Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
தலையங்கம்

ட்சியை மாற்றினால், காட்சிகள் மாறும். அந்தக் காட்சிகளை மாற்றுவதா, வேண்டாமா என்று மக்கள் முடிவு எடுப்பதற்கு, நம் ஜனநாயக அமைப்பு அளிக்கும் ஒரே வாய்ப்பு... தேர்தல்!

ஐந்து ஆண்டு காலம் தங்களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை, ஆளும் கட்சி எந்த அளவுக்கு நியாயமாகவும் ஆக்கபூர்வமாகவும் பயன்படுத்திக்கொண்டது என்பதை எடை போட்டுப் பார்ப்பதற்கு, வலுவான ஞாபக சக்தி மக்களுக்குத் தேவைப்படுகிறது. அந்த நினைவு ஆற்றலின் அடிப்படையில் அவர்கள் வாக்களிக்கிறார்களா? அல்லது, தேர்தல் நெருக்கத்தில் அரங்கேறும் மிகச் சில காட்சிகள் அவர்களைத் திசை திருப்பி விடுகின்றனவா?

2006... கவர்ச்சிகரமான பல திட்டங்களை அறிவித்து, அ.தி.மு.க. ஆட்சியின் தவறுகளை எல்லாம் மக்கள் முன் பட்டியலிட்டு, 'தவறாமல் நாங்கள் தருவோம் நல்லாட்சி' என்ற வாக்குறுதியோடு அரியணையில் அமர்ந்த தி.மு.க-வின் பரிபாலனம் எப்படி இருந்தது?

தலையங்கம்

2009... லட்சக்கணக்கான தமிழர்கள் ஈழத்தில் சிதைக்கப்பட்டுக்கொண்டு இருந்தபோது, முதல்வர் கருணாநிதி காட்டிய அதிகபட்சக் கருணை - டெல்லிக்குக் கடிதம் எழுதியதுதான். அதையும் தாண்டி, அரை நாள்  அதிசய உண்ணாவிரதம் இருந்து அரசியல் உலகத்தைத் 'திகைக்க’வைத்தார்!

அதுவே நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின், வீட்டு உறுப்பினர்களுக்குப் பதவிகளைப் பெற்றுத் தருவதில் சிக்கல் எழுந்தபோது, குடும்பத்தின் முதல்வராகப் பறந்து போனார் டெல்லிக்கு. கிட்டத்தட்ட ஒரு வார காலத்தை 'உறவுக்குக் குரல் கொடுக்கும்' போராட்டத்துக்கு அர்ப்பணிக்க அவரால் முடிந்தது.

2010... தடம்புரண்ட செல்வாக்கைச் சரிக்கட்டும் தந்திரமாக, தமிழ் செம்மொழி மாநாடு என்று ஆடம்பர, அலங்காரத் தொடர் வண்டி ஓட்டியது தி.மு.க. அரசு. பிரபாகரனின் நலிவுற்ற தாயாரைச் சிகிச்சைக்காகத் தமிழ் மண்ணில் அனுமதித்தால், உலகத் தமிழ் அறிஞர்களின் கவனம் எல்லாம் மீண்டும் இலங்கை சோகத்தின் மீதே மையம்கொள்ளும் என்று அரசியல் ராஜதந்திரிகளுக்கா தெரியாது! வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தின் மண்ணில் கால் பதிக்கக்கூட அனுமதிக்காமல், வந்த விமானத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டார் அந்த மூதாட்டி!

உப்புப் பெறாத விஷயத்துக்கும்கூட ரோஷம் பொங்க அறிக்கை விட்டு அனல் கக்கும் முதல்வர், தன் குடும்பத்தினர் மீது அடுக்கடுக்காகக் கிளம்பிய கடுமையான பல குற்றச்சாட்டுகளுக்கு, மௌனத்தையே கேடயமாக ஏந்தித் தப்பிய சந்தர்ப்பங்கள் ஒன்றா... இரண்டா?

மறக்கக் கூடாத பட்டியலின் ஆரம்பமே இது... சிந்திப்போம் நாம் தொடர்ந்து!