Published:Updated:

இதயத்தை காப்போம்..!

இதயத்தை காப்போம்..!
இதயத்தை காப்போம்..!

இதயத்தை காப்போம்..!

செப்டம்பர் 29 - உலக இதய தினம்

- சி.சரவணன்

உலக இதய நோயாளிகளில் 60 சதவீதம் பேர் இந்தியர்களாக இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சிக்கு உரிய விஷயமாக இருக்கிறது.

இதயத்தை காப்போம்..!

இன்றைக்கு பதினைந்து வயது பிள்ளைகளுக்கு கூட மாரடைப்பு வருகிறது. அதற்கு காரணம் லைஃப் ஸ்டைல் மாறுதல் மற்றும் நம் ஃபாஸ்ட் புட் உணவு பழக்கம்தான்..!

இந்த இதய தினத்தில் நம் இதயத்தை காப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதோடு, முக்கியமாக இன்னொன்றையும் எடுக்க வேண்டும். அது பற்றி கடைசியாக சொல்கிறேன். இப்போது இதய தினத்துக்கு வருவோம்.

கடந்த நூற்றாண்டில் இருதய நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 10 சதவீதமாக இருந்தது. 21-ம் நூற்றாண்டில் 35 சதவீத மக்கள் இருதய நோயால் இறக்கின்றனர்.

உலகில் சர்க்கரை நோயின் தலைநகரம் என்ற பெயர் இந்தியாவுக்கு உண்டு. இப்போது இருதய நோயின் தலைநகரம் என்ற பெயரையும் இந்தியா எடுத்துள்ளது.

இருதய நோயின் பாதிப்பு அந்த நபரோடு முடிந்துவிடுவதில்லை. குடும்பத்தில் பெருத்த பொருளாதார இழப்பை ஏற்படுத்திவிடுகிறது. இருதய நோய் ஒருவருக்கு வந்துவிட்டால், அவரது குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் மன ரீதியான பாதிப்புகள் ஏற்படுகின்றன. அவர்களுக்கு தைரியமூட்டவும் முடிவதில்லை.

தடுக்கும் வழிகள்...

குடும்பத்தை நிர்க்கதியாக்கும் இந்த நோயை 100 சதவீதம் வராமல் தடுக்க முடியும். இதற்கு 3 வழிகள் உள்ளன. உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, பணியின் போது மன இறுக்கத்தை தவிர்த்தல்
போன்ற மூன்று விஷயங்களும் இருதய நோய் வராமல் பார்த்துக் கொள்கின்றன.

ஒரு காலகட்டத்தில் பின்லாந்து மற்றும் மொரீஷியஸ் நாட்டில் அதிகமாக இருதய நோய் உள்ளவர்கள் இருந்தனர். அந்த நாடுகள் முறையே பால் மற்றும் பாமாயில் உபயோகத்தை மிகவும் குறைக்க நடவடிக்கை எடுத்ததன் விளைவாக இருதய நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.

இந்தியாவில் பல எண்ணெய்களை உபயோகிக்கிறோம். கொழுப்பு சத்து குறைவாக உள்ள எண்ணெயைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று ஒவ்வொரு குடும்பத்தினரும் முடிவு செய்ய வேண்டும்.

உணவுக் கட்டுப்பாட்டை சீர்திருத்த வேண்டிய காலகட்டம் இது. தரப்பட்ட பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என்று நினைத்து மன இறுக்கத்துக்கு பலர் ஆளாகின்றனர். இப்படி நம்மைநாமே துன்புறுத்திக் கொள்கிறோம்.

உடற்பயிற்சி, திட்டமிட்ட அன்றாட வாழ்க்கை இல்லாமல் சோம்பேறித்தனமாக வாழ்ந்தால் இருதய நோய் நிச்சயம் வரும்.

இறுக்கமாக இல்லாமல் எதையும் மகிழ்ச்சியோடு அணுகுங்கள். நல்ல புத்தகங்கள், இசை போன்றவை மன அழுத்தத்தை குறைக்கும்.

இருதய நோய் தடுப்பு முறைகளை படித்துக் கொண்டு மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுங்கள். குடும்ப உறுப்பினர்களுக்கு சோம்பேறித்தனமற்ற வாழ்க்கை முறைகளை சொல்லித் தாருங்கள்.

அவசர சிகிச்சையும் முதல் உதவியும்...

இருதயத்தை பாதுகாக்காத இதே நிலை நீடித்தால் இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு 50 லட்சம் அறுவை சிகிச்சை செய்ய நேரிடக்கூடும்.

மின்சார ஷாக், இருதயம் செயலிழத்தல் போன்றவை நேரிட்டால் 4 நிமிடங்களுக்குள் முதலுதவி அளிக்க வேண்டும். நோயாளியை படுக்க வைத்து இரு கால்களையும் தூக்குதல், இருதயம் இருக்கும் நெஞ்சுப் பகுதியில் ஓங்கி குத்துதல், வாயோடு வாய் வைத்து காற்றை செலுத்துதல், நெஞ்சில் தொடர்ந்து கையால் அழுத்துதல் போன்றவை மூலம் மீண்டும் இருதயத்தை துடிக்க வைத்துவிடலாம்.

இருதய நோயுள்ள குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் திட்டத்தை தமிழக அரசு கொண்டுள்ளது.

சென்னை அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு மற்றும் விபத்தில் இறந்தவர்களின் இருதயங்கள் தானமாக பெறப்பட்டு இருதயம் செயல் இழந்தவர்களுக்கு பொருத்தப்பட்டு வருகிறது. ஒருவருக்கு இருதய பாதிப்பு ஏற்பட்டால் அதே ரத்தப்பிரிவு மற்றும் ஒத்துப்போகும் தன்மை கொண்ட மாற்று இருதயம் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும். சில நேரங்களில் மாற்று இருதயம் கிடைக்க கால தாமதம் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்பட்டுவிடும்.
 
