Published:Updated:

கலைஞர் மகிழ்ச்சி அடைந்தார்!

கலைஞர் மகிழ்ச்சி அடைந்தார்!

பிரீமியம் ஸ்டோரி

24-06-09
"கலைஞர் மகிழ்ச்சி அடைந்தார்!"
கலைஞர் மகிழ்ச்சி அடைந்தார்!
கலைஞர் மகிழ்ச்சி அடைந்தார்!
 
ப.திருமாவேலன், படம்: கே.ராஜசேகரன்
கலைஞர் மகிழ்ச்சி அடைந்தார்!
கலைஞர் மகிழ்ச்சி அடைந்தார்!

ப்துல் ரகுமான்.... வானம்பாடிக் கவிஞர் இப்போது வக்ஃப் வாரியத் தலைவர்!

"வெகுமானம் எது வேண்டுமெனக் கேட்டால், 'அப்துல் ரகுமானைத் தா'வென்று கேட்பேன்!" என்று கருணாநிதியால் விலை மதிக்க முடியாத தமிழ்ச் சொத்தாகக் கருதப்பட்டவர். நீண்டகால இடைவெளிக்குப் பின், அரசுப் பதவியில் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டு இருக்கிறார். வக்ஃப் வாரியத் தேர்தலில் அப்துல் ரகுமான் போட்டியிடப் போகிறார் என்று தகவல் பரவியதும், 'நம்ம கவிஞரா?!' என்பதுதான் பலரது ஆச்சர்யம். கூப்பிடு தூரத்தில் கருணாநிதிக்கு நெருக்கமாக இருந்தாலும், அதை வைத்து சுயலாபங்கள் தேடாத மனிதராக இருந்தவர் என்பதே ஆச்சர்யத்துக்குக் காரணம். எத்த னையோ பேர் கண்கொத்திப் பாம்பாகக் காத்திருந்தார்கள் அப்பதவி யைக் கைப்பற்ற. கடைசியில், கவிஞருக்குத்தான் கிட்டியது!

"திடீரென்று அரசாங்கப் பதவி ஏற்றுக்கொண்டது ஏன்?"

"இஸ்லாமிய சமூகம் இன்று இருக்கும் தாழ்மையான நிலைமையைப் பார்த்து வேதனைப்பட்டு எடுத்த திடீர் முடிவுதான் அதற்குக் காரணம். இந்தியாவில் முஸ்லிம் சமுதாயத்தின் நிலையை விசா ரணை நடத்திய சச்சார் குழு, சில வருத்தமான செய்திகளைச் சொல்லியிருக்கிறது. 80 சதவிகிதம் மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கிறார்கள். சில மாநிலங்களில் தாழ்த்தப்பட்ட தலித் மக்களைவிட மோசமான நிலையில் இருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலை மாற்றப்பட வேண்டும் என்று, நான் அங்கம் வகித்த இஸ்லாமிய இலக்கியக் கழகம் கடந்த சில ஆண்டுகளாகப் பிரசாரம் செய்து வந்தது.

மத்திய, மாநில அரசுகள், தனியார் அறக்கட்டளைகள் சேவை செய்யத் தயாராக இருந்தாலும், அதை உணராத சமூக மக்களாக இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். 'அவர்களுக்குப் படிப்பு இல்லை, வேலை இல்லை, தொழில் செய்யக் கடன்கள் வழங்கப்படுவது இல்லை' என்ற செய்தி கள் என்னைக் கவலைகொள்ளச் செய்தன. அவர்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டிய நெருக்கடிதான் அப்பதவியை ஏற்றுக்கொள்ள வைத்தது!"

"முக்கியமான தமிழ்க் கவிஞரான நீங்கள், ஒரு மத அடையாளத்துக்குள் உங்களை முடக்கிக்கொண்டது முரண்பாடாகத் தெரியவில்லையா?"

"இதில் முரண்பாடு எதுவும் இல்லை. நான் மதவாத எண்ணம் கொண்டவனும் இல்லை. பள்ளத்தில் கிடக்கும் இஸ்லாமிய சமூகத்தவரைக் கைதூக்கி விட நான் முன்வந்திருக்கிறேன்.

இந்தப் பதவி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பதவி. யார் யாரோ முயற்சித்தார்கள். எவரெவரோ காத்திருந்தார்கள். 90 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இந்த வக்ஃப் வாரியத்துக்கு இருக்கிறது. ஏழை பாழைகளுக்கு முடிந்த உதவிகளை ஒழுங்காகச் செய்து இருந்தால் தமிழகத்தில் ஒரு இஸ்லாமியன் கூட வறுமையில் உழன்றிருக்க மாட்டான். அப்படிப்பட்ட ஓர் அமைப்பைச் சிதைத்துவிட்டார்கள். 95 சதவிகிதம் ஊழலால் திளைக்கிறது வக்ஃப். நம் கண் முன் அந்த அமைப்பு சிதைய அனுமதிக்கக் கூடாது என்பதால்தான் ஏற்றுக்கொண்டேன். அதனைத் தனிப்பட்ட முஸ்லிம்களுக்கு மட்டும் நன்மை செய்யும் அமைப்பாக ஏன் பார்க்கிறீர்கள்? சமூகத்தின் ஒரு பகுதி மேம்பட்டால் சமூகமே வளரும் நன்மைகளைப் பாருங்கள்!"

"நீங்கள் நினைத்திருந்தால் துணைவேந்தர் பதவி உட்பட எத்தனையோ உச்சங்களைத் தொட்டு இருக்கலாமே?"

"சில உண்மைகளை இதுவரை சொன்னது இல்லை. இப்போது சொல்கிறேன். சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட மூன்று முறை கலைஞர் என்னை வலியுறுத்தினார். ஏற்றுக்கொண்டு இருந்தால், அமைச்சராகவே தொடர்ந்திருப்பேன். மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவியை ஏற்கச் சொன்னார் தலைவர். மறுத்தேன். இந்தப் பதவி நான் கேட்காமல் வழங்கப்பட்ட பதவி. 'ரகுமான் ஏற்றுக்கொள்கிறாரா?' என்று கலைஞர் கேட்டு அனுப்பினார். நான் ஒப்புக் கொண்டதும், மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். சில தகாத நபர்களிடம் அமைப்பு சிக்கினால் சேதமாகும் என்பதாலேயே நான் ஒப்புக்கொண்டேன். மற்ற பொறுப்புகள் பதவிகளாக மட்டும் இருந்திருக்கும். ஆனால், இது சேவை செய்யக் கிடைத்த ஒரு வாய்ப்பு!"

"ஒருவித ஒழுங்கும் சமூகக் கோபமும்கொண்ட உங்களைப் போன்றவர்களால் அரசாங்கப் பதவிகளில் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்பட முடியுமா?"

"இது சுய அதிகாரம்கொண்ட பதவி. இங்கு சுதந்திரமாகச் செயல்பட முடியும். மரியாதை நிமித்தமாக முதல்வரை சந்திக்கச் சென்றபோது, 'வக்ஃப் வயலில் களைகள் அதிகம். பயிர்கள் குறைவாகத்தான் உள்ளன' என்று சொன்னேன். 'வலிமையும் வாய்மையும் கலந்த புரட்சிகரத் திட்டங்களை நிறைவேற்றுங்கள்' என்ற கலைஞர், 'நீங்கள் வாவில் இருந்து வந்தவர்தானே?' என்று கேட்டார். வாணியம்பாடிக்காரன் என்பதையே அப்படிக் கேட்டார். 'நீங்களும் வா...வா... என்றதால் வந்தேன்!' என்றேன். என்னை அறிந்தவர் முதல்வராகவும் சமூகத்தை உணர்ந்தவர் அமைச்சராகவும் இருப்பதால் என்னால் முறையாகச் செயல்படமுடியும்."

"மதவாத அரசியல் நாளுக்கு நாள் வீரியமாகிக்கொண்டே இருக்கிறதே?"

"இந்தியன் என்ற முறையில் வருத்தப்பட வேண்டிய விஷயம். மிகச் சின்ன நாடான பாகிஸ்தானைப் பார்த்து நாம் பயப்பட்டு, கோடிக்கணக்கான பணத்தை ராணு வத்துக்குச் செலவழிக்கிறோம். இரு நாடுகளுக்கு இடையேயான ஈகோ காரணமாகக் கடந்த காலக் காயங்களை மட்டும் தோண்டிக்கொண்டு இருக்கிறோம்.

