Published:Updated:

'தூக்கி அடிச்சிப்புடுவேன் பாத்துக்க...!'- டெல்லியில் டென்ஷனான விஜயகாந்த்!

Vikatan Correspondent
'தூக்கி அடிச்சிப்புடுவேன் பாத்துக்க...!'-   டெல்லியில் டென்ஷனான விஜயகாந்த்!
'தூக்கி அடிச்சிப்புடுவேன் பாத்துக்க...!'- டெல்லியில் டென்ஷனான விஜயகாந்த்!

புதுடெல்லி: டெல்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது, கேள்வி எழுப்பிய ஒரு பத்திரிகையாளரைப் பார்த்து, 'தூக்கி அடிச்சிப்புடுவேன் பாத்துக்க...!' என  விஜயகாந்த் ஆவேசமாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேகேதாட்டூவில் கர்நாடக அணை கட்டும் பிரச்னை உள்ளிட்ட தமிழகத்தின் 5 முக்கிய பிரச்னைகள் குறித்து, தேமுதிக தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் தலைமையில் திமுக உள்பட பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து பேசினர்.
 
அதனைத் தொடர்ந்து, பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் விஜயகாந்த்.

இந்த கூட்டுமுயற்சி எல்லா பிரச்னைகளிலும் தொடருமா? என்ற கேள்வி பதிலளித்த விஜயகாந்த், "
முதல்லே சொன்னேல்லா, நல்ல பிரச்னைகளிலும் தொடரும், அவரவர் கட்சி பிரச்னை அவர்களுக்கு. கூட்டு பிரச்னை நல்லெண்ணம். மக்களுடைய நல்ல பிரச்னைகளுக்கெல்லாம் தொடரும்" என்றார்.

டென்ஷனான விஜயகாந்த்

அப்போது ஜெயா தொலைக்காட்சி நிருபர் எழுப்பிய ஒரு கேள்வியினால் டென்ஷனானார் விஜயகாந்த்.

'தூக்கி அடிச்சிப்புடுவேன் பாத்துக்க...!'-   டெல்லியில் டென்ஷனான விஜயகாந்த்!

ஜெயா தொலைக்காட்சி நிருபர், ''சார், நீங்கள் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி தலைவராக...'' என கேள்வியை முடிப்பதற்குள் விஜயகாந்த் குறுக்கிட்டு, ''நீங்க ஜெயா டிவில்ல. இல்ல... இல்ல நீங்க ஜெயா டி.வி. நான் பேசமாட்டேன்'' என்றவர், மற்ற பத்திரிகையாளர்களைப் பார்த்து, ''சொல்லுங்க. அவரு வீம்புக்குன்னே கேட்பார் சார். உங்க பேட்டியெல்லாம் கெட்டுபோய் விடும்'' என்றார்.

மீண்டும் அந்த தொலைக்காட்சி நிருபர் அதே கேள்வியை கேட்க முயற்சிக்கவும், அவரைப் பார்த்து டென்ஷன் ஆன விஜயகாந்த், ''நீங்க சும்மா இருங்க. இல்லாட்டி நான் குண்டக்க மண்டக்க பேசிடுவேன். ஜெயலலிதாவையும் குண்டக்க மண்டக்க திட்டுவேன்'' என்றார்.

இதைத்தொடர்ந்து இன்னொரு நிருபர், ''சார் பிரதமரை சந்தித்தது குறித்து சொல்லுங்க?'' என்றார்.

அதற்கு, ''பிரதமர் நல்லாத்தான் சார் சொல்லியிருக்கார். அரைமணி நேரம் பேசியிருக்கிறார். நல்லா பண்ணுகிறேன்னு சொல்லியிருக்கார்'' என்றார்.

இதைத்தொடர்ந்து, தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் செயல்பாடு எவ்வாறு இருக்கிறது? எனக் கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த விஜயகாந்த், "திருப்திகரமாகத்தான் இருக்கிறது. இங்கு அனைத்து கட்சியினரும் இருக்காங்க. அனைவரும்தான் அதற்கு பதில் சொல்லணும்" என்றார்.

இதைத்தொடர்ந்து மீண்டும் ஜெயா டி.வி. நிருபர் மீண்டும் ஒரு கேள்வியை கேட்க முயல, ''சார் கேள்வி கேட்கக்கூடாது. எனக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் கிடையாது. சார், உங்க ஜெயா டி.வி.க்காக கேள்வி கேட்க உங்களுக்கு உரிமை இருக்கும்போது, பதில் சொல்ல வேண்டாம் என்கிற உரிமை எனக்கு இல்லையா?'' என டென்ஷனான விஜயகாந்த்,

''ஏன் நீங்க பேசுறீங்க. மற்றவங்களை டிஸ்ட்ரப் பண்ணணும்னா. கம்முன்னு இருக்க மாட்டியா? தூக்கி அடிச்சிப்புடுவேன் பாத்துக்க'' என ஒருமையில் கூறினார்.

மேலும், ''உனக்குத்தான் பேசத்தெரியுமா?'' என்று கேட்டவாறு, ஆவேசத்துடன் விஜயகாந்த் தனது இருக்கையில் இருந்து எழுந்து, ஜெயா டி.வி. என்றால் என்ன கொம்பா? என ஆவேசமடைந்த அவரை அருகில் இருந்த மற்ற கட்சியினர் பிடித்து அமர வைத்தனர்.

இருப்பினும், ஆவேசம் குறையாத விஜயகாந்த்தை மற்றவர்கள் அமைதிப்படுத்தினர். அப்போது, பத்திரிகையாளர்களும், மற்ற சில கட்சியினரும் பேசிக்கொண்டனர். இதனால், மேலும், ஆவேசம் அடைந்த விஜயகாந்த், 'நீங்களே பதில் சொல்லுங்க' எனக் கூறிவிட்டு எழுந்து சென்று விட்டார்.

இதையடுத்து, புதிய நீதிக்கட்சித்தலைவர் ஏ.சி.சண்முகம்,'அண்ணே... அண்ணே..!' எனக்கூறியபடியே விஜயகாந்த் பின்னால் ஓடிச்சென்று அழைத்தார். ஆனால், விஜயகாந்த் மறுப்பு தெரிவிக்க, மீண்டும், ஏ.சி.சண்முகம் அவரை சமாதானம் செய்து அழைத்து வந்தார்.

இதன்பின்னர், 'நீங்க கேளுங்க... நீங்க கேளுங்க' என மற்ற நிருபர்களிடம் கூறி தனது பேட்டியை தொடர்ந்தார் விஜயகாந்த்.