பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்
தலையங்கம்
தலையங்கம்
தயார்தானா?
தலையங்கம்

'பன்றிக் காய்ச்சல் வைரஸ் வீரியத்தோடு விஸ்வரூபம் எடுத்து, ஒரு கொள்ளை நோயாக பரவக்கூடிய சாத்தியங்கள் உண்டு' என்று உலக அளவிலான பொது சுகாதார வல்லுநர்கள் கூறி வருவதை அனைவரும் அறிவோம்!

இங்கொன்றும் அங்கொன்றுமாக பன்றிக் காய்ச்சலினால் பலிகள் நேர்ந்து வரும் இந்த நேரத்தில், மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவது அரசாங்கத்தின் கடமைதான். அதே சமயம், மக்களுக்குப் பீதி உண்டாக்காமல் 'எத்தகைய' நிலைமையையும் சமாளிக்கக்கூடிய வகையில் சத்தம் இல்லாமல் கட்டமைப்பு வசதிகளைத் தயார்படுத்திக்கொள்வதும் முக்கியமல்லவா!

இப்போதே பள்ளிகள் மூடப்படுகின்றன; பயணங்கள் தவிர்க்கப்படுகின்றன; திரையரங்குகளும் வணிக வளாகங்களும் வெறிச்சோடுகின்றன. நோய்த் தடுப்பு முகமூடியை வாங்குவதற்கு நகர்ப் பகுதிகளில் போட்டா போட்டி நடக்கிறது!

ஆனால், இந்த நோயின் தாக்குதல் இந்தியாவை எட்டிப்பிடித்து வாரக் கணக்கில் ஆகிவிட்ட நிலையிலும்... மிகமிக முக்கியமான நகரங்களில், விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் மட்டுமே இதற்கான பரிசோதனை மையங்கள் இதுவரை அமைக்கப்பட்டுள்ளன. அங்கும் 'டெஸ்ட் கிட்' எனப்படும் சோதனைச் சாதனங்கள் மிகமிகச் சொற்பமான அளவிலேயே இருப்பதாகத் தகவல்கள் வருகின்றன!

நோய் தாக்கியவர்களுக்கான சிகிச்சையோ, மாவட்டத் தலைநகர அளவிலான மருத்துவமனைகளில் மட்டுமே அளிக்கப்படும் என்று இன்று வரை சொல்கிறது அரசு. இப்போதே இப்படியென்றால்... ஒருவேளை, நோயின் வீரியம் அதிகரித்து நாலாபுறமும் பரவத் துவங்கினால்?

நெருப்பு என்றாலே வாய் வெந்துவிடாது! ஆயுள் காப்பீடு செய்துகொள்வது, மரண பீதியின் அடையாளம் ஆகிவிடாது! ஆபத்து எந்தெந்த ரூபத்தில் - எத்தனை பெரிய அளவில் வரக்கூடும் என்பதைக் காலத்தே உணர்ந்து, அதற்குத் தடுப்புக் காவல் போடுவதே ஒரு நல்ல அரசுக்கு அழகாக இருக்க முடியும்.

இப்போதுகூட தாமதம் இல்லை... இனியாவது விழிக்குமா அரசு?

 
தலையங்கம்
தலையங்கம்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு