மத்திய அரியணையில் அடுத்ததாக அமரப்போவது யார்... மீண்டும் காங்கிரஸா அல்லது பாரதிய ஜனதாவா என்பதற்கான பதில் 6 மாநில மக்களின் கைகளில் இருக்கிறது.
டெல்லி, காஷ்மீர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மிசோரம் ஆகிய 6 மாநிலங்களில் நடக்கும் தேர்தல் முடிவுகள்தான் அடுத்த மத்திய அரசுக்கான டிரெய்லர் என்பதால், பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸூக்கு இப்போதே உள் காய்ச்சல். ம.பி, ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாரதிய ஜனதா ஆட்சி நடக்கிறது. டெல்லி, காங்கிரஸின் கைகளில் இருக்கிறது. தேசிய முன்னணியின் வசம் மிசோரம் இருக்கிறது. காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி நடக்கிறது. இதுதான் 6 மாநில ஆட்சி நிலைமை. டெல்லியைக் குறிவைத்து காய் நகர்த்துகிறது பாரதிய ஜனதா. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தை டார்கெட் பண்ணுகிறது காங்கிரஸ். இந்தப் பதற்றத்தில் காஷ்மீர், மிசோரமை இரண்டு தேசியக் கட்சிகளுமே கண்டுகொள்ளவில்லை. காரணம், அங்கே மகா பலத்தோடு காத்திருக்கின்றன மாநிலக் கட்சிகள். அவர்களோடு முட்டி மோதி கட்டுப் போட்டுக்கொள்ள யாருக்கும் தைரியம் இல்லை.
டிசம்பர் 8-ம் தேதி இந்த 6 மாநிலத் தேர்தல் முடிவுகளும் வரும்போது, விஷயம் வெட்ட வெளிச்சமாகிவிடும். காஷ்மீர் தவிர, 5 மாநிலங்களில் இரண்டு தேசியக் கட்சிகளுக்கும் எக்ஸ்ட்ரா இனிமாவாக, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி களத்தில் நிற்கிறது. இந்த 6 மாநிலங்களிலும் அவர் வாங்கும் வாக்குகள்தான் மூன்றாவது அணிக்கான முதல் புள்ளி. இப்படி எல்லா வகைகளிலும் லைம் லைட்டில் இருக்கும் 6 மாநிலத் தேர்தல் பற்றிய அலசல் இது...
டெல்லி: மூன்றாம் முறை வெல்வாரா ஷீலா?
|