பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்
தலையங்கம்
தலையங்கம்
பயமே ஜெயம்!
தலையங்கம்

'பெரிய பொறுப்புகளில் இருப்போர் மீது ஊழல் வழக்கு போடுவதற்கான அனுமதியை எதிர்பார்த்தே காலம் கழிவதுதான் தப்புகள் பெருக முக்கியக் காரணம்!' என்று அண்மையில் பேசினார் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி. இதை மத்திய சட்டத் துறை அமைச்சரும் ஏற்றுக்கொண்டு இருக்கிறார்.

'அரசாங்கப் பணிகளில் இருப்போர் நேரடியாகவும் பினாமிகள் மூலமாகவும் சொத்து குவிப்பதைத் தடுக்கவும் தண்டிக்கவும் வலுவான சட்டங்கள் இயற்றப்படும்' என்றும் மத்திய அமைச்சர் கூறி இருக்கிறார். சந்தோஷம்! ஆனால், திருட்டு நடந்த பிறகு திருடனைப் பிடிப்பதற்கான வழிமுறைகள் அல்லவா இவை எல்லாம்! திருட்டே நடக்காமல் தடுப்பதற்கு ஏற்ப விளக்கு ஏற்றிக்கொள்வது இதைவிட அவசியம் அல்லவா?

ஒவ்வொரு அரசுத் துறையிலும் குறிப்பிட்ட வேலைகளை முடித்துக் கொடுப்பதற்கு அதிகபட்சம் எத்தனை நாள் அவகாசம் ஆகும் என்பதையும், அப்படி முடித்துக் கொடுக்காத அரசு ஊழியருக்கு என்ன தண்டனை என்பதையும் முதலில் தெளிவாக வரையறுத்து அறிவிக்க வேண்டும். சிறியது முதல் பெரியது வரையிலான எல்லா கோப்புகளும் எந்தெந்த மேசைக்கு எல்லாம் நகர்ந்து செல்கின்றன என்பதை இணையதளத்தின் மூலம் அனைவரும் பார்த்து அறியும் வசதியைச் செய்ய வேண்டும். படிக்காத பாமரர்கள் தொடர்பான விஷயமாகவே இருந்தாலும், அதைச் சமூக அக்கறைகொண்டோர் கண்காணிக்கிறார்கள் என்ற அச்சம் வந்துவிட்டாலே போதும்... ஊழல் செய்ய நினைப்போர் தாமாகவே கையைச் சுருக்கிக்கொள்வார்கள்.

இப்போதே மத்தியிலும் மாநிலத்திலும் சில அரசுத் துறைகளில் வெற்றிகரமாக இந்த 'மின்னணு நிர்வாகம்' நடைமுறைக்கு வந்துவிட்ட நிலையில்... மற்ற எல்லா துறைகளிலும் ஏன் அமல்படுத்த முடியாது? சாதிச் சான்றிதழ் தொடங்கி, நீதித் துறை வரை விதிவிலக்கின்றி இணையதள வெளிச்சத்தைப் பாய்ச்சுவதோடு... அரசுப் பொறுப்பில் உள்ளவர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்த அத்தனை பேரின் சொத்து விவரங்களையும்கூட இதன்மூலம் நாடறிய பகிரங்கப்படுத்தினால்தான் என்ன?

'எல்லா துறைகளிலும், எல்லா விவரங்களையும் இணையதளத்தில் இப்படிப் பதியச் செய்வது சாத்தியமா?' என்று சாக்குபோக்கு சொல்லி, இதற்கு யார் முட்டுக்கட்டை போட நினைத்தாலும் சரி... 'யோக்கியன் வருகிறான். சொம்பை எடுத்து உள்ளே வை' என்கிற ரீதியில்தான் அவர்களை மக்கள் பார்ப்பார்கள்!

 
தலையங்கம்
தலையங்கம்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு