Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
தலையங்கம்

திர்க் கட்சிகளோ, ஊடகங்களோ தன் மீது ஒரு சிறு குற்றச்சாட்டை வைத்தாலும்கூட, பாய்ந்தோடி வந்து பதில் தருவதில் முதல்வர் கருணாநிதி காட்டும் வேகமே வேகம்தான்! குற்றச்சாட்டு எழுப்பியவரின் குலம், கோத்திரத்தை எல்லாம் புரட்டிப் போட்டு... சாதி, சரித்திரத்தைக் குத்திக் குதறி... புள்ளிவிவரங்களை அள்ளித் தெளிப்பார். எழுப்பப்பட்ட குற்றச்சாட்டை, தந்திரத்தோடு எதிர்கொள்வதில் அத்தனை வல்லவர்!

இந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியிலோ, பதிலே சொல்ல முடியாமல் அவர் மௌனம் காத்து மழுப்பிய பட்டியல் வெகு நீளம்.

கட்சியின் கௌரவத்துக்குரிய தென்மாவட்டத் தளகர்த்தர்களில் ஒருவரான தா.கிருட்டிணன் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கு விசாரணை, ஆந்திர மாநில நீதிமன்றத்தில் நடந்தது. அ.தி.மு.க. ஆட்சியின்போது இந்தக் கொலை வழக்கைப் பதிவுசெய்த அதே காவல் துறைதான், தி.மு.க. ஆட்சியின்போதும் தொடர்ந்து வழக்கை நடத்தியது. ஆனால், வழக்கில் சிக்கிய அனைவருமே பிறகு விடுதலை செய்யப்பட்டார்கள். அப்படியானால், பட்டப்பகலில் தா.கிருட்டிணனை யார்தான் வெட்டிச் சிதைத்தார்கள்? அவர்களுக்குப் பின்னால் இருந்தவர்கள் யார்? ஆளும் தி.மு.க. அரசு ஏன் அப்பீலுக்குப் போகவில்லை? தா.கி. தன்னைத்தானே வெட்டிக் கொன்றுகொண்டாரா? இதுவரை இதற்கெல்லாம் பதில் இல்லை!

கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது அரசாங்க மதுக் கடைகளில் 'மிடாஸ்' நிறுவனத்தின் சரக்குகளுக்கே ஏகபோகக் கொள்முதல் நடப்பதாகவும்... அந்த மது ஆலையின் பின்னே இருப்பது அன்றைய முதல்வரின் தோழி தொடர்பானவர்கள் என்பதால்தான், இந்த அநியாய ஏற்பாடு என்றும் முழங்கினார் கருணாநிதி. ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகும் அதே 'மிடாஸ்' நிறுவனத்தின் சரக்குகளை அரசாங்கம் மானாவாரியாகக் கொள்முதல் செய்தது. 'உள்ளுக்குள் என்ன ரகசிய ஏற்பாடு?' என்று எழுந்தது கேள்வி... வரவில்லையே பதில்!

கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரால் 'ஸ்டார் இன்ஷூரன்ஸ்' என்ற நிறுவனத்துடன் தி.மு.க. அரசு போட்ட ஒப்பந்தத்தின் பின்னணி பற்றி எதிர்க் கட்சித் தலைவர் ஜெயலலிதா கடுமையான கேள்விகளை எழுப்பினார். 'ஸ்டார்' அதிபர் சலாவுதீனுக்கும் தி.மு.க. தலைமைக்கும் மர்மத் தொடர்பு என்றும் குற்றம் சாட்டினார். பதில் என்னவோ - பேரமைதி மட்டுமே!

'ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீட்டு முறைகேடுகள் பற்றி வெளிநாட்டு ஊடகங்களும்கூட சரமாரியாகக் குற்றம்சாட்டின. 'குற்றமற்றவர் ஆ.ராசா. தலித் என்பதால், காழ்ப்பு உணர்வு' என்றார் முதல்வர் முதலில்! ராசாவுக்காக திஹார் சிறையின் கதவுகள் திறந்துகொண்டபோதோ, 'கைது செய்யப்படுவதாலேயே, ஒருவர் குற்றவாளி ஆகிவிட முடியாது’ என்பது கருணாநிதியின் சமாளிப்பு. அதன் பிறகு..? பேச்சு மூச்சே கிடையாது!

அறிவாலயத்தின் கீழ்த் தளத்தில் காங்கிரஸுடன் கூட்டணிப் பேச்சு... மேல் தளத்தில் மனைவியிடமும் மகளிடமும் சி.பி.ஐ. விசாரிப்பு என்ற வரலாறு காணாத விநோத நிலை எழுந்தபோது, 'இது பழிவாங்கல் நடவடிக்கை' என்றோ... 'சட்டத்தின் சம்பிரதாயமான விசாரிப்பு' என்றோகூட விளக்கம் சொல்ல முடியாத விபரீத சிக்கல் அவருக்கு!

ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி ராஜபக்ஷே அரசு நசுக்கிக் குவித்த தொடர் கொடுமைகளின்போது, 'தமிழினத் தலைவராகத் தூக்கி நிறுத்தப்பட்டவரே! தகுமா உங்களின் மௌனம்?' என்று நாள்தோறும் கிளம்பிய ஏராளமான கதறல் கேள்விகள், இந்து மகா சமுத்திரத்தின் இரைச்சலோடு கரைந்ததுதான் மிச்சம்!

இப்படி இன்னும் உண்டு சில பல மர்ம மௌனங்கள். இதற்கெல்லாம் பதில் தரத் 'தெரியாதவர்' அல்ல கருணாநிதி, 'முடியாதவர்' என்பதே உண்மை!  

முடியாமல்போனதற்கு என்ன காரணம்? சிந்திப்போம் நாம் தொடர்ந்து!