Published:Updated:

ஜாலிடிக்ஸ்!

அரசியல் அப்பாடக்கர்ஓவியங்கள் : ஹரன்

சிரிப்பொலி, ஆதித்யா சேனல்களை மிஞ்சுகிறது சன் நியூஸ், கலைஞர் செய்திகள், ஜெயா செய்திகள், கேப்டன் செய்திகள், மெகா டி.வி செய்திகள். இந்தத் தேர்தலில் எக்கச்சக்கக் காமெடிகள். அந்த ராவடிகளைக் கொஞ்சம் பார்த்துவிடலாமா?

 ##~##

வைகோ: இந்தத் தேர்தலில் மே மாதத்து ம்ம்ம்ம்மே வைகோதான்! அறிவிக்கப்படாத அ.தி.மு.க பேச்சாளராக, நண்பேன்டா என்று நாடி, ஓடி வந்த வைகோவுக்கு ஐந்து ஆண்டுகள் கழித்து அம்மா தந்தது... அசல் அல்வா! 'அவருக்கு இவ்ளோ சீட்டு... இவருக்கு அவ்ளோ சீட்டு’ என்று எக்கச்சக்க சேதிகள் வர, வைகோவுக்கோ கார்டனில் உட்காரக்கூட சீட் கொடுக்கவில்லை. 'வர்ர்ர்ர்ரும்ம்ம்ம்... ஆனா, வர்ர்ர்ர்றாது’ கணக்காகக் காட்சிகள் நகர்ந்தன. கூட்டணிக் கட்சிகள் குண்டக்க மண்டக்க எகிறும்படி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஜாலிடிக்ஸ்!

அதிரடியாக அ.தி.மு.க ஒரு வேட்பாளர் பட்டியல் அறிவிக்க... கலகலத்தது இலை அண்ட் கோ. 'மூணாவதா அமைப்போம்டா முக்காபுலா கூட்டணி’ என்று முழங்கியவர்கள்கூட, கறுப்பு எம்.ஜி.ஆரைப் பார்த்துக் கை குலுக்கினார்களே தவிர, கறுப்புத் துண்டுப் பக்கம் கால் வைக்கவே இல்லை. கடைசியாக, பொதுக் குழு, போண்டா குழு கூட்டி, விடிய விடிய ஆலோசனை நடத்திய வைகோ, விடிந்ததும் 'போங்கடா டேய்!’ என்று தேர்தலைப் புறக்கணித்தார். 'வெளியில 20 தர்றாங்க, 25 தர்றாங்கன்னு பேசினாங்க. ஆனா, சிங்கம் சிங்கிள் டிஜிட்டாத்தான் வரும்னு பத்துக் குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லச் சொன்னாங்க... அவ்வ்வ்வ்வ்!’ என்று அழுவாச்சி காவியம் தீட்டியது கலிங்கப்பட்டி கண்ணீர்ப் புலி!

ஜாலிடிக்ஸ்!

தங்கபாலு: 'நீங்க எவ்வளவு நல்லவன்னு நினைக்கிறீங்களோ... நான் அவ்வளவு கெட்டவன், நீங்க எவ்வளவு கெட்டவன்னு நினைக்கிறீங்களோ... நான் அவ்வளவு நல்லவன்’ என்ற 'மாப்பிள்ளை’ தனுஷ் பஞ்ச்சுக்கு மானாவாரியாகப் பொருந்துபவர் தங்கபாலு. ஒருவழியாக, காங்கிரஸும் தி.மு.க-வும் கா விட்டு, பழம் விட்டு கை கோக்க, சைலன்ட் பாம் போட்டு வயலன்ஸைக் கிளப்பினார் தங்கபாலு. '63 நாயன்மார்களைப்போல 63 காங்கிரஸ் வேட்பாளர்கள்’ என்று கருணாநிதி சிலேடைத் தமிழில் சிக்குபுக்கு டான்ஸ் ஆட, தங்கபாலு வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில்தான் தெரிந்தது, 63 நாயன்மார்களில் அவரது மனைவியும் உண்டு என்று. 'மாத்துங்கடா தலைவரை’ என்று கதர்கள் கதற, பீர் பாட்டில்களோடு வந்து ரகளை பண்ணி, 'மகாத்மா காந்திக்கு ஜே’ சொன்னார்கள், சொக்கத் தங்கத்தின் சொக்கட்டான் காய்கள். 'மானாட, மச்சி மயிலாப்பூர் ஆட ஒரு பக்கம் நடந்தால், இன்னொரு பக்கம் கிழிஞ்சது கிருஷ்ணகிரி. அந்தத் தொகுதிக்கு தங்கபாலு ஒரு வேட்பாளரை அறிவிக்க, 'கேன்டிடேட்டை’ மாத்து என்று கிளம்பியது கதர் கோஷ்டி. மயிலாப்பூரில் ஜெயந்தி தங்கபாலுவின் வேட்புமனு ரிஜெக்ட் ஆக, அப்போதுதான் தெரிந்தது அங்கே டம்மி வேட்பாளராக தங்கபாலுவே மனுத் தாக்கல் செய்த ரகசியம். இப்போது மயிலாப்பூரில் தங்கபாலுவின் காலை வாரக் காத்து இருக்கிறார்கள் கராத்தே கதராளிகள்!

ஜாலிடிக்ஸ்!

கார்த்திக்: எலெக்ஷன் டைமை காமெடி டைம் ஆக்கியதில் ஏராளமான பங்கு உண்டு கார்த்திக்குக்கு. அம்மா கூட்டணியில் அதிகாரபூர்வமாக முதலில் அறிவிக்கப்பட்டது கார்த்திக் கட்சிதான். ஆனால், எல்லாக் கட்சிகளுக்கும் சுண்டல், பொரி, அவல் கொடுக்கப்பட, கடைசி வரை கார்த்திக்குக்குக் கதவு திறக்கப்படவே இல்லை. கூலிங் கிளாஸுக்குப் பின்னால் கண்கள் சிவப்பாக, 'தனியாக நிற்கிறோம்’ என்று தாறுமாறு ஹ்யூமர் கூட்டினார். 'ஹேய்! டொகுதி பட்டியல்’ என்று கார்த்திக் அறிவித்ததில், மூன்றில் ஒரு பங்குத் தொகுதிகள் ஏற்கெனவே எக்ஸ்பயரி ஆனவை. அடுத்த காமெடி வேட்பாளர் பட்டியல். ''கட்சியில இல்லாதவங்களும் அப்ளை பண்ணி கண்ணாமூச்சி ஆடிட்டாங்க. அதனாலதான் லேட் ஆயிடுச்சு'' என்று டிஃபரென்ட் காரணம் சொல்லித் திகிலைக் கூட்டினார். ஒருவழியாக கார்த்திக், வேட்பாளர் பட்டியலையும் அறிவித்து, அடுத்த வாரத்தில் ''ஸாரி, அதுல மூணு பேரு விலை போயிட்டாங்க. மூணு பேரை ரிஜெக்ட் பண்ணிட்டாங்க'' என்று 'முள்ளு முனையில மூணு குளம் வெட்டிவெச்சேன். அதுல ரெண்டு குளம் வத்திப்போச்சு, ஒரு குளத்துல தண்ணியே இல்ல’ என்று நாட்டுப்புறப் பாட்டை ரீ-மிக்ஸ் செய்தார். 'கடத்திட்டாங்க’ காமெடி எபிசோடுகளுக்கு அடுத்து, இப்போது போட்டி இடாத இடங்களில் வாலண்டரியாக தி.மு.க-வுக்குத் திடீர் ஆதரவு!

ஜாலிடிக்ஸ்!

விஜய டி.ராஜேந்தர்: ஆரம்பத்திலேயே பெர்ஃபாமென்ஸ் காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட தாடியார், கொஞ்சம் லேட். டி.ஆரின் காமெடி கவுன்ட் டவுன் இடத்துக்குப் பலத்த போட்டி இருந்ததால், மனிதர் பாவம், தானே டண்டணக்கா ஆகிப்போனார். போன முறை 'ஜோடி போட்டுப் பார்க்க லாமா... ஜோடி?’ என்று தில்லாலங்கடி டான்ஸ் போட்டு, திருச்சி மக்களைச் சிரிக்கவைத்த மன்சூரும் தனி மகசூலுக்குக் கிளம்பினார். 'ஜெயிச்சா, வீட்டுக்கு வீடு வாஷிங் மெஷின்’ என்று மன்சூர் காமெடி கல்லா கட்ட, வெள்ளாவி வெச்சு வெளுத்ததைப்போல ஆனார் டி.ஆர். ஏதோ அடுத்த தேர்தலில் சி.எம் ஆவதைப்போல, 'இந்தத் தேர்தல் எங்களுக்குக் கோடை விடுமுறை’ என்று எதுகை மோனை யில் ஓர் அறிக்கை விட்டுவிட்டு கப்சிப் ஆகிவிட்டார்!

ஜாலிடிக்ஸ்!

விஜயகாந்த்: வேனில் ஏறி விஜயகாந்த் ஆடும் பிரசார ஸ்னேக் டான்ஸ்கள், காரா பூந்தியும் இனிப்பு பூந்தியும் கலந்த கலகல காரசாரம். தே.மு.தி.க தொகுதிகளையும் சேர்த்து ஜெயலலிதா இஷ்டத்துக்கு லிஸ்ட் தட்ட, கடுப்பு எம்.ஜி.ஆர் ஆனார், கறுப்பு எம்.ஜி.ஆர். ஒருவழியாக கூட்டணி செட் ஆனாலும், மேடையில் தனிப் பிரசாரம்தான் என்று தனி ரூட் போட்ட விஜயகாந்த், மறந்தும் மருந்துக்குக்கூட ஜெயலலிதா பேர் சொல்லாமல், 'எம்.ஜி.ஆர் கட்சி, அதனாலதான் கையக் கோத்தோம்’ என்று ஊருக்கு ஊர் ஊறுகா விளக்கம் சொன்னார். 'போட்டுத் தாக்கேய்’ பிரசாரத்தின் உச்சகட்டம் தர்மபுரி. ஊருக்கு எல்லாம் புள்ளிவிவரத்தை அள்ளித் தெளிக்கிற விஜயகாந்த், வேட்பாளர் பெயரில் வில்லங்கம் கூட்டினார். பாஸ்கரன் என்ற பெயரை பாண்டியன் என்று பல்லாங்குழி ஆட, தப்பைத் திருத்திய வேட்பாளரைக் கும்மாங்குத்து குத்தினார். 'மைக் ரிப்பேரு, அவரு குனிஞ்சாரு, குப்புறப் படுத்தாரு, ஆனா அடிக்கலை’ என்கிற ரீதியில் விளக்கம் கொடுத்ததோடு விஜயகாந்த் நிறுத்தி இருந்தால் பரவாயில்லை. 'அப்படியே அடிச்சாத்தான் என்னய்யா? அவன் என் ஆளுதானே?’ என்று வாய்ஸ் கொடுத்ததில்தான் சனியன் சடுகுடு ஆடுகிறது. அரியலூரில் அ.தி.மு.க கொடியை இறக்கச் சொன்னதிலும், இறங்கி ஏறிக் கிறங்கி விளையாடுகிறது கேப்டனின் இமேஜ்!

ஜாலிடிக்ஸ்!

சரத்குமார்: எல்லோரும் ஒருநாள் முதல்வர் என்றால், சரத்குமார் மட்டும் ஒருநாள் தலைவர். ஐந்து வருடங்கள் தி.மு.க மீது விமர்சனமே வைக்காத நாட்டாமை, திடீர் என்று 'அம்மான்னா சும்மா இல்லடா’ என்று அலேக் அடித்தார். 'தேர்தலுக்குப் பிறகு கட்சிப் பெயரை மாற்றுவோம்’ என்று சிக்குபுக்கு கிச்சுகிச்சு ரயில் ஓட்டினார். நாடார் கூட்டமைப்பு ஒன்று சேர்ந்து நாட்டாமையைத் தலைவர் ஆக்கி, 'பெருந்தலைவர் மக்கள் கட்சி’ என்று புதுசாக ஒரு கட்சி கம்பெனி தொடங்கிக் களத்தில் குதிக்கக் கச்சை கட்டினார்கள். ஆனால், எல்லோருக்கும் இனிமா கொடுத்துவிட்டு, 'மாயி அண்ணன் வந்திருக்காக, மச்சான் மொக்கைச்சாமி வந்திருக்காக...’ என்று கூவிக் கூவித் தனியாகவே ஜெ-விடம் ரெண்டு சீட்டு வாங்கி வந்தார் சரத். 'சொல்லவேயில்ல?’ என்று கோபப்பட்டுக் கொதித்த பெருந்தலைவர் பெரியப்ஸ்கள், பொதுக் குழு கூடி நாட்டாமையையே மாத்தினார்கள். இப்போது கருப்பசாமி பாண்டியனிடம் தென்காசியில் தில்லாலங்கடி கபடி ஆடும் சரத், போகிற இடத்தில் எல்லாம் இங்கிலிபீஸில் பிரசாரம் செய்வது எக்கச்சக்கக் காமெடி!

ஜாலிடிக்ஸ்!

அ.தி.மு.க மூவர் குழு: அம்மா கட்சியின் த்ரீ இடியட்ஸ். எல்லா கட்சிகளோடும் இவங்கதான் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று சொல்லப்பட்டது. ஆனால், பேச்சுவார்த்தையில் முறுக்கு சாப்பிடுவதா, முந்திரிப் பருப்பு சாப்பிடுவதா என்பதைத்தான் இவர்கள் முடிவு செய்ய முடியுமே தவிர, ஃபைனல் ரிசல்ட் போயஸ் கார்டன்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த சங்கதிதான். 'ஓரோண் ஒண்ணு, ஈரோண் ரெண்டு’ என்று வைகோவோடு இவர்கள் நடத்திய பேச்சுவார்த்தைகள் ரணகளக் காமெடி. 17 முறை கொங்கு முன்னேற்றக் கழகத்தோடு மூவர் குழு பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், 18-வது பேச்சுவார்த்தையை கொ.மு.க நடத்தியது தி.மு.க-வுடன். ஆக, உளவுத் துறை அளவுக்கு இவர்கள் வொர்த் கிடையாது என்பது தெரிந்திருக்குமே! பண்ருட்டி ராமச்சந்திரனுடன் பலீஞ் சடுகுடு, பல்லாங்குழி ஆடி... விடிய விடிய விளக்கு எரியவிட்டது ஒரு சாதனை தான்!

ஜாலிடிக்ஸ்!

கருணாநிதி: கை, கையை உதற, சுயமரியாதை சூனா பானா ஆனார் மு.கருணாநிதி. தி.மு.க மத்திய மந்திரிகளும் சட்டைப் பையில் ராஜினாமாக் கடிதத்தோடு டெல்லி ஃப்ளைட் ஏறினார்களே தவிர, கடைசி வரை கடுதாசியை எடுக்கவே இல்லை. ராஜினாமாவையே ராஜினாமா செய்து, கடைசியில் நாயன்மார் கதை சொல்லி, நாக்கமுக்க கூட்டணிப் பாட்டுப் பாடினார் கருணாநிதி. கல்யாணப் பத்திரிகை வைக்க வந்த ராமதாஸுக்கு, 31 தொகுதிகள் கொடுத்து, முக்காபுக்கலா சந்தோஷத்தில் திக்குமுக்காடவைத்த மு.க, பின் அதிலே ஒண்ணைப் பிடுங்கி, கைக்குக் கொடுத்தார். செம்மொழிப் பூங்கா திறக்க மன்மோகனைக் கூப்பிட்டாக, சட்டமன்றக் கட்டடம் திறக்க சோனியாவைக் கூப்பிட்டாக என்று சென்னை யைச் சுத்திச் சுத்தி வந்த கருணாநிதியின் கவனம், திருவாரூர் பக்கம் திரும்பியதுதான் டமாஷ் டப்பாசு. இலவச மிக்ஸி, இல்லாட்டி கிரைண்டர், லேப்டாப் என்று ஃப்ரீ... ஃப்ரீ தேர்தல் அறிக்கைவிட்ட கருணாநிதி, இப்போது கூட்டங்களில் அதைப்பற்றி அதிகம் பேசுவது இல்லை. காரணம், அப்படிச் சொன்னால்... அம்மாவின் தேர்தல் அறிக்கையும் ஞாபகம் வரும் என்பதுதான்!

ஜாலிடிக்ஸ்!

ஜெயலலிதா: வழக்கம்போல சொல்லி அடிக்காத கில்லி. கூட்டணிக் கட்சித் தலைவர்களைக் குடைராட்டினம், ரங்கராட்டினம், கண்ணாமூச்சு, ஐஸ்பால் என்று ஆடவிட்டு, உள்ளூர் ஒலிம்பிக் நடத்தினார். வைகோவைக் கூட்டணியில் இருந்து வெளியேற்றிவிட்டு, 'அன்புச் சகோதரி’ கடிதம் எழுதியது கவுண்டமணி நடித்த கன்னாபின்னா பாச மலர் படம். கருணாநிதி இலவசக் கடை விரித்தால், அதற்கு எதிரிலேயே ஜெராக்ஸ் கடை திறந்து, தேர்தல் அறிக்கை தந்தார் ஜெ. 'மிக்ஸி இல்லாட்டி கிரைண்டர்’ என்கிற தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையைத் திருப்பிப் போட்டு 'மிக்ஸியும் உண்டு, கிரைண்டரும் உண்டு, ஃபேனும் உண்டு’ என்று எக்கச்சக்க இலவசத்தை அள்ளித் தெளித்தார். கூட்டணிக் கட்சித் தலைவர் களோடு ஒரே ஒரு கூட்டுக் கூட்டம்கூடப் போடாதவர், லிஃப்ட் வைத்த பிரசார வேனில் கிளம்பினார். 'ஜெயலலிதாவைப் பார்க்க வருகிற கூட்டத்தைவிட, அவரை ஏற்றி இறக்கும் லிஃப்ட் கூண்டைப் பார்க்க வருகிற கூட்டம்தான் அதிகம்!

ஜாலிடிக்ஸ்!

ராமதாஸ் - திருமாவளவன்: தி.மு.க கூட்டணியில் சங்கமித்த சங்கி - மங்கி. 'முதல்முறையாக ஒரே கூட்டணியில் இருக்கோம்’ என்று மூச்சுத்திணற முஸ்தபா முஸ்தபா பாடி மகிழ்கிறார்கள் டாக்டரும் சிறுத்தையும். கருணாநிதி ஆட்சிக்கு மார்க் போட்டதை மறந்துவிட்டு, மருத்துவர் ஐயா குளுகுளு க்ளூகோஸ் கொடுக்கிறார். திருமாவோ 'பத்து தொகுதிதான் பத்தாதுதான், ஆனாலும் கூட்டணி கோந்து போயிடக் கூடாதுல்ல’ என்று காரணம் சொல்கிறார். திருமா 10 தொகுதிக்கு வேட்பாளர்கள் அறிவித்தால், 10 தொகுதிகளுக்கும் போட்டி வேட்பாளர்களை அறிவித்து, வேர்க்கவைத்தன சிறுத்தைக் குட்டிகள். ஒரு வழியாக சமாதானம், சமாளிப்பு என்று திருமா உருமா கட்டி இறங்கி இருக்கிறார். ஆனால், இருவரும் அவ்வப்போது, 'ஆட்சியில பங்கு கேட்க மாட்டோம், கேட்க மாட்டோம்’ என்று காற்றில் அடித்துக் கரணம் போட்டுச் சத்தியம் செய்வது... சத்தியமா காமெடிங்க!

ஜாலிடிக்ஸ்!

தா.பாண்டியன்: தா.பாண்டியன் இந்தத் தேர்தலில் தாறுமாறு பாண்டியன். முதலில் ஜெயலலிதா கொடுத்த அதிர்ச்சி அடி யில் ஆத்திரம் ஆனவர், விஜயகாந்த்தைப் பார்த்து வீராப்பு அழைப்பு விடுத்தார். ஒருவழியாக, இலையின் நிழலிலேயே இளைப்பாற, சில நாட்களிலேயே கிலியைக் கிளப்பியது தளி. கிருஷ்ணகிரி மாவட்டம் தளி தொகுதிக்கு ராமச்சந்திரன்தான் வேட்பாளர் என்று தா.பா அறிவிக்க, உள்ளூர் தாப்பா எகிறியது. 'வேட்பாளர்களை நியமிக்க தா.பாண்டியன் 50 லட்சம் வாங்கினார்’ என்று உள்ளூர் மாவட்டச் செயலாளர் ஊழல் குற்றச்சாட்டைக் கிளப்பி, உலையைக் கொளுத்தினார். உண்டியலைக் குலுக்கும் தோழர்களை ஊழல் குற்றச்சாட்டு குலுக்கியது. காம்ரேட்கள் மீது இதுவரை பாயாத கரெப்ஷன் குற்றச்சாட்டு சிவப்பு வட்டாரத்தைச் சின்னாபின்னமாக்கிச் சிவக்கவைத்தது. கடைசியாக, மாவட்டச் செயலாளருக்குக் கல்தா கொடுத்தார் காம்ரேட் பாண்டியன்!