விகடன் பொக்கிஷம்
சினிமா
தொடர்கள்
Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்
தலையங்கம்
தலையங்கம்
கம்மல் கத்திரி... மோதிர முருங்கை!
தலையங்கம்

துவரம் பருப்பு கிலோ 99 ரூபாய் என்று கேட்டுத் துடிக்கிறார் திருவாளர் பொதுஜனம்.

'பருவ மழை பொய்க்கிறது. உணவு உற்பத்தி மோசமாகப் பாதிக்கப்படும்' என்று நிபுணர்கள் விடுத்த எச்சரிக்கை இவ்வளவு சீக்கிரமே சமையல் அறையில் புயலாகச் சுழற்றி அடிக்கும் என்று இல்லத்தரசிகள் எதிர்பார்க்கவில்லை.

'பருவ மழை பொய்த்தாலும், உணவு உற்பத்திக்குப் பாதிப்பு இருக்காது' என்று மத்திய வேளாண் அமைச்சர் சரத்பவார் அளித்த ஆறுதல் வார்த்தை அர்த்தமற்றுப் போய்விட்டது. ஜூன் மாதம் பெய்து இருக்க வேண்டிய மழையில் பாதி அளவு பொய்த்ததுமே, 'மாநில அரசுகள் உணவு உற்பத்தியில் அதிகக் கவனம் காட்ட வேண்டும்' என்று தட்டைத் திருப்புகிறார் அதே அமைச்சர்.

துவரம் பருப்பு மட்டுமா துடிக்கவைக்கிறது? பயத்தம் பருப்பு பயமுறுத்துகிறது... உளுத்தம் பருப்பு உலுக்கி எடுக்கிறது... சமையல் எண்ணெய் தாளித்து எடுக்கிறது... அரிசி விலை சீக்கிரமே அரை சதம் அடித்துவிடும் என்று அடிவயிற்றில் அடுப்பு மூட்டுகிறது!

பங்குச் சந்தைப் புள்ளிகளை உற்றுப் பார்த்துக்கொண்டும், அந்நியச் செலாவணி கையிருப்பை எண்ணிப் பார்த்துக்கொண்டும், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி வாய்ப்பு களைக் கணக்கிட்டுக்கொண்டும் இருப்பதைவிட முக்கியமானது - உணவு உற்பத்தியில் நாம் காண வேண்டிய தன்னிறைவு!

இருபது வருடங்களுக்கு முன், 'ஒரு பாட்டில் தண்ணீர் பதினைந்து ரூபாய்' என்று யாராவது சொல்லி இருந்தால், அதிர்வேட்டாகச் சிரித்து இருப்போம். அது போலவே, 'கம்மலைக் கழற்றிக் கொடுத்து கத்தரிக்காய் வாங்கினேன்... மோதிரம் விற்று முருங்கைக்காய் வாங்கினேன்...' என்பதும் நாளைய நிஜமாகாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

முன்னுரிமை எதற்குத் தர வேண்டும் என்று இப்போதாவது ஆள்வோர் விழித்துக் கொள்வார்களா? அல்லது, 'பருவ மழை... பணவீக்கம்' என்று சாக்கு சொல்லி நாக்கு வளர்க்கப் போகிறார்களா?!

 
தலையங்கம்
தலையங்கம்