Published:Updated:

தமிழக பொதுத்துறை ஊழியர்களுக்கு 10% போனஸ்

Vikatan Correspondent

சென்னை, அக்.01,2011

பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. .

இதுதொடர்பாக தமிழக அரசின் நிதித்துறை முதன்மைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள உத்தரவு:

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ரூ.4300 வரை கிரேடு பே பெற்று பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் (குருப்-சி, குரூப்-டி பணியாளர்கள்) சம்பளத்தில் ரூ.10 ஆயிரத்தை உச்சவரம்பாக கணக்கில் கொண்டு 8.33 சதவீதம் போனசும், 1.67 சதவீதம் கருணைத்தொகையும் (மொத்தம் 10 சதவீதம்) வழங்கப்படும்.

அதிக போனஸ் வழங்கும் நிதி ஆதாரம் உள்ள நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு அதிகபட்சம் 20 சதவீதம் வரை போனஸ் வழங்கலாம். கடந்த நிதி ஆண்டில் (2010-2011) முழு காலமும் பணியாற்றாமல் குறைவாக பணியாற்றியவர்களுக்கு அதற்கு தகுந்தபடி போனஸ் கணக்கிடப்படும்.

தமிழ்நாடு போக்குவரத்துக்கழகம், தமிழ்நாடு மின்சார வாரியம், ஆவின், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், பூம்புகார் கப்பல் கழகம், தமிழ்நாடு தேயிலை தோட்டக்கலை கழகம், அரசு ரப்பர் கழகம், தமிழ்நாடு வன தோட்டக்கழகம் ஆகியவற்றில் பணியாற்றுவோருக்கான போனஸ் பற்றிய அறிவிப்பு சம்பந்தப்பட்ட துறை மூலமாக தனியாக ஆணை வெளியிடப்படும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.