உலகின் பார்வையில் இந்தியாவும் சீனாவும்தான் 21-ம் நூற்றாண்டை ஆளப்போகிற இரு சக்திகளாகப் பார்க்கப்படுகின்றன. மென்பொருள் சார்ந்த துறைகளில் சீனாவை நாம் வெகுதூரம் தாண்டிப் பலகாலம் ஆகிறது. ஆனால், தொழிற்சாலைகளில் நடக்கும் உற்பத்தியில், அவர்களை நாம் எப்போதும் எட்டிப் பிடிக்க முடிந்ததில்லை.
இந்த ஆண்டு இந்தியா சத்தமில்லாமல் ஒரு சாதனை செய்தது. ஒரு லட்சத்து அறுபத்து ஐந்தாயிரம் கார்களை சீனா ஏற்றுமதி செய்திருக்க... இதே காலகட்டத்தில் இந்தியா ஏற்றுமதி செய்திருப்பதோ - இரண்டு லட்சம் கார்களுக்கும் அதிகம்!
உலக வல்லரசாகத் தன்னைச் சொல்லிக்கொள்ளும் அமெரிக்கா, மற்ற நாடுகளின் பலத்தை எடைபோட கார் உற்பத்தியை ஒரு முக்கிய அளவுகோலாகவைத்துக் கொள்கிறது. அந்த வகையில், இனி இந்தியாவுக்குத் தனி முக்கியத்துவம் கிடைத்துவிடும்!
மேலே சொன்ன கார் உற்பத்திச் சாதனையில்,பெரும் பங்கு பெருமை தமிழ்நாட்டுக்கு உரியது. தொழில் நிறுவனங்களை ஈர்ப்பதற்கு நடந்த போட்டா போட்டியில், தமிழ்நாடு மிகுந்த ஆர்வத்தையும், திறமைமிக்க மனித வளத்தையும், மற்ற பல அடிப்படை வசதிகளையும் காட்டியதுதான், இன்று இந்தச் சாதனையைச் செய்ய முடிந்திருப்பதற்குக் காரணம். அதற்கெல்லாம் மேலான காரணம், நிர்வாகங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான நம்பிக்கைக்கு உரிய நல்லுறவு!
இத்தகைய சாதனையின் சுவையை ருசிப்பதற்குள், கோவையை மையமாகக்கொண்டு இடியாக இறங்கி இருக்கிறது ஒரு சம்பவம். கார்களுக்கான உதிரி பாகங்களைத் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலைக்குள், மனிதவள மேம்பாட்டு அதிகாரியைத் தொழிலாளர்களே அடித்துக் கொன்ற பயங்கரம் அது. இதை வழக்கமான ஒரு குற்றச் சம்பவமாக மட்டுமே பார்த்து, 'காவல் துறை கையாண்டுகொள்ளட்டும்' என்று தமிழக அரசு வாளாவிருந்துவிடக் கூடாது!
அன்றாட வாழ்வின் சட்டம் - ஒழுங்கில் மட்டுமல்ல... தொழில் நிறுவனங்களின் உள்ளார்ந்த செயல்பாட்டிலும்கூட தமிழகம் அமைதிப் பூங்காவாக நீடிக்க வேண்டும். இதற்கான சகல வியூகங்களையும் அரசு வகுத்தாக வேண்டும். ஏனென்றால், இது ஏதோ ஒரு தனிப்பட்ட தொழிற்சாலையின் உள்விவகாரம் மட்டுமல்ல.
குதிரையின் குளம்படி லாடத்தில் இருந்து ஆணி கழன்றதால் ஒரு குதிரையை இழந்தார்கள்; ஒரு குதிரையை இழந்ததால், அதன் மீது அமரும் முக்கியமான ஒரு படை வீரனை இழந்தார்கள்; அந்தப் படைவீரன் இல்லாமல் போரைச் சந்தித்ததால், ஒரு படையணியை இழந்தார்கள்; இறுதியில் அவர்கள் வெற்றியையே இழந்தார்கள்.
நாம் வெற்றியை இழக்கவே கூடாது!
|