சென்னையின் முன்னணி இருதய சிசிச்சை நிபுணர் டாக்டர் சி.சொக்கலிங்கம் இதய நோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கி சொன்னார்.

"சரியான வாழ்க்கை முறையை கடைப்பிடித்தால் இருதயம் 100 வருடங்களுக்கு மேலாக செயல்படும். நாம் எந்த உணவையும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அதை கல்லீரல் கொழுப்பாக (கொலஸ்ட்ரால்) மாற்றுகிறது. புகைபிடித்தல், அதிகமாக மது அருந்துதல், அளவுக்கு அதிகமாக சாப்பிடுதல், உடல் உழைப்பு இல்லாமை, டென்சன் ஆகியவற்றால் இருதயம் பாதிக்கப்படுகிறது. இதனால் இப்போது 19 வயது வாலிபருக்கு கூட மாரடைப்பு ஏற்படுகிறது.

ஆண்டுக்கு 100 மணிநேரம் உடற்பயிற்சி அல்லது 100 மணிநேரம் தியானம் செய்யுங்கள். தினமும் 2 கோப்பைக்கு மேல் தேநீர் அதிகமாக குடிக்காதீர்கள். சாப்பிட்டில் கட்டுப்பாட்டை எப்போதும் பின்பற்றுங்கள். அரைவயிறு சாப்பாடு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காலியாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். காலையில் நன்றாக சாப்பிட வேண்டும். மதியம் காலையில் சாப்பிட்டதைவிட சற்று குறைவாகவும் இரவில் அதைவிட குறைவாகவும் சாப்பிடுங்கள்.

இரவில் படுப்பதற்கு 3 மணிநேரத்துக்கு முன்பு சாப்பிடும் பழக்கம் நல்லது. பழங்கள், காய்கறிகள் அதிகம் சாப்பிடலாம். எல்லாவற்றுக்கும் மேலாக டென்சன் இல்லாமல் இருக்கவேண்டும்.
எவ்வளவு சிரிக்கமுடியுமோ அந்த அளவுக்கு வாய்விட்டு சிரிக்கவேண்டும். கைகளையும் நன்றாக தட்டவேண்டும். இரவில் குறைந்தபட்சம் 5 மணிநேரமாவது தூங்கவேண்டும். இப்படி இருந்தால் இருதயத்தை நாம் பாதுகாக்கமுடியும்," என்றார்.

நான் கடைசியாக சொல்கிறேன் என்று சொன்னது. ஹெல்த் இன்ஷுரன்ஸ் பாலிசி..!

இன்றைய அவசர, கலப்பட, டென்ஷன் உலகில் யாருக்கு எந்த நேரத்தில் இதயம் தொடர்பான பிரச்னைகள், ஹார்ட் அட்டாக் வரும் என்று சொல்ல முடிவதில்லை.

இதய சிகிச்சை என்பது அதிக செலவு வைப்பதாக இருக்கிறது. அதவாது, ஒரு நேரத்தில் மாரடைப்பு என ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து வந்தால் சர்வ சாதாரணமாக லட்ச ரூபாய் காணாமல் போய்விடுகிறது. அந்த அளவுக்கு அதிகமாக செலவு செய்ய நம்மில் பலருக்கு வசதி இல்லை. ஒரே வழி... சில ஆயிரம் ரூபாய் பிரீமியம் கட்டி லட்ச ரூபாய்க்கு சிகிச்சை பெறும் வசதியை ஹெல்த் இன்ஷுரன்ஸ் பாலிசி மூலம் பெறுவதுதான்.

ஆரோக்கிய வாழ்க்கை மேற்கொள்ள இந்த இதய தினத்தில் இதயம் கனிந்த வாழ்த்துகள்!

*************

செயற்கை இதயம்..!

ஜப்பான் நாட்டில் செயற்கை இருதயம் தயாரித்துள்ளனர். இதயம் பாதிப்படைந்து மாற்று இருதயம் கிடைக்காமல் உயிருக்கு போராடுபவர்கள் இந்த செயற்கை இருதயத்தை பொருத்திக் கொள்ளலாம்.
இருதயத்திற்கு அருகில் இந்த செயற்கை இருதயம் பொருத்தப்பட்டு ரத்தத்தை உள் இழுத்து மீண்டும் பாய்ச்சும் பணியை இந்த செயற்கை இருதயம் செய்யும்.

இதுவரை ஜப்பான் நாட்டில் சுமார் 18 பேருக்கு இந்த செயற்கை இருதயம் பொருத்தப்பட்டுள்ளது. உடலுக்கு ஒத்துக்கொள்ளும் இருதயம் தானமாக கிடைத்ததும் செயற்கை இருதயத்தை அகற்றிவிட்டு தானமாக கிடைத்த இருதயத்தை பொருத்தி கொள்ளலாம்.

அதிகபட்சமாக ஜப்பானில் ஒருவர் நாலரை ஆண்டு செயற்கை இருதயத்தை பொருத்தி உயிர் வாழ்ந்துள்ளார். பின்னர் அவருக்கு தானமாக கிடைக்கப்பட்ட இருதயம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கை இருதயத்தை 18 வயதிலிருந்து 70 வயது வரை உள்ளவர்கள் பொருத்தி கொள்ளலாம். ஜப்பானில் இந்த செயற்கை இருதயத்தின் அதிகபட்ச விலை ரூ.40 லட்சமாகும்.

அடுத்த கட்டுரைக்கு