Published:Updated:

அரசின் ஊழல்களை சுட்டி காட்டினால் அவதூறு வழக்கா? ஆவேசமாகும் ராமதாஸ்!

Vikatan Correspondent
அரசின் ஊழல்களை சுட்டி காட்டினால் அவதூறு வழக்கா? ஆவேசமாகும் ராமதாஸ்!
அரசின் ஊழல்களை சுட்டி காட்டினால் அவதூறு வழக்கா? ஆவேசமாகும் ராமதாஸ்!
அரசின் ஊழல்களை சுட்டி காட்டினால் அவதூறு வழக்கா? ஆவேசமாகும் ராமதாஸ்!

சென்னை: அரசின் தவறுகளையும், ஊழல்களையும் ஆதாரங்களுடன் சுட்டி காட்டினால் அவதூறு வழக்கு போட்டு மிரட்டிப்பணிய வைக்கலாம் என்று ஆட்சியாளர்கள் கருதுகின்றனர் என்று ராமதாஸ் கூறி உள்ளார்.

இது குறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அரசு கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவனத்தில் தலைவிரித்தாடும் ஊழல்கள் குறித்தும், இலவசமாக நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சிகள் பழிவாங்கப்படுவது குறித்தும் கடந்த 15 ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன். நான் குறிப்பிட்டிருந்த உண்மைகள் சுட்டதால் பதறிப்போன அரசு, கம்பிவட நிறுவனத்தின் தலைவர் மூலம் என் மீது இரு அவதூறு வழக்குகளை தொடர்ந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் 4 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் ஊழலைத் தவிர வேறு எதுவும் நடக்கவில்லை. ஆனால், தங்களின் எந்தத் தவறையும் யாரும் சுட்டிக்காட்டக் கூடாது என்று ஆட்சியாளர்கள் கருதுகின்றனர். அரசின் தவறுகளையும், ஊழல்களையும் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டும்போது, அவதூறு வழக்கு என்ற ஆயுதத்தைக் காட்டி மிரட்டிப் பணிய வைத்து விடலாம் என்று ஆட்சியாளர்கள் கருதினால் அவர்களுக்கு ஏமாற்றமும், தோல்வியும் தான் மிஞ்சும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசு கம்பிவடத் தொலைக்காட்சியில் எப்படியெல்லாம் ஊழல் நடக்கிறது என்பதை புள்ளி விவரங்களுடன் விளக்கியிருந்தேன். இது தொடர்பான அனைத்து உண்மைகளையும் வெளிக்கொண்டுவர விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவனத்தில் ஊழல் நடைபெறவில்லை என்றால் அதை விசாரணை நடத்தி நிரூபித்திருக்கலாம். ஆனால், அதற்கெல்லாம் முன்வராத ஆட்சியாளர்கள் அவசர அவசரமாக அவதூறு வழக்கு தொடர்ந்திருப்பதிலிருந்தே கம்பிவட தொலைக்காட்சி நிறுவன ஊழல்கள் அம்பலமாகிவிடக் கூடாது என்ற அவர்களின் நடுக்கம் தெரிகிறது.

ஒரு கம்பிவட இணைப்புக்கு அதிகபட்சமாக ரூ.70 மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. இதைவிட அதிக கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பதை அவதூறு வழக்குத் தொடர்ந்த கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவரோ அல்லது அவரை இயக்குபவர்களோ ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியுமா? நிர்ணயிக்கப்பட்டதைவிட கூடுதலாக வசூலிக்கப்படும் கட்டணம் யாருக்கு செல்கிறது?

தமிழகத்தில் அரசு கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு மொத்தம் எத்தனை இணைப்புகள் உள்ளன? என்பது தொடர்பாக ஆட்சியாளர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறுகின்றனர். கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவனத்தின் இணையதளத்தில் 01.09.2013 நிலவரப்படி 62.17 லட்சம் இணைப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 04.07.2014 அன்று அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதியக் கடிதத்தில் 65 லட்சம் இணைப்புகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட மானியக் கோரிக்கையில் 15.07.14 நிலவரப்படி 70.52 லட்சம் இணைப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடைசியாக மக்கள் தொலைக்காட்சி வழக்கில் 07.04.2015 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவனம் தாக்கல் செய்த பதில் மனுவில் 50 லட்சம் இணைப்புகள் மட்டுமே இருப்பதாகவும், அதன் மூலம் மாதம் ரூ.10 கோடி மட்டுமே வருமானம் வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் எது உண்மை?

