ஸ்பெஷல் -1
கேம்ப்ளிங் விகடன்
Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்
தலையங்கம்
தலையங்கம்
மகுடத்தில் ஒரு மாணிக்கம்!
தலையங்கம்

மிழனுக்கு இது தங்கமயமான புகழ்காலம்! ஏ.ஆர்.ரஹ்மானின் கைகளில் ஒன்றுக்கு இரண்டாக வந்துசேர்ந்த ஆஸ்கர் விருது, தமிழனின் இசை நுணுக்கத்தை உலகறியப் பறைசாற்றியது. அடுத்தபடியாக, அமெரிக்க விண்கலம் நிலவின் மீது முட்டி மோதி சோதனை நடத்துவதற்கு முன்பாகவே, அங்கே தண்ணீருக்கான தடயங்கள் இருப்பதை நமது சந்திராயன் கண்டுபிடித்துச் சொல்லிவிட்டது. விண்கலத்தை அனுப்பிய குழுவின் மயில்சாமி அண்ணாதுரை மூலம் மறுபடி தமிழன் திறனை உலகறிந்தது!

புகழ் மகுடத்தில் மாணிக்கக்கல் பதித்திருக்கிறது நோபல் பரிசு. தமிழ்நாட்டில் பிறந்த, வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், வேதியியல் அறிவால் பரிசை வென்று கொடுத்து, மகிழ்ச்சியில் திக்குமுக்காடவைத்திருக்கிறார். இதய நோய் தொடங்கி சர்க்கரை வியாதி வரை பாதிப்புக்குக் காரணம் பரம்பரைரீதியானது என்றால், அதை வெற்றிகொள்வது அத்தனை எளிதல்ல என்றிருந்த நிலையை மாற்ற, வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனின் கண்டுபிடிப்பு உதவியிருக்கிறது. உடலியல் குணாதிசயங்களை நிர்ணயிக்கும் முக்கியக் காரணிகளில் ஒன்றான 'ரைபோசோம்'களின் கட்டமைப்பைப் புதிய கோணத்தில் ஆராய்ந்து அதிசயமான உண்மைகளை வெளியிட்டிருக்கிறார் இந்த அறிவியல் தமிழர்!

பரம்பரை நோய்களை எதிர்த்துப் போராடக்கூடிய எதிர்ப்புச் சக்திகளை விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்பு இனி பன்மடங்காகி இருக்கிறது. சர்.சி.வி.ராமன், சந்திரசேகர் வரிசையில் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் பெற்றுக் கொடுத்திருக்கும் பெருமையும் சேர்ந்துகொள்ள... பெற்ற தாயாம் தமிழன்னை பூரித்து நிற்கிறாள்.

பிறந்த மூன்றாம் வயதிலேயே தமிழகத்தை விட்டுச்சென்று, படிப்பெல்லாம் எங்கெங்கோ முடித்து, கடல் கடந்து தன் ஆராய்ச்சியை நடத்தி வந்தாலும்... இந்த விஞ்ஞானியின் உள்ளத்தில் தமிழ் மண் பாசம் நீங்கியதே இல்லை. இசை மழையிலும் பக்தி மழையிலும் நனைவதோடு, தன் அறிவைப் பகிர்ந்துகொள்ளவும் அவ்வப்போது தமிழகம் வந்து செல்கிறார் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்.

'திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும்' என்று நெஞ்சு விம்மிச் சொன்ன பாரதி இல்லையே இதைப் பார்க்க!

 
தலையங்கம்
தலையங்கம்