Published:Updated:

2ஜி ஊழலை திசைத் திருப்புகிறார் கருணாநிதி: ஜெ.

2ஜி ஊழலை திசைத் திருப்புகிறார் கருணாநிதி: ஜெ.

சென்னை, டிச.26,2010

2 ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலை திசை திருப்புவதற்காக நீதிமன்றங்கள் தம்மை விடுதலை செய்த, முடிந்து போன பழைய வழக்குகளையெல்லாம் மீண்டும் மீண்டும் கூறி, கருணாநிதி விஷம பிரச்சாரம் செய்து வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார். ##~~##

இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் குறித்து கடந்த 20-ம் தேதி அன்று செய்தியாளர்களின் கேள்விகளுக்கு கருணாநிதி பதில் அளித்த விதத்தையும், 21 மற்றும் 22-ம் தேதிகளில் முரசொலியில் கருணாநிதியால் வெளியிடப்பட்ட அறிக்கைகளையும் பார்க்கும்போது "குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்" என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.

கருணாநிதி, கடந்த 21-ம் தேதி வெளியிட்ட தனது அறிக்கையில், ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு பிரச்னையை தாம் பூதாகரமாக ஆக்குவதாக தெரிவித்து இருக்கிறார் -  உலக வரலாற்றிலே யாரும் இதுவரை நடத்தியிராத அளவுக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் உலக மகா ஊழலை ராசா மூலம் கருணாநிதி புரிந்து இருக்கிறார் - இந்த ஊழலே ஒரு பூதாகரமான ஊழல்தான் என்பதையும், இதை யாரும் பூதாகரமாக ஆக்கத் தேவையில்லை என்பதையும் கருணாநிதிக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

கருணாநிதி தன்னுடைய அறிக்கையில், 2009-ம் ஆண்டு மத்திய அமைச்சரவை பதவி ஏற்கும் போது, ராசா ஏற்கெனவே தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சராகப் பணியாற்றிக் கொண்டிருந்த காரணத்தால் அவருக்கு தொடர்ந்து அந்தத் துறை மீண்டும் ஒதுக்கப்பட்டதே தவிர, அதில் தி.மு.க. பிடிவாதமாக இல்லை என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

கருணாநிதியின் இந்தக் கூற்று "முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல்" அமைந்துள்ளது- டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்து, "வெளியில் இருந்து ஆதரவளிப்போம்" என்கிற முடிவை தி.மு.க. எடுத்ததற்கான காரணம் என்ன? - இதற்குக் காரணம் வளம் கொழிக்கும் இலாகாக்கள் கிடைக்காதுதான் என்பதும், பின்னர் தி.மு.க. கேட்ட வளம் கொழிக்கும் இலாகாக்களை தருவதாக பிரதமர் சொன்னதும், தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் மத்திய அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர் என்பதும் ஊரறிந்த விஷயம்.

தன்னுடைய அறிக்கையின் மூலம், தான் ஒரு "உலக மகா ஊழல் மன்னன்" மட்டுமல்ல, தான் "ஒரு உலக மகா பொய்யர்" என்பதையும் கருணாநிதி நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தி இருக்கிறார்.

தயாநிதி மாறன் மறுக்காதது ஏன்?

அடுத்தபடியாக, 600 கோடி ரூபாயை கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளிடம் கொடுத்துவிட்டுத்தான் தயாநிதி மாறன் மத்திய அமைச்சர் பதவியை பெற்றார் என்பது குறித்து பேட்டி அளித்த கருணாநிதி, இதை நம்புபவர்கள் அவர்களின் பெயர்களைப் போட்டு இந்தச் செய்தியை வெளியிட்டால் அவர்களை சட்ட ரீதியாகச் சந்திப்பதாக தன்னுடைய அறிக்கையில் கூறியிருக்கிறார்.

உண்மையிலேயே பணப் பரிமாற்றம் நடைபெறவில்லை என்றால் இந்த உரையாடலில் இடம் பெற்ற நீரா ராடியா மீதோ அல்லது இந்த உரையாடலை பதிவு செய்த வருமான வரித்துறை மீதோ அல்லது இதை வெளியிட்ட ஊடகங்கள் மீதோ கருணாநிதி நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும்.

முக்கியமாக, இதைச் சொன்ன நீரா ராடியா மீது மானநஷ்ட வழக்கு போட்டிருக்க வேண்டும். இல்லையெனில், தன் வீடுகளையும், தன் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் உள்ள வீடுகளையும், நிறுவனங்களையும், நிலங்களையும் மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை ஆகியவற்றின் சோதனைகளுக்கு ஆட்படுத்தி, தானும், தன் குடும்பத்தினரும் நிரபராதிகள் என்று நிரூபித்து இருக்க வேண்டும்.

இதையெல்லாம் செய்யாமல் ஏன் வெத்து வேட்டு அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார் கருணாநிதி?

இந்தச் செய்தியை மறுப்பதற்கு கருணாநிதி 15 நாட்கள் எடுத்துக் கொண்டதில் இருந்தும், பணம் கொடுத்ததாக கூறப்படும் தயாநிதிமாறன், இந்தச் செய்தியை இதுநாள் வரை மறுக்காததில் இருந்தும், இதில் உள்ள உண்மையை அறிவார்ந்த தமிழக மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள்.

ராசா கையாண்ட முறை..

கருணாநிதி தன்னுடைய அறிக்கையிலே, "ராசாவுக்கு முன்பு அந்தத் துறையிலே இருந்த அமைச்சர்கள், உகந்த முறை என்று கருதி என்ன நடைமுறையைப் பின்பற்றினார்களோ, அதே முறையைத்தானே ராசாவும் கையாண்டுள்ளார்?" என்று குறிப்பிட்டிருந்தார். இது அவருடைய அறியாமையைத் தான் காட்டுகிறது.

2ஜி ஸ்பெக்ட்ரம் விண்ணப்பங்களுக்கான கடைசி தேதியை ராசா மாற்றி அமைத்தது - தனக்கு வேண்டிய நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில், ஒரு மணி நேரத்தில் 1,650 கோடி ரூபாய்க்கான வரைவோலையை தர வேண்டும் என்று பத்திரிகைச் செய்தி வெளியிட்டது - S-TEL என்ற நிறுவனம் ஸ்பெக்ட்ரம் உரிமத்திற்கு 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் விலை கொடுத்து வாங்க முன்வந்த போதிலும், அந்த நிறுவனத்தின் விண்ணப்பத்தை நிராகரித்து, 1650 கோடி ரூபாய்க்குத்தான் தருவேன் என்று ராசா அடம் பிடித்தது - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து Empowered Group of Ministers-க்கு அனுப்பலாம் என்ற சட்டத்துறை அமைச்சரின் கருத்தினை புறக்கணித்தது - பாரதப் பிரதமரின் அறிவுரையை அவமதித்தது - தகுதி இல்லாத 85 நிறுவனங்களுக்கு அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்தது போன்றவைகள் எல்லாம், ராசாவுக்கு முந்தைய அமைச்சர்கள் கடைபிடித்த முறையா?

முதலில் வருபவருக்கு முதலில் தருவது என்ற கோட்பாட்டைக் கூட பின்பற்றாமல், "தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் தருவது" என்ற கோட்பாட்டைத்தான் ராசா கடைபிடித்து இருக்கிறார் என்பது ஊடகங்களால் வெளியிடப்பட்ட ஆவணங்களில் இருந்து தெளிவாகத் தெரிகிறது. ஆனால், கருணாநிதியோ தவறு ஒன்றுமே நடக்காதது போல் அறிக்கை வெளியிடுகிறார்.

"இரண்டு ஏக்கர் இலவச நிலம்" குறித்த ஒரு புள்ளி விவரத்தை அளித்து, அதிலே முறைகேடுகள் நடந்து இருக்குமானால், அதுகுறித்து அரசு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும் என்று தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார் கருணாநிதி.

அந்தத் திட்டமே ஒரு ஏமாற்றுத் திட்டம் என்பதையும், ஏழை, எளிய மக்களிடம் இருக்கின்ற நிலங்களை பறிக்கக்கூடிய உபத்திரவக்காரர் கருணாநிதி என்பதையும் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

மைனாரிட்டி தி.மு.க. அரசு அமைந்த பிறகு ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மக்களின் விவசாய நிலங்கள் தி.மு.க. அமைச்சர்களாலும், தி.மு.க.வினராலும் அபகரிக்கப்பட்டு உள்ளன என்பதுதான் உண்மை.

உதாரணமாக, பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு ஏக்கர் நிலம் 60 ஆயிரம் ரூபாய் என்ற வீதத்தில், ஆயிரக்கணக்கான ஏழை மக்களின் நிலங்களை, விவசாயத்தையே நம்பியிருந்த தலித் மக்களின் நிலங்களை முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, தி.மு.க.வில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி தனக்கு வேண்டியவர்களின் பெயரில் வாங்கி, அதை ஒரு கம்பெனிக்கு ஒரு ஏக்கர் 18 லட்சம் ரூபாய் என்ற அடிப்படையில் விற்று இருக்கிறார். அனைத்தும் ஏழை, எளிய மக்களிடமிருந்து மிரட்டி வாங்கப்பட்ட நிலங்கள். இது பத்திரிகைகளில் எல்லாம் வெளிவந்து இருக்கிறது.

ஆனால், இதுகுறித்து கருணாநிதி இன்று வரை வாய் திறக்கவில்லை. ஒரு வேளை தனக்கு வர வேண்டியது வந்துவிட்டதன் காரணமாக கமுக்கமாக இருக்கிறார் போலும்! - இதுபோன்று தான் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே நில அபகரிப்புகள் நடைபெற்று வருகின்றன. இதையெல்லாம் கருணாநிதி வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். இப்படிப்பட்ட நபர் "விவசாயிகளுக்கு உண்மையிலேயே நன்மை செய்ய வேண்டுமென்ற எண்ணத்தோடு நிலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன" என்று கூறி இருப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது.

கருணாநிதியின் துணைவி ராசாத்தியிடம் உதவியாளராக இருந்த சரவணன் என்பவரே, 350 கோடி ரூபாய் மதிப்பு வாய்ந்த சென்னை அண்ணாசாலையில் உள்ள வோல்டாஸ் நிலத்தை வாங்கி  விற்கும் அளவுக்கு உயர்ந்துவிட்டார் என்றால், கருணாநிதி குடும்ப உறுப்பினர்களின் வளர்ச்சியைப் பற்றி தமிழக மக்களே யூகித்துக் கொள்ளலாம்.

மூன்று ஆதாரங்கள்..

கடந்த 22-ம் தேதி அன்று முரசொலியில் வெளி வந்துள்ள அறிக்கையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் இழப்பு அனுமானத்தின் அடிப்படையில் சொல்லப்பட்டு இருக்கிறது  என்று தெரிவித்து, மாநில அரசின் பல்வேறு துறைகளை ஆராய்ந்து அறிக்கை அளிக்கும் தணிக்கை அதிகாரியின் ஆண்டறிக்கைகள் குறித்து நீட்டி முழக்கி இருக்கிறார் கருணாநிதி. அனுமானத்தைப் பொறுத்தவரையில் 'இழப்பின் மதிப்பு தான் அனுமானம்' என்பதையும், 'இழப்பு அனுமானம் அல்ல' என்பதையும் நான் ஏற்கெனவே கருணாநிதிக்கு எனது அறிக்கை வாயிலாக தெளிவுபடுத்தி விட்டேன். இழப்பின் மதிப்பு அனுமானம் அல்ல, யூகத்தின் அடிப்படையில் கணிக்கப்பட்டது அல்ல என்பதற்கு மூன்று ஆதாரங்கள் உள்ளன.

அதன்படி, முதலாவதாக, S-TEL என்ற நிறுவனம் 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் விலை கொடுத்து வாங்க முன் வந்தது - ஆனால், ராசா 2001-ல் நிர்ணயிக்கப்பட்ட 1,650 கோடி ரூபாய்க்கு உரிமங்களை விற்றார்- அந்த அடிப்படையில் இழப்பின் மதிப்பு கணிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவதாக, 1,650 கோடி ரூபாய் விலைக்கு உரிமங்களை வாங்கிய SWAN என்கிற Letter pad நிறுவனம், தனது 45 விழுக்காடு பங்குகளை ETISALAT  நிறுவனத்திற்கு சில நாட்களுக்குள் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்றிருக்கிறது- இதே போன்று UNITECH என்கிற Letter pad நிறுவனம், தனது 60 விழுக்காடு பங்குகளை TELENOR என்ற நிறுவனத்திற்கு 6,120 கோடி ரூபாய்க்கு விற்றிருக்கிறது. அந்த விலைக்கு அரசே கொடுத்திருந்தால், அந்த லாபம் மத்திய அரசுக்கு கிடைத்திருக்கும்- அதன் அடிப்படையிலும் இழப்பின் மதிப்பு கணிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவதாக, அண்மையில் 3G Spectrum விற்கப்பட்டுள்ளது- இதற்கு மத்திய அரசுக்கு கிடைத்த தொகை சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய்- 2G Spectrum இதைவிட அதிக மக்களால் பயன்படுத்தப்படுகிறது- இதே விலைக்கு 2G Spectrum  விற்கப்பட்டிருந்தால் மத்திய அரசுக்கு எவ்வளவு வருவாய் கிடைத்திருக்கும் என்ற அடிப்படையிலும் இழப்பின் மதிப்பு கணிக்கப்பட்டுள்ளது- எனவே இது அனுமானம் அல்ல - 2G Spectrum  பயன்பாடு இன்னும் அதிகம் என்பதால், CAG Report  -ல் குறிப்பிட்டுள்ளதை விட இழப்பின் மதிப்பு இன்னும் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.

இதேபோன்று, தணிக்கை அதிகாரியின் ஆண்டு அறிக்கைகளை பொறுத்தவரையில், மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசு மீதான குறைபாடுகளை தணிக்கைத் துறை சுட்டிக்காட்டுவது என்பது வழக்கமான ஒன்று என்றும், அந்தக் குறைபாடுகள் எல்லாம் கருணாநிதி ஆட்சி உட்பட அனைவரது ஆட்சிக்காலங்களிலும் நடைபெற்று இருக்கின்றன என்றும், அண்மையில் கூட,DLF நிறுவனத்திற்கு 26 ஏக்கர் நிலம் 99 ஆண்டு குத்தகைக்கு விடப்பட்டதில் 148 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று தணிக்கை அதிகாரி சுட்டிக்காட்டி இருக்கிறார்.

டான்சி, சிறுதாவூர், கொடநாடு...

ஒரு மாதத்திற்கு முன்பு வெளியிடப்பட்ட அதே அறிக்கையை மீண்டும் வெளியிட்டு இருக்கிறார் கருணாநிதி. 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலை மறைப்பதற்காக, மனம் போன போக்கில் அன்றாடம் ஏதேதோ உளறிக் கொண்டும், கிறுக்கிக் கொண்டும், பிதற்றிக் கொண்டும் வருகிறார் கருணாநிதி. இது, கருணாநிதி விரக்தியின் விளிம்பிற்கு சென்றுவிட்டதைத்தான் காட்டுகிறது.

2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் குறித்து தாம் அறிக்கை வெளியிட்டால், டான்சி வழக்கு, சிறுதாவூர் நிலம், கோடநாடு என்று பிதற்றுகிறார் கருணாநிதி. 2001-2006ஆம் ஆண்டைய எனது ஆட்சிக்காலத்தில் ஏதாவது புதிய பொய் வழக்குகளை போடலாமா என்று ஆராய்ச்சி செய்ய 28 பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்து பகீரத முயற்சி செய்தார் கருணாநிதி. ஆனால், அது, பலன் அளிக்கவில்லை.

என் மீது ஒரு புதிய வழக்குக் கூட போட முடியவில்லை. அதற்கு எந்த விஷயமும் கருணாநிதிக்கு கிடைக்கவில்லை. 2001-2006 ஆட்சிக் காலத்தில் ஒரு சிறு தவறு கூட நடைபெறாத தூய்மையான ஆ‍ட்சியை தாம் நடத்தியதால், என் மீது பொய் வழக்கு போட கருணாநிதிக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை. கடந்த 4 ஆண்டு காலமாக 2001-2006 சம்பந்தப்பட்ட கோப்புகளை துருவித் துருவிப் பார்த்தும், என் மீது வழக்குப் போட எதுவுமே கிடைக்கவில்லை. எனவேதான், 1991-1996 ஆட்சிக் காலத்திற்கு தொடர்புள்ள பழைய பொய் வழக்குகளை திரும்பத் திரும்ப கூறி வருகிறார்.

டான்சி வழக்கைப் பொறுத்த வரையில், நான் முதலமைச்சராக இருந்த காலத்தில் தாம் பங்குதாரராக இருந்த ஒரு நிறுவனம் டான்சி நிலத்தை வாங்கியதைத் தவிர அதில் வேறு எந்த முறைகேடும் நடைபெறவில்லை. அந்த நிலமும் அரசுக்கு திருப்பி கொடுக்கப்பட்டுவிட்டது. எனவே, அதில் அரசுக்கு இழப்பீடு என்ற பேச்சுக்கே இடமில்லை. இதனை உச்ச நீதிமன்றமே தெளிவுபடுத்திவிட்டது.

இதே போன்று, தமிழ்நாடு அரசு வசம் இருந்த ஸ்பிக் நிறுவனப் பங்குகளை தாம் அந்த நிறுவனத்திற்கே கொடுத்துவிட்டதாக கூறி, 1996 ஆம் ஆண்டு ஒரு பொய் வழக்கை போட்டார் கருணாநிதி. ஆனால், அந்த பங்குகளை தாம் அன்று விற்கவில்லை என்றால், இன்று தமிழக அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு இருக்கும்.  அந்த அளவுக்கு ஸ்பிக் நிறுவன பங்குகளின் விலை மிகவும் குறைந்துவிட்டது. என்னால் தமிழக அரசிற்கு லாபம் தான் ஏற்பட்டு இருக்கிறது.

சிறுதாவூர் நிலத்தைப் பொறுத்த வரையில், எனக்கும், அதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இதை கருணாநிதியால் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையமே தெளிவுப்படுத்திவிட்டது. கொடநாடு எஸ்டேட்டைப் பொறுத்த வரையில், எல்லாமே முறைப்படி தான் நடைபெற்று இருக்கிறது. ​அங்குள்ள சாலை, எஸ்டேட்டிற்கு சொந்தமானது என்று சென்னை உயர் நீதிமன்றமே தெளிவாக தீர்ப்பளித்து இருக்கிறது.

பெங்களூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு கருணாநிதியால் புனையப்பட்ட பொய் வழக்கு. அந்த வழக்கு நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதால் அதைப்பற்றி நான் எதுவும் சொல்வது முறையல்ல. தீர்ப்பு அளிக்கப்படும் போது உண்மை வெளிவரும் என்பதை மட்டும் தற்போது சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலை திசை திருப்புவதற்காக, நீதிமன்றங்கள் என்னை விடுதலை செய்த, முடிந்து போன பழைய வழக்குகளையெல்லாம் மீண்டும் மீண்டும் கூறி கருணாநிதி விஷமப் பிரச்சாரம் செய்து வருகிறார்.

கருணாநிதியின் இந்த திசை திருப்பும் முயற்சி பயனளிக்காது. கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினரின் கொள்ளைகள், கொலைக் குற்றவாளியான தன் மகனை மத்திய அமைச்சராக்கியது, பல கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்தது என கருணாநிதியின் மக்கள் விரோத நடவடிக்கைகள் குறித்து பட்டிதொட்டியெங்கும் பிரச்சாரம் செய்யப்படும். கருணாநிதியின் கூற்று மக்கள் மத்தியில் எடுபடாது. கருணாநிதியும், அவரது குடும்ப உறுப்பினர்களும் வீழ்வது உறுதி.

"வீழ்வது யாராக இருப்பினும், வளம் பெறுவது தாமும், தம் குடும்பமுமாக இருக்கட்டும்" என்பதன் அடிப்படையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கருணாநிதியையும், அவரது கொடுங்கோல் குடும்ப ஆட்சியையும், தமிழக மக்கள் வீழ்த்தத் தயாராகிவிட்டார்கள் என்பதைக் தெரிவித்துக் கொள்வதாக ஜெயலலிதா கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு