பிரீமியம் ஸ்டோரி

24-06-09
தலையங்கம்
மலையும் மாலையும்!
தலையங்கம்
தலையங்கம்
 
தலையங்கம்

நாடாளுமன்றத் தேர்தலுக்காகப் பிரசாரத்துக்குப் போனபோது, 'முதல்வர் கருணாநிதிக்கு வயதாகிவிட்டது. அவருக்கு நிரந்தர ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்புங்கள்' என்று மேடைகளில் வேண்டுகோள் வைத்தார், எதிர்க்கட்சித் தலைவியான ஜெயலலிதா.

ஒருவேளை அவர் ஆசைப்பட்டது போலவே, நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. தோற்று, அதையடுத்த அரசியல் மாற்றங்களில் முதல்வர் பதவியில் இருந்தும் கருணாநிதி இறங்கும் நிலை வந்திருந்தால்... இந்த நாட்டுக்காக ஜெயலலிதா கடுமையாக ஓடியாடி உழைத்திருப்பார் போலிருக்கிறது!

அவர் விருப்பத்துக்கும் வேண்டுகோளுக்கும் மாறாக, தி.மு.க-வுக்கு அதிக இடங்களை மக்கள் அளித்துவிட்ட நிலையில், கொடநாட்டுக்குச் சென்று ஓய்வெடுக்கத் துவங்கிவிட்டார் அம்மையார்.

அரசியல் நடத்தினால் ஆளுங்கட்சியாகத்தான் இருக்க வேண்டும்; இல்லாவிட்டால் தேர்தல் சமயத்தில் மட்டும் வெயில்-மழை பாராமல் 'உழைக்க' வேண்டும் என்பதுதான் அவர் சொல்ல வரும் தத்துவம் போலிருக்கிறது.

நாட்டில் எத்தனையோ பிரச்னைகள் இருக்க... அதுபற்றி எல்லாம் விவாதிப்பதற்கு என்றே சட்டமன்றக் கூட்டத்தொடர் நடக்க... அதில் கலந்துகொள்வதற்குப் பதிலாக, தன் கட்சியின் சட்டமன்றக் குழுவினரைக் கொடநாட்டுக்கு வரவழைத்து, அவர்களுக்கு 'வகுப்பு' எடுத்துத் தன் கடமையை முடித்துக்கொண்டு இருக்கிறார் ஜெயலலிதா. எதிர்க்கட்சித் தலைவி என்பதோடு, தானும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையும் அவருக்கு மறந்துவிட்டது, பாவம்!

அம்மையார் வைத்த தேர்தல் கோரிக்கையைத் தாங்கள் நிறைவேற்றாத கோபத்தில்தான் சட்டமன்றக் கடமைகளை ஜெயலலிதா புறக்கணிக்கிறார் என்று மக்கள் ஏன் எண்ணக் கூடாது?

'ஊரே சேர்ந்து மலையைத் தூக்கி என் தோளில் வையுங்கள்... அப்புறம் அதை நான் சுமக்கிறேன்' என்பதுதான் இவர் கடைப்பிடிக்கும் பொது வாழ்க்கை இலக்கணமோ..?

வலியோடு மலையைச் சுமக்கும் தோள்களைத்தான் வாசம் மிகுந்த மாலைகளும் தேடி வரும் என்பதை அம்மையார் மறந்துவிடக் கூடாது!

 
தலையங்கம்
-
தலையங்கம்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு