Published:Updated:

''உங்களுடன் வாழ வந்துவிட்டேன்!''

ஆர்.லோகநாதன், க.சண்முகவடிவேல்படங்கள் : சு.குமரேசன், 'ப்ரீத்தி' கார்த்திக், எம்.ராமசாமி

''உங்களுடன் வாழ வந்துவிட்டேன்!''

ஆர்.லோகநாதன், க.சண்முகவடிவேல்படங்கள் : சு.குமரேசன், 'ப்ரீத்தி' கார்த்திக், எம்.ராமசாமி

Published:Updated:
##~##
ஸ்ரீ
ரங்கத்தில் 'அம்மா’! போயஸ் கார்டன், போடி, ஆண்டிபட்டி, சிறுதாவூர், கொடநாடு என ஜெயா மேப்பின் 'லேண்ட் மார்க்’குகளில் இனி ஸ்ரீரங்கத்துக்கு அழுத்தமான இடம்!  

''ஸ்ரீரங்கம்தான் எனது பூர்வீகம். எனது மூதாதையர்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த ஊர் இதுதான். இங்கு வரும்போது எல்லாம் சொந்த ஊருக்கு வருவதைப்போல் உணர்கிறேன். எனது தாய் வீட்டுக்கு வருவதைப்போல் பேருவகை அடைகிறேன். அதனால்தான் உங்கள் அன்புச் சகோதரியான நான் உங்களுடன் ஒருத்தியாக வாழ வந்துவிட்டேன். ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் என்னை, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறவைக்க வேண்டும் என்று உங்கள் சகோதரி கேட்டுக்கொள்கிறேன். செய்வீர்களா?'' என்று தனது டிரேட்மார்க் 'கேள்வி - பதில்’ பாணியில் ஜெயலலிதா கேட்க... ''நிச்சயமா!'' என்று எழும் ஆதரவுக் குரல்கள் ஏரியாவை அதிரச் செய்கின்றன!

''உங்களுடன் வாழ வந்துவிட்டேன்!''
''உங்களுடன் வாழ வந்துவிட்டேன்!''

கடந்த ஆகஸ்ட் மாதமே ஸ்ரீரங்கம் ரங்கநாதனைத் தரிசித்துச் சென்ற ஜெயலலிதா, தேர்தல் அறிக்கையையும் ரங்கநாதரின் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்த பிறகே வெளியிட்டார். மனு தாக்கலுக்கு வந்த ஜெயலலிதா, தேர்தல் அதிகாரி குணசேகரனிடம், ''நல்லா இருக்கீங்களா? வீட்ல எல்லாரும் சௌக்கியமா?'' என்று நன்கு பழகியவரைப்போல நலம் விசாரித்தார். ஜெயலலிதா இருக்கையில் அமர்ந்ததும், குனிந்து அவரிடம் கைக் கடிகாரத்தைத் தொட்டுக் காட்டி, ''அக்கா... நேரம் ஆயிடுச்சு. மனுவைக் கொடுத்துடுங்க. அப்புறமா கையெழுத்து போட்டுக்கலாம்!'' என்றார் சசிகலா. அப்போது நேரம் சரியாக... 11.07 (கூட்டுத் தொகை 9)  

ஜெயலலிதா பிரசாரத்தின் ஹைலைட்... வேனில் இருக்கும் லிஃப்ட் இருக்கை. வேனுக்குள் இருக்கும்போது டிரைவரின் இருக்கைக்கு அருகில் அமர்ந்தபடியே பிரசாரம் செய்கிறார். கூட்டம் மிகுதியாக இருக்கும் இடங்களில், அந்த லிஃப்ட் இருக்கை யில் அமர்கிறார். அது ஹைட்ராலிக் இயக்கத்தில் வேனின் மேற்கூரை வழியே உயர்ந்து நிலைகொள்கிறது. தடுப்புக் கண்ணாடிகள், நிழற்கூரை, மைக் வசதி என 'மொபைல் மாடம்’ போன்ற செட்டப்! ஸ்ரீரங்கத்தில் ராஜகோபுரத்தைக் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு, முதல்முறையாக அந்த மொபைல் மாடத்தில் அமர்ந்து, உயர்ந்து பிரசாரம் மேற்கொண்டார்.  

முசிறி ஏரியாவில் ஜெயலலிதாவின் வேனை நோக்கித் தொண்டர்கள் கூட்டம் முண்டியடிக்க, அவர்களை நெட்டித் தள்ளியது போலீஸ். கடுப்பான ஜெயலலிதா, 'அவர்கள் என்னைப் பார்ப்பதற்காக ஆவலோடு வந்திருக்கிறார்கள். உங்கள் முதுகைப் பார்ப்பதற்கா வந்திருக்கிறார்கள்? ஏன் இப்படி நடந்துகொள்கிறீர்கள்?’ என்று கடிந்துகொள்ள, பிடியைத் தளரவிட்டார்கள் போலீஸார்.

ஜெயலலிதாவை எதிர்த்து தி.மு.க. சார்பில் ஆனந்த் என்னும் புதுமுகம் களம் காண்கிறார். கட்சியில் குறிப்பிடத்தக்க பின்புலம் உள்ளவர் அல்ல. சாந்தபுரம் ஊராட்சியின் முன்னாள் கிளைக் கழகச் செயலாளர் என்பதுதான் கட்சியில் இவருக்கான அடையாளம். பல நூறு ஏக்கர் விவசாய நிலங்களுக்குச் சொந்தக்காரர். தற்போது கொடி கட்டிப் பறப்பது ரியல் எஸ்டேட் துறையில். தொகுதியில் கணிசமாக நிரம்பியிருக்கும் முத்தரையர் இனத்தைச் சேர்ந்தவர்.

''உங்களுடன் வாழ வந்துவிட்டேன்!''

அமைச்சர் கே.என்.நேருவின் தீவிர ஆதரவாளர் என்பதால், அடித்தது வேட்பாளர் யோகம். கட்சி முக்கியஸ்தர்களும் அடிப் பொடிகளும் இவரை அழைத்துக்கொண்டு வீதிவீதியாக வலம் வருகிறார்கள். ஆனால், தேர்தல் களத்துக்குப் புதிது என்பதாலோ, 'முன்னாள் முதல்வரை’ எதிர்த்துக் களம் காண்கிறோம் என்ற பதற்றமோ என்னவோ, படபடப்புடனே எவரையும், எதையும் எதிர் கொள்கிறார். பத்திரிகையாளர்களிடம் சம்பிரதாய பேட்டிக்குக்கூட 'அண்ணன் நேரு’ தலையசைத்தால்தான் வாய் திறக்கிறார். ஜெயலலிதாவின் புயல் வேகத்தோடு ஒப்பிட்டால், ஆனந்த் துக்குக் களப் பனிகள் போதாது. 'அம்மாவின் வெற்றி உறுதி!’ என்பதைத் தாண்டி, வாக்கு வித்தியாசத்தை அபாரம் ஆக்குவதற்கான முனைப்பில் ஓடியாடிக்கொண்டு இருக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்!