ஸ்பெஷல் -1
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்


அரசியல்
தலையங்கம்
தலையங்கம்
 
தலையங்கம்
தலையங்கம்

ஏக்கம்... வேண்டுகோள்... எச்சரிக்கை!

தலையங்கம்

தீவிரவாதத்தின் கொடிய கரங்கள் மும்பை மாநகரைச் சுட்டுப் பொசுக்கிய தருணத்தில், எதிர்க்கட்சித் தலைவரான அத்வானி, பிரதமருடன் சேர்ந்து வந்து நிலவரங்களைப் பார்வையிட்டபோது, மாறுதலான அந்தக் காட்சியால் சற்று ஆறுதல் அடைந்தார்கள் மக்கள். ஆனால், அதைத் தொடர்ந்து டெல்லியில் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல், பி.ஜே.பி-யின் 'பிரதமர் வேட்பாளர்' அத்வானியும் அந்தக் கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங்கும் புறக்கணித்ததைப் பார்த்துவிட்டு, பழைய விரக்தி நிலைக்கே போய்விட்டனர் நாட்டு மக்கள்.

இன்னொரு பக்கம், வெறிபிடித்த தீவிரவாதிகள் பேயாட்டம் போட்டு முடித்த ஓட்டல் வளாகத்தைப் பார்வையிடச் சென்ற மகாராஷ்டிர காங்கிரஸ் முதல்வர், நடிகரான தன் மகனையும், இயக்குநர் ஒருவரையும் தன்னுடன் 'தீவிரவாத சுற்றுலா' கூட்டிச் சென்றதைக் கேள்விப்பட்டுக் கொதித்துப்போனார்கள் மும்பை மக்கள்.

புதன்கிழமை முன்னிரவிலேயே மும்பையில் கொடூரங்கள் அரங்கேறத் துவங்கியபோதும், மத்திய அமைச்சரவை வியாழன் மதியம் கூடியதே தாமதம்தான். அடுத்தடுத்து நடந்த எத்தனையோ தாக்குதல்களின்போது குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய உள்துறை அமைச்சரை அப்போதெல்லாம் நீக்காமல், ஒட்டுமொத்தத் தேசமும் கொதித்து எழுந்துவிட்ட நிலையில், வேறு வழியே இல்லாமல் வீட்டுக்கு அனுப்பி, 'பிராயச்சித்தம்' செய்துவிட்டதாகத் திருப்திகொள்கிறது ஆளும் மத்திய அரசு!

மீட்புப் போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணனின் குடும்பம் குறித்து, கேரள முதலமைச்சர் அச்சுதானந்தன் நிதானம் இழந்து கூறியிருக்கும் வார்த்தைகள் அதிர்ச்சியின் உச்சகட்டம்.

பணம், புகழ், பதவிக்காக அரசியல்வாதிகள் அன்றாடம் நடத்துகிற கழுத்தறுப்பு அரசியலின் காரணமாக, நாட்டுக்கு உண்டாகும் இழப்புகளைப் பொதுமக்கள் பொருமலுடன் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

எந்தச் சுயநல எதிர்பார்ப்புகளும் இன்றி, நாட்டின் மானமும் பாதுகாப்பும் மட்டுமே லட்சியம் என நெஞ்சு நிமிர்த்தி முன்னேறி, வீரமாகப் போராடி உயிர்நீத்த அதிகாரிகளின் தியாகத்தைப் பார்த்தாவது, அரசியல்வாதிகள் தங்கள் குணத்தைக் கொஞ்சமாவது மாற்றிக்கொள்ள மாட்டார்களா என்பது மக்கள் மனதில் எழும் ஏக்கம்!

'ஓட்டலின் பொறுப்பாளர்கள்' என்பதையே, அங்கு வந்திருக்கும் 'விருந்தினர்களின் உயிருக்குமான பொறுப்பாளர்கள்' என்பதாக ஏற்றுக்கொண்டு, தீவிரவாதத் தாக்குதலின்போது முன்னால் நின்று உயிர்நீத்த சாமானிய ஊழியர்களின் தியாகத்தைப் பார்த்தாவது, இந்த 'தேசத்தின் பொறுப்பாளர்கள்' தங்களை மாற்றிக்கொள்ள மாட்டார்களா என்பது எதிர்பார்ப்பு!

கட்சி, கூட்டணி, மதம், மாநிலம் என்று பல பேதங்களை முன்வைத்து, சுயநலச் சண்டை போடுவதை நாட்டின் பாதுகாப்பு விஷயத்திலாவது அரசியல்வாதிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பது மக்கள் வைக்கும் வேண்டுகோள்!

இதன் பிறகும்... எந்தவொரு கட்சியோ, அரசியல்வாதியோ, நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் அருவருக்கத்தக்க அரசியல் நாடகங்களை அரங்கேற்றி லாபம் தேடப் பார்த்தால்...

வெள்ளத்தில் அடித்துக்கொண்டு வருகிற சடலத்தின் கழுத்திலும் காதிலும் இருக்கிற நகைகளை அறுத்துக்கொண்டு ஓடும் ஈனப் பிறவிகளுக்குச் சமமாகிவிடுவார்கள் என்பதே மக்கள் விடுக்கின்ற எச்சரிக்கை!

 
தலையங்கம்
தலையங்கம்