Published:Updated:

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ்

Vikatan Correspondent

புதுடெல்லி, அக்.1,2011

கெஜட்டட் அந்தஸ்து அல்லாத ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளத்தை போனசாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) மசோதா-2011 வுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 13 லட்சத்து 26 ஆயிரம் ரயில்வே ஊழியர்கள் உள்ளனர். இவர்களில், கெஜட்டட் அந்தஸ்து அல்லாத 12 லட்சத்து 61 ஆயிரம் ஊழியர்களுக்கு மட்டும், 'உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகையாக ஆண்டுதோறும் போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. தசரா அல்லது துர்கா பூஜைக்கு முன்பாக இந்த போனஸ் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், 2010-2011-ம் நிதியாண்டுக்கு, கெஜட்டட் அந்தஸ்து அல்லாத ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளத்தை போனசாக வழங்க வேண்டும் என்று யோசனை தெரிவித்தது.

பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த யோசனைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதற்காக ரூ.1,098 கோடியே 58 லட்சம் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தசரா, துர்கா பூஜை விடுமுறைக்கு முன்பாக இந்த போனஸ் வழங்கப்பட வேண்டும் என்று மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்தார்.

சுரங்க மசோதாவுக்கு ஒப்புதல்...

சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) மசோதா-2011 வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இம்மசோதா, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்படும். ஜனாதிபதி ஒப்புதலுக்கு பிறகு, அமலுக்கு வரும்.

இந்த மசோதா, சுரங்க திட்டத்தால் பாதிக்கப்படும் உள்ளூர் மக்களுடன் லாபத்தை பகிர்ந்து கொள்ள வகை செய்கிறது.

இதன்படி, நிலக்கரி சுரங்க உரிமையாளர்கள், லாபத்தில் 26 சதவீத தொகையை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும். மற்ற கனிமங்களின் சுரங்க உரிமையாளர்கள் ராயல்டிக்கு இணையான தொகையை வழங்க வேண்டும்.

மாவட்டந்தோறும் 'கனிம மேம்பாட்டு நிதியம்' தொடங்குவது என்றும், அதில் சுரங்க உரிமையாளர்கள் மேற்கண்ட தொகையை டெபாசிட் செய்வது என்றும், அத்தொகையை, உள்ளூர் மக்களின் நல்வாழ்வுக்கு பயன்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

மேலும், சுரங்க உரிமையாளர்கள் மொத்த ராயல்டி தொகையில் 10 சதவீதத்தை மாநில அரசுகளுக்கு 'செஸ்' வரியாகவும், மத்திய அரசுக்கு 2.5 சதவீதத்தை செஸ் வரியாகவும் செலுத்த வேண்டும்.

அத்துடன், இந்த சுரங்க சட்டத்தை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பதற்கும் விதிமுறை உள்ளது. சட்டவிரோத சுரங்க தொழிலில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்பட்டால், அவர்கள் வருங்காலத்தில் சுரங்க லைசென்ஸ் பெறுவதற்கும், அவர்கள் பெற்ற சலுகைகளை ரத்து செய்வதற்கும் விதிமுறை உள்ளது.

இதுதொடர்பான வழக்குகளை விரைவாக விசாரிக்க மாநிலம் தோறும் தனி கோர்ட்டுகளும் அமைக்கப்படும்.