எந்த மதமும் கொலையைத் தூண்டவில்லை. 'ஒரு மனிதனை அகோரமாகக் கொன்றால், அது மனித குலம் அனைத்தையும் கொன்றதாக அர்த்தம்' என்கிறது நபிமொழி. கலவரங்களையும் கொலைகளையும் அரங்கேற்றுபவனை மதவாதி என்று சொல்லாதீர்கள். அவன் அரசியல்வாதி. இந்த மண்ணில் பிறந்து வளர்ந்த மக்களை வேறுபாடாக நினைத்து, மாச்சர்யத்தை விதைப்பது மதவாத சக்திகளின் கீழான வேலை. என்னைப் பொறுத்தவரை அருகில் இருக்கும் மக்களைப் தெரிந்துகொள்ளுங்கள். புரிந்துகொள்ளுங்கள். இப்படிப் புரிந்துகொள்ள மறுப்பதால்தான் சில தவறான இயக்கங்கள், இளைஞர்களை பயங்கர வழிக்கு அழைத்துச் செல்கின்றன. சகோதரத்துவம் மட்டும்தான் இந்தியாவை வல்லரசாக்கும் வல்லமை கொண்டது."

"நீங்கள் கலைஞரின் ஆஸ்தான கவிஞர். மொழியும் இனமும் உங்களை இணைத்தது. ஆனால், ஈழப் பிரச்னையில் அவர் சரியாக நடந்துகொள்ளவில்லை என்று தமிழின உணர் வாளர்கள் விமர்சனங்களை வைத்தார்களே?"

"ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்து ஈழத் தமிழருக்கு எதைச் செய்ய வேண்டுமோ, அதைக் கலைஞர் உண்மையுடன், உறுதியுடன் செய்தார். அவர் மட்டும்தான் இலங்கைத் தமிழருக்காக நீண்டகாலம் வாதாடிய, போராடிய மனிதர். அவருக்கு இணையான வரலாறுகொண்ட யாராவது இந்தக் குற்றச்சாட்டை சொல்லி இருந்தால் ஏற்கலாம். தேர்தலுக்கு முன்பு வரை கலைஞரை விமர்சிப்பதற்காகச் சிலர் இந்த விவகாரத்தை விஸ்வரூபமாக்கினார்கள். தேர்தலில் அது அவர்களுக்கு கை கொடுக்கவில்லை. மக்களால் தோற்கடிக்கப்பட்டார்கள். அதன்பிறகு ஈழத்தைப் பற்றி அவர்கள் பேசுவது இல்லை.

இப்போதும் நிவாரணங்கள் அனுப்புவது, ஈழ மக்க ளுக்கு அரசியல் உரிமைகளை வாங்கித் தருவது குறித்து கலைஞர் மட்டும்தான் பேசுகிறார். எப்போதும் அவர் மட்டும்தான் பேசுவார்!"

"இலக்கியத்துக்கு நேரம் ஒதுக்க முடிகிறதா?"

"அது என் சுவாசம். அதை நிறுத்த முடியுமா? என் வயதுக்காரர்களில், அல்லது இன்றைய இளம் படைப் பாளிகளில் ஆண்டுக்கு 2 புத்தகங்களை இன்றும் வெளியிட்டு வருபவன் நான் மட்டும்தான். ஒரு காவியம் படைத்துக்கொண்டு இருக்கிறேன். அதற்கு முன்னதாக நபிகள் நாயகத்தின் வரலாற்றை வசன கவிதையில் வார்த்துக்கொண்டு இருக்கிறேன். காலங் கள் கடந்தும் நம் வாழ்க்கையை நகர்த்தி வருபவை எழுத்துக்கள் அல்லவா?" - கம்பீரமாக அதிர்கிறது கவிஞரின் குரல்!

 
கலைஞர் மகிழ்ச்சி அடைந்தார்!
-
கலைஞர் மகிழ்ச்சி அடைந்தார்!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு