Published:Updated:

''இது நான் எதிர்பார்க்காத அதிர்ச்சி!''

எஸ்.கலீல்ராஜாபடம்: வி.செந்தில்குமார்

##~##
களையான ரணகளங்களுக்கு அடையாளமான சத்தியமூர்த்தி பவன்... 'தேர்தல் குற்றவாளி தங்கபாலுவைக் கட்சியைவிட்டு நீக்கு!’, 'Remove thangabalu... Save Congress!’, 'தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து தங்கபாலுவை நீக்கு!’ என தங்கபாலுவை எதிர்த்து நடந்த உண்ணாவிரதப் பந்தலில், ஃப்ளெக்ஸ் பேனர்கள் தொங்குகின்றன. சோனியா, ராகுல், தங்கபாலு சிரிக்கும் பெரிய ஃப்ளெக்ஸ் ஹோர்டிங்கில், தங்கபாலு முகம் மட்டும் கிழிக்கப்பட்டு இருக்கிறது. காங்கிரஸ் தொண்டர்களைவிட, அதிகமாக கட்சி அலுவலக வளாகத்தில் காக்கிச் சட்டைகள் கூட்டம். உள்ளே எந்தச் சலனமும் காட்டாமல் டிரேட் மார்க் சிரிப்பில் கை கூப்பி வரவேற்கிறார் கே.வி.தங்கபாலு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
''இது நான் எதிர்பார்க்காத அதிர்ச்சி!''

''மயிலாப்பூர் தொகுதியில் என்னதான் பிரச்னை? உங்க மனைவியை வேட்பாளரா அறிவிச்சீங்க. அவங்க மனு நிராகரிக்கப்பட்டதும், யாருமே எதிர்பார்க்காமல், நீங்க வேட்பாளர் ஆகிட்டீங்க?''

(பேச வாயைத் திறந்தவர், கேமராவைப் பார்த்ததும் அப்படியே ஃப்ரீஸ் ஆகி போஸ் கொடுக்கிறார்.) ''தமிழ்நாட்டில் எந்தத் தொகுதியிலும் நிற்பதற்கு நான் முடிவு எடுக்கவில்லை. (மீண்டும் ஒரு கேமரா லுக்!) 'சட்டமன்றத்துக்குப் போட்டியிடுவது இல்லை’ என்று முன்பே முடிவு எடுத்தேன். திருமதி ஜெயந்தி தங்கபாலுவின் மனு நிராகரிப்பட்டதால், மாற்று வேட்பாளராக நான் போட்டியிடுகிறேன். வேட்பாளர் மனு நிராகரிக்கப்பட்டால், மாற்று வேட்பாளர் தன் கடமையை நிறைவேற்ற வேண்டும். எனது கடமையை நான் நிறைவேற்றப்போகிறேன். ஆகவே, இந்தத் தேர்தலில் நான் போட்டியிடுவது அவசியம்!''

''போட்டியிடுவது இல்லை என்று முடிவு செய்த பிறகு, எதற்கு மாற்று வேட்பாளராக மனு கொடுத்தீர்கள்?''

''இது நான் எதிர்பார்க்காத அதிர்ச்சி!''

(நெற்றி சுருக்கி யோசிப்பவர், பளிச்சென்று சிரித்துவிட்டு ஆரம்பிக்கிறார்.) ''எல்லா சட்டமன்ற வேட்பாளர்களுக்கும் தங்களது விருப்பத்துக்கு ஏற்ப மாற்று வேட்பாளர்களை நிறுத்தலாம். பல வேட்பாளர்கள் தங்கள் மனைவியின் பெயரை, உறவினர் பெயரை எழுதிக் கொடுத்தனர். அதைப் போலவே எனது மனைவியும், எனது பெயரை மாற்று வேட்பாளராகக் கொடுத்திருந்தார். அவரது மனு உறுதியாக ஏற்றுக்கொள்ளப்படும் என்கிற நம்பிக்கை எனக்கு இருந்தது. அதனால், சம்மதித்தேன். மனு தள்ளுபடி ஆகும்... நான் போட்டியிடுவேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. இப்படி ஒரு சூழலை நான் சந்தித்ததே இல்லை!''

''எவ்வளவோ தேர்தல்களைப் பார்த்திருப்பீர் கள்... ஒரு வேட்பு மனுவுக்குத் தேவையான விஷயங்கள்கூடவா தெரியாது?''

''நான் ஆறு முறை தேர்தல் களம் கண்டவன். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வேட்பாளர்களுக்கும் எப்படி வேட்பு மனுவைப் பூர்த்திசெய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கியவன் நான். எனக்கே இப்படி ஒரு நிலைமை. இருந்தாலும், இதற்கு நான் காரணம் அல்ல. மனு தாக்கல் முடிந்ததுமே... நான்கு அதிகாரிகள் அதைச் சரி பார்ப்பார்கள். அப்படிச் சரி பார்த்து, 'நீங்கள் கொடுத்த மனு முறையாக இருக்கிறது’ என்று சொன்னார்கள். கடைசியில் 'இரண்டு ஆவணங்களை இணைக்கவில்லை’ என்று தள்ளுபடி செய்தார்கள். அது எனக்கு விசித்திரமாகவும் புதுமையாகவும் இருந்தது. இது நான் எதிர்பார்க்காத அதிர்ச்சி!''

''எல்லா கட்சிகளிலும் கட்சித் தலைவர் தங்களின் தொகுதிக்கு வந்து போட்டியிட வேண்டும் எனத் தொண்டர்கள் விருப்ப மனு கொடுப்பார்கள். ஆனால், காங்கிரஸில் மட்டும் நீங்கள் தேர்தலில் நிற்பதையே உங்கள் கட்சிக்காரர்கள் எதிர்க்கிறார்களே?''

''நான் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று அறிவித்த பின்னரும், என் மேல் உள்ள அன்பால் பல தொண்டர்கள் எனக்காக வேட்பு மனு தாக்கல் செய்ய முயற்சி செய்தார்கள். நான்தான் மற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்தில், வேண்டாம் என்று மறுத்துவிட்டேன்!''

''தினமும் உருவ பொம்மை எரிப்பு, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என உங்களுக்கு எதிராகப் போராட்டங்கள் நடக்கின்றனவே?''

''சீட் கிடைக்காத ஆத்திரத்தில் சிலர் இப்படித் தொண்டர்களைத் தூண்டிவிடுகிறார்கள். அவர்கள் மீது உரிய நேரத்தில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கட்சியில் இருப்பவர்கள் தன்னலம் பார்க்கக் கூடாது. அது நல்ல பண்பு அல்ல. அவர்கள் மனம் திருந்தி வாழ வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்காக நான் சில சந்தர்ப்பங்களை வழங்குகிறேன். இது என் பலவீனம் அல்ல!''

''இதுவரை தேர்தல் பிரசாரத்துக்கு சோனியாவோ, ராகுல் காந்தியோ வரவில்லையே?''

''இப்போதானே ஆரம்பிச்சிருக்கு. பொறுத்திருந்து பாருங்க!''

''கட்சி வாசலிலேயே உங்க எதிர்ப்பாளர்கள் எந்நேரமும் இருக்கிறார்களே... எப்படிச் சமாளிக்கிறீங்க?''

''எந்தக் கட்சியில்தான் குழப்பம் இல்லை? எங்கள் கட்சி அதிக ஜனநாயகம் உள்ள கட்சி. அதனால், சில குழப்பங்கள் வரத்தான் செய்யும். காலையில் சிலர் உண்ணாவிரதம் இருந்தாங்க. நானே அவங்ககிட்ட போய் பேசினேன். 'ஏன் எங்களுக்கு சீட் தரலை?’ன்னு கேட் டாங்க. 'மொத்தம் 2 ஆயிரத்து 500 பேர் சீட் கேட்டீங்க... கிடைச்சது 63 சீட்தான். எப்படிப் பிரிச்சுக் கொடுக்குறதுன்னு நீங்களே சொல்லுங்க?’ன்னு கேட்டேன். அவங்க ஒண்ணுமே சொல்லலை. இனி மேல் என்னை எல்லாரும் புரிந்து கொள்வார்கள்!''