Published:Updated:

விஜயகாந்த் தலைமையில் தமிழக அரசியல் குழு பிரதமருடன் சந்திப்பு!

Vikatan Correspondent
விஜயகாந்த் தலைமையில் தமிழக அரசியல் குழு பிரதமருடன் சந்திப்பு!
விஜயகாந்த் தலைமையில் தமிழக அரசியல் குழு பிரதமருடன் சந்திப்பு!

புதுடெல்லி: மேக்கேதாட்டூவில் கர்நாடக அணை கட்டும் பிரச்னை தொடர்பாக தேமுதிக தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் தலைமையில் திமுக உள்பட பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினர்.
 

விஜயகாந்த் தலைமையில் தமிழக அரசியல் குழு பிரதமருடன் சந்திப்பு!

மேக்கேதாட்டூவில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடியை தன்னிச்சையாக சந்தித்து, மேக்கேதாட்டூவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக மனு கொடுத்தார்.

இதனிடையே, மேக்கேதாட்டூ அணை பிரச்னை தொடர்பாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த், அதிமுகவை தவிர்த்து திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சித் தலைவர்களை நேற்று சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில், தமிழக அரசியல் கட்சி குழுவுடன் இன்று டெல்லி சென்ற விஜயகாந்த், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது, மேக்கேதாட்டூவில் கர்நாடகா அரசு அணை கட்டுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

மேலும், முல்லைப் பெரியாறு அணை, மீனவர்கள் பிரச்னை, செம்மர கடத்தல், நில கையகப்படுத்தும் மசோதா உள்ளிட்டவை பற்றியும் பேசப்பட்டது.

இந்த குழுவில் திமுக சார்பில் திருச்சி சிவா, கனிமொழி, பாஜக சார்பில் பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை செளந்தரராஜன்,  காங்கிரஸ் சார்பில் நாசே ராமச்சந்திரன், கோபண்ணா, மதிமுக சார்பில் கணேசமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் சார்பில் தலைவர் தொல்.திருமாவளவன், தமாக சார்பில் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், இந்திய ஜனநாயக கட்சி சார்பில் தலைவர் பாரிவேந்தர், ரவி பச்சமுத்து, ஜெயசீலன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.