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விவரங்களின்படி, தமிழகத்தில் சுமார் 2 கோடி குடும்பங்கள் கம்பிவட இணைப்புக்கள் பெற்றுள்ள நிலையில், அரசு நிறுவனம் 50 லட்சம் இணைப்புகளை மட்டும் தான் வழங்கியிருக்கிறது என்றால் மீதமுள்ளவற்றை எந்த நிறுவனம் வழங்கியுள்ளது? பிற நிறுவனங்கள் சுமார் 25 லட்சம் இணைப்புகளை மட்டுமே வைத்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், மீதமுள்ள ஒரு கோடிக்கும் அதிகமான இணைப்புகள் கணக்கில் காட்டப்படாமல், அதிலிருந்து கிடைக்கும் வருவாய் சுரண்டப்படுகிறது என்பதில் என்ன தவறு?

தமிழ்நாடு முழுவதும் 800 உள்ளூர் தொலைக்காட்சிகள் அரசு கம்பிவடத்தில் காட்டப்படுவதாக கம்பிவட நிறுவனத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மானியக் கோரிக்கையில் 706 உள்ளூர் தொலைக்காட்சிகள் இணைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில் ஆயிரத்திற்கும் அதிகமான உள்ளூர் தொலைக்காட்சிகள் அரசு கம்பிவடம் மூலம் வழங்கப்படுகின்றன. ஒரு உள்ளூர் தொலைக்காட்சியை ஒளிபரப்ப ரூ.7 லட்சம் வரை வசூலிக்கப்படுவதாக நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் கூறியுள்ளார். அதில் பாதிக்க்கும் குறைவாகவே வசூலிக்கப்படுவதாக வைத்துக் கொண்டாலும் கணக்கில் காட்டப்படாத உள்ளூர் தொலைக்காட்சிகளிடமிருந்து கிடைக்கும் பணம் யாருக்கு செல்கிறது?
வட்டார அளவில் அரசு கம்பிவட தொலைக்காட்சி நிறுவன நிர்வாகத்தில் ஆளுங்கட்சி தலையீடு அதிகமாக உள்ளது. கணக்கில் காட்டப்படாத உள்ளூர் தொலைக்காட்சிகளுக்கான கட்டணத்தை இவர்கள் தான் வசூலித்து உரியவர்களிடம் சேர்ப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்த அரசு தயாரா?

கட்டணத் தொலைக்காட்சிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.14 கோடி கட்டணமாக வழங்கப்படுகிறது. இதில் பெரும் பகுதி ஆளுங்கட்சித் தொலைக்காட்சியான ஜெயா தொலைக்காட்சிக்குத் தான் வழங்கப்படுகிறது. கட்டணத் தொலைக்காட்சிகளில் பலவற்றுக்கு கம்பிவட நிறுவனம் எந்த கட்டணமும் செலுத்துவதில்லை. மாறாக பல கட்டணத் தொலைக்காட்சிகளிடமிருந்து கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்புக் கட்டணம் வசூலிக்கிறது. அவ்வாறு இருக்கும்போது ஜெயா தொலைக்காட்சிக்கு மட்டும் மக்கள் பணத்தை வாரி வாரி இறைப்பது ஏன்?
மேற்கண்ட வினாக்களுக்கு ஆட்சியாளர்களால் பதில் கூற முடியாது. அதனால் தான் அவதூறு வழக்குத் தொடர்கிறார்கள். தொட்டவை அனைத்திலும் ஊழல் செய்யும் அ.தி.மு.க. அரசை மக்கள் தூக்கியெறியும் நாள் தொலைவில் இல்லை. அப்போது இந்த அவதூறு வழக்குகளும் தூள்தூளாகும்" என்று கூறி உள்ளார்.