Published:Updated:

`எதையும் செய்யுங்கள், நாங்கள் இருக்கிறோம்!’- பிளான் B-யுடன் களமிறங்கிய மகாராஷ்டிரா பா.ஜ.க

சிவசேனாவின் ஆதரவு இல்லாமல் மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க வேறு புதிய பிளான் பற்றி பா.ஜ.க ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

மோடி - அமித் ஷா
மோடி - அமித் ஷா

மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் முடிவு கடந்த வாரம் வெளியானது. இந்த இரண்டு மாநிலங்களிலும் பா.ஜ.க பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஹரியானாவில், தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் ஜனநாயக ஜனதா கட்சியுடன் பா.ஜ.க கூட்டணி வைத்து ஆட்சியமைத்துள்ளது. ஆனால் மகாராஷ்டிராவில், தேர்தலுக்கு முன்னதாகவே கூட்டணி அறிவித்து அமோக வெற்றி பெற்றும் இன்னும் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சிவசேனா -பா.ஜ.க
சிவசேனா -பா.ஜ.க

இதற்குக் காரணம், தேர்தலுக்கு முன்னதாக இரு கட்சிகளுக்கும் இடையே நடந்த டீலிங். அங்கு சிவசேனாவுடன் கூட்டணி அமைத்திருந்தது பா.ஜ.க. அப்போது, `தங்கள் கூட்டணி வெற்றி பெற்றால், இரண்டரை வருடங்கள் பா.ஜ.க-வும் இரண்டரை வருடங்கள் சிவசேனாவும் ஆட்சியமைக்க வேண்டும்' என ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன்படி மகாராஷ்டிராவில் பா.ஜ.க - சிவசேனா கூட்டணிதான் வெற்றிபெற்றது.

முன்னதாகச் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, இரண்டரை ஆண்டுகால ஆட்சி தங்களுக்கு வேண்டும் எனப் பிடிவாதமாக நிற்கிறது சிவசேனா. ஆனால் ஒப்பந்தத்துக்கு மாறாக, `ஐந்து ஆண்டுகளும் எங்களுக்கு வேண்டும், உங்களுக்கு வேண்டுமானால் துணை முதல்வர் பதவி தருகிறோம்' எனக் கூறுகிறது பா.ஜ.க. இதை ஏற்க மறுத்து பா.ஜ.க தலைமையிடம் மோதல்போக்கைக் கடைபிடித்துக் கொண்டிருக்கிறது சிவசேனா.

சிவசேனா -பா.ஜ.க
சிவசேனா -பா.ஜ.க

இந்நிலையில், சிவசேனாவின் ஆதரவு இல்லாமலே மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க பா.ஜ.க, ஒரு பிளானை கையில் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுபற்றிப் பேசியுள்ள அம்மாநில பா.ஜ.க எம்.பி சஞ்சய் காக்கடே, “ சிவசேனா கட்சியில் வெற்றி பெற்ற 56 எம்.எல்.ஏ-க்களில் 45 பேர் எங்களுக்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளனர். அவர்கள் அனைவரும் எங்களுக்கு போன் செய்து ஆட்சியமைக்க வருமாறு அழைப்பு விடுத்து வருகின்றனர். எதை வேண்டுமானாலும் செய்யுங்கள், ஆனால் பா.ஜக ஆட்சியில் நாங்கள் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என அந்த எம்.எல்.ஏக்கள் கூறுகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

`தமிழர் vs தமிழர்; 2வது முறை ஜாக்பாட் அடித்த பட்னாவிஸின் நம்பிக்கை!'- மகாராஷ்டிரா தேர்தல் சுவாரஸ்யம்

பா.ஜ.க எம்.பி-யின் இந்தப் பேச்சால் மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்கும் முன்னரே கூட்டணிக்குள் சர்ச்சை வெடித்துள்ளது.

இது தொடர்பாகப் பேசியுள்ள சிவசேனாவைச் சேர்ந்த சஞ்சய் ராட், “ நாங்கள் சத்தியம் மற்றும் தர்மத்தின்படிதான் அரசியல் செய்துவருகிறோம். பா.ஜ.க-வுக்கும், காங்கிரஸுக்கும் எதிராகப் பலமான சூழலை உருவாக்கிய சரத்பவார் நிச்சயம் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்கமாட்டார்.

ஃபட்னாவிஸ் - தாக்கரே
ஃபட்னாவிஸ் - தாக்கரே

மகாராஷ்டிராவில் அரசு மற்றும் கூட்டணி தொடர்பாக விரைவில் எங்களின் முடிவு அறிவிக்கப்படும். மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுபற்றி நாங்கள் ஆலோசித்து வருகிறோம். நாங்கள் கேட்பதெல்லாம் ஒன்றுதான், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக எங்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை பா.ஜ.க நிறைவேற்ற வேண்டும் என்பது மட்டும்தான்” என்று கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவில் இரு கட்சியினருக்கும் இடையே தொடர் மோதல் நிலவுவதால் ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடித்துவருகிறது.