Published:Updated:

இப்போதும் இருக்கிறது காந்தியின் தேவை!

Vikatan Correspondent
இப்போதும் இருக்கிறது காந்தியின் தேவை!
இப்போதும் இருக்கிறது காந்தியின் தேவை!

அக்டோபர் 2 - சர்வதேச அகிம்சை தினம்

- சி.சரவணன்

இப்போதும் இருக்கிறது காந்தியின் தேவை!

அகிம்சை மூலம் ஒரு நாட்டுக்கு சுதந்திரம் வாங்க முடியும் என உலகுக்கு நிரூபித்த முதல் தலைவர் காந்திஜிதான்.

காந்திஜி இந்திய சுதந்திர போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தினார். அகிம்சை மற்றும் சத்யாகிரக கொள்கைகளுக்கு இருக்கும் வலிமையை உலகத்துக்கு நிரூபித்து காட்டினார். அவரின் பிறந்த தினமான அக்டோபர் 2-ம் தேதிதான் சர்வதேச அகிம்சை தினமாக (International Day of Non-Violence) அனுசரிக்கப்படுகிறது.

1915-ம் ஆண்டில் ஆங்கிலேயர்களின் அடிமைகளாக இந்தியர்கள் இருப்பதை கண்டு மனம் நொறுங்கிய காந்தியடிகள், உலகிலேயே அதுவரை யாரும் எடுக்காத அகிம்சை என்கிற புதிய் ஆயுதத்தை கையில் எடுத்தார். கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் நடத்தினார். சத்தியத்தின் மீது நம்பிக்கை வைத்தார். அவரின் அகிம்சை வழி போராட்டங்களுக்கு முன்னால் ஆங்கிலேயர்களின் பீரங்கிகள் முடங்கி போயின.

காந்தியின் தண்டி யாத்திரை என்கிற உப்புக்கு வரி கொடாமை போராட்டம், வெள்ளையனே வெளியேறு, அந்நிய துணிகள் புறக்கணிப்பு என அவரின் அனைத்தும் ஆங்கிலேயரை ஆட்டிப்படைத்த அகிம்சை போராட்டங்கள். இதன் விளைவு, 1947 ஆகஸ்ட் 15-ல் இந்தியா சுதந்திரம் அடைந்தது.
 
கொல்லாமையையும், துன்புறுத்தாமையையும் அடிப்படையாகக் கொண்ட அகிம்சை தத்துவத்தை தான் வாழும் காலம் முழுவதும் போதித்ததோடு நில்லாமல், ஒரு மாபெரும் நாட்டின் சமூக, அரசியல் விடுதலைக்காக அதனையே கருவியாக்கி, அதில் வெற்றியும் பெற்றவர் தேசத் தந்தை மகாத்மா காந்திஜி.

பாரதம், இந்தியா - பாகிஸ்தான் என்று இருவேறு நாடுகளாக கூறுபோடப்பட்டபோது உருவான மதக் கலவரத்தை ராணுவத்தாலோ, காவல்துறையினராலோ அடக்க முடியவில்லை. ஆனால், மகாத்மாவின் உண்ணாவிரதம் மூலம் விடுத்த அமைதி செய்தி ரத்த வெறியில் திளைத்த மக்களின் உணர்வுகளை சமாதானத்தை நோக்கி தட்டி எழுப்பியது.

தனது அமைதி போராட்டத்தை விடுதலைக்கான ஆயுதமாக மட்டுமே காந்தி பயன்படுத்தி நிறுத்திக் கொள்ளவில்லை. பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டிய 55 கோடி ரூபாயை பிரதமர் நேரு தலைமையிலான அமைச்சரவை கொடுக்க மறுத்த போது, மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கி அவர்களை ஒப்புக்கொள்ளச் செய்தார்.

பிரிவினையை மகாத்மா காந்தி ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், பிரிவினையை ஏற்றுக் கொண்டவர்களை அதற்குரிய நியாயமான நடைமுறைகளை தனது அகிம்சை போராட்டத்தின் மூலம் ஏற்றுக் கொள்ளச் செய்தார் மகாத்மா.

காந்திஜியின் ஒவ்வொரு நடவடிக்கையும் இந்துக்களுக்கும், இந்தியாவுக்கும் எதிரானதாகவும், இஸ்லாமியர்களுக்கு ஆதரவானதாகவும் இருப்பதாகவே கருதிய இந்துமத தீவிரவாதிகள் காந்தியை சுட்டுக்கொன்றனர்.

மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட அன்று வரை, இரு நாடுகளிலும் ஆங்காங்கு நடந்துகொண்டிருந்த மத வன்முறை, அவருடைய முடிவுச் செய்திக்குப் பின் முற்றிலுமாக நின்றது.
மதவெறிக்கு இறையான காந்திஜி, தனது இறப்பின் மூலம் அப்போது தீவிரவாதத்துக்கு முடிவு கட்டினார்.

ஆனால், இப்போது உலகின் பல்வேறு நாடுகளில் பயங்கரவாதம் என்ற பெயரில் வன்முறைகள் தாண்டவமாடுவதும், ரத்த வெள்ளம் பாய்ந்தோடுவதும் மிகுதியாகிக் கொண்டிக்கிறது.

பயங்கரவாதத்தைக் கையிலெடுப்பவர்களைக் குறைகூறுவதோடு நின்றுவிடாமல், இந்த நிலைமையை முற்றிலும் அகற்றிட, உலக நாடுகளின் அரசுகள் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதும் அவசியமாகிறது.

இதற்கு இரு தரப்புக்கும் நாட வேண்டிய வழிகளுள் முதன்மையானது காந்தியின் 'அகிம்சை' முறையே!

காந்திஜியின் தத்துவ முத்துகள் சில!

* "உலக வரலாற்றில் உண்மையும், அன்புமே எப்போதும் வென்றுள்ளன. சில காலங்களில் வீழ்த்த முடியாது என்று கருதப்பட்ட சர்வாதிகாரிகளும் கூட ஆண்டுள்ளனர். ஆனால், அவர்களும் வீழ்ந்தார்கள் என்பதை நான் நம்பிக்கையிழந்த நேரத்தில் எல்லாம் நினைத்துப் பார்த்துள்ளேன்."

* "ஒரு கண்ணுக்கு பழியாக மற்றொரு கண் என்று தொடர்ந்தால் அது இவ்வுலகையே குருடாக்கிவிடும்."

காந்தி பற்றி அறிஞர்கள்..!

* "உலகில் உண்மையான இரு கிறிஸ்துவர்கள்தான் வாழ்ந்தார்கள். ஒருவர் இயேசு கிறிஸ்து. மற்றோருவர் காந்திஜி" - இலக்கிய மேதை ஜார்ஜ் பெர்னாட்ஷா

* "நமக்குப்பின் வரும் சந்ததிகள் தசையோடும் ரத்தத்தோடும் இது போன்ற ஒரு மனிதர் பூவுலகில் உலவினார் என்பதைக் கூட நம்பக்கூட மாட்டார்கள்." - விஞ்ஞானி ஐன்ஸ்டீன்.

உலகில் அகிம்சை பரவட்டும்!