூங்குறதில்லை. அதுகூடக் காரணமாக இருக்கலாம்'ன்னு கிண்டலாகச் சொன்னேன்.

தினமும் காலையில் ஒரு மணி நேரம் வாக்கிங் போகிறேன். அடுத்த அரை மணி நேரம் யோகா. இதை நான் விடாமல் கடைப்பிடிக்கிறேன்''.

அழகிரி போட்டியா? ஸ்டாலின் பதில்!

''பொதுவாழ்க்கைக்கு வந்து இத்தனை ஆண்டுக் காலம் ஆன பிறகும், கூச்ச சுபாவம் உள்ளவர் போலவே இருக்கிறீர்களே, ஏன்?''

''ஆடம்பரமும் ஆரவாரமும் எனக்குச் சுத்தமாகப் பிடிக்காது. நான் எதற்கும் அலட்டிக்கொள்வதில்லை. அடக்கமாக இருக்கிறேன். அது உங்களுக்குக் கூச்ச சுபாவமாகத் தெரிகிறது.''

''எல்லோருடைய வாரிசுகளும் அரசியல் களத்தில் இறங்கும்போது, உங்கள் வீட்டில் இருந்து தீவிர அரசியலுக்கு யார் வரப் போகிறார்கள்? அல்லது, நீங்கள் தடை போடுகிறீர்களா?''

''கழகக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகள், கழக உணர்வுடனும் கழகத்துக்கு ஏதேனும் ஒருவகையில் உறுதுணையாகவுமே இருப்பார்கள். என் வீட்டுப் பிள்ளைகளும் அப்படித்தான்.''

''மதுரைத் தொகுதியில் அழகிரி நிற்பாரா?''

''அவர் போட்டியிட வேண்டும் என்று விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தலைமைதான் முடிவு செய்யும். 'தலைமை வாய்ப்பளித்தால் போட்டியிடத் தயார்' என்று அழகிரி சொல்லியிருக்கிறாரே! தலைமை சொல்மிக்க மந்திரம்இல்லை.'' என்றபடி விடை கொடுக்கிறார் ஸ்டாலின்.

அவர் கையில் இருந்த எமர்ஜென்சி கால கடித ஃபைலை வாங்கும் மகன் உதயநிதி, ''இந்தக் கடிதங்களை நான் புத்தகமாகக் கொண்டு வர்றேன்பா'' என்று சொல்ல, ''அவங்க சிறையில் இருந்தபோது எழுதிய டைரியையும் சேர்த்துப் புத்தகமாக்கலாமே'' என்று மனைவி சாந்தா நெகிழ... புன்னகையோடு அவர்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார் ஸ்டாலின்!

 
அழகிரி போட்டியா? ஸ்டாலின் பதில்!
அழகிரி போட்டியா? ஸ்டாலின் பதில்!