Published:Updated:

வறுமைக் கோடு வரம்பு: திட்டக் கமிஷன் மறுபரிசீலனை

Vikatan Correspondent
வறுமைக் கோடு வரம்பு: திட்டக் கமிஷன் மறுபரிசீலனை
வறுமைக் கோடு வரம்பு: திட்டக் கமிஷன் மறுபரிசீலனை

புதுடெல்லி, அக்.01,2011

வறுமைக் கோடு வரம்பு: திட்டக் கமிஷன் மறுபரிசீலனை

மத்திய அமைச்சர்கள் மத்தியிலும் பெரும் அதிருப்தி ஏற்பட்டதன் காரணமாக, நாட்டில் 'வறுமைக் கோட்டுக்கு கீழ்' என்பதை நிர்ணயிப்பதற்கான வருமான வரம்புத் தொகையை மத்திய திட்டக் கமிஷன் மாற்றியமைக்க முடிவு செய்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் திட்டக் கமிஷன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்பவர்​களுக்கான வருமான நிர்ணயம் தொடர்பான தகவலை அளித்திருந்தது.

அதில், நகர்புறத்தில் இருப்பவர்​களுக்கு ஒரு நாள் வருமானம் ரூ.32 என்றும், கிராமப்புறத்தில் இருப்பவர்களுக்கு ரூ.25 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

இது எதிர்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் மட்டுமின்றி மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் அமைச்சர்கள் பலருக்கும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

ஜெய்ராம் ரமேஷ், அம்பிகா சோனி உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் நேரடியாகவே இந்த நிர்ணயத் தொகையை மாற்றியமைக்கும்படி வலியுறுத்தியதாக தெரிகிறது.

குறிப்பாக, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தி, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கான வரம்பினை மாற்றியமைக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இதுதொடர்பாக விவாதிப்பதற்கு திட்டக் கமிஷன் வரும் 3-ம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளதாக தெரிகிறது.

இதைத் தொடர்ந்து, வறுமைக் கோட்டுக்கான புதிய வரம்பை நிர்ணயித்து, அதனை உச்ச நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய திட்ட கமிஷன் தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, தேசிய ஆலோசனைக் குழு உறுப்பினரும், சமூக ஆர்வலருமான அருணா ராய் திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மான்டெக் அலுவாலியாவை கடுமையாக சாடியிருந்தார்.

"வறுமைக் கோடு வரம்பாக நிர்ணயிக்கப்பட்ட தொகையில் உங்களால் உயிர்வாழ முடியுமா?" என்று அலுவாலியாவிடம் அவர் கேள்வி எழுப்பி சாடியது குறிப்பிடத்தக்